பதிவு செய்த நாள்
28
செப்
2017
01:09
திருத்தணி: திருத்தணி அரசு கலைக் கல்லுாரி வளாகத்தில், 3,000 ஆண்டுகளுக்கு முன், முதுமக்கள் பயன்படுத்திய ஈமத்தாழிகளின் மேல் விளிம்புகள் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். திருத்தணி அரசினர் கலைக் கல்லுாரி வரலாற்று துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர் கணபதி முருகன் ஆகியோர், கல்லுாரி வளாகத்தில் முதுமக்கள் பயன்படுத்திய ஈமத்தாழிகள் மேல் விளிம்பு பகுதிகள் மூன்று இருந்ததை கண்டுபிடித்தனர்.
கல்லுாரி முதல்வர் அ.கலைநேசன், தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, பூண்டி தொல் பழங்கால அகழ்வைப்பக காப்பாட்சியர் லோகநாதன், கல்லுாரிக்கு நேற்று சென்று, பொருட்களை ஆய்வு செய்தார். காப்பாட்சியர் லோகநாதன் கூறியதாவது:ஈமத்தாழிகள், தமிழகத்தின் பல பகுதிகளில் கிடைத்தாலும், தற்போது, திருத்தணி அரசு கல்லுாரியில் கிடைத்துள்ளது தனித்சிறப்பு. அரிக்கமேடு, ஆதிச்சநல்லுார் போன்ற இடங்களில் பெரும் பரப்பளவில் இவ்வகையான ஈமச் சின்னங்கள், பல அகழாய்வின் மூலம் வரலாற்று உலகிற்கு எடுத்துகாட்டாக விளங்குகின்றன. முதுமக்கள் தாழி என்பது, சுடுமண்ணால் செய்யப்பட்ட பெரும்பானை வடிவிலான அமைப்பாகும். நம் குடியில் சிறந்த தலைவனுக்கும், அவரை சார்ந்த நபர்களுக்கும் வைக்கப்படுவது மரபாகும்.
மரபு பெருங்கற்காலம் கி.மு., 3,000 முதல், கி.மு., 300 வரையிலான காலகட்டத்திற்கு முன்பிருந்தே ஏற்படுத்திய அமைப்பாகும்.சங்க இலக்கிய நுாலில், இடுவோர் சுடுவோர் தாழியில் அடைப்போர் என, செய்யுளும் உள்ளது. ஈமத்தாழியில் இறந்தவர்களை அடக்கம் செய்து, அவர்கள் பயன்படுத்திய கருவிகள் மற்றும் அவர்களுக்கு பிடித்தமான உணவுப்பொருட்களை தாழிக்குள் வைத்து புதைப்பது. இதை, இன்று வரை, நம் வாழ்நாளில் கடைபிடிக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.