பதிவு செய்த நாள்
25
அக்
2017
12:10
சென்னிமலை: சென்னிமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா ஐந்தாம் நாளான நேற்று, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்றிரவு சூரசம்ஹாரம் நடக்கிறது. கந்த சஷ்டி விழா, சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 20ல் தொடங்கியது. ஐந்தாம் நாளான நேற்றும், காலையில் யாகபூஜை, ஹோமங்கள், பூர்ணாகுதி நடந்தது. அதை தொடர்ந்து, 108 வகையான திரவியங்களுடன் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம், சிறப்பு ஹோமம் நடந்த பிறகு, சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று மாலை, 5:00 மணிக்கு மேல் மலை கோவிலில் இருந்து, படிக்கட்டுகள் வழியாக, உற்சவ மூர்த்திகள், அடிவாரத்துக்கு கொண்டு செல்லப்படும். அதைத் தொடர்ந்து, இரவு, 8:00 மணிக்கு மேல், நான்கு ராஜ வீதிகளிலும், சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கும். மேற்கு ரத வீதியில் ஜெகமகாசூரன் வதம், வடக்கு ரத வீதியில் சிங்கமுகசூரன் வதம், கிழக்கு ரத வீதியில் வானுகோபன் வதம், இறுதியாக தெற்கு வீதியில் சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.