பதிவு செய்த நாள்
26
அக்
2017
01:10
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று கந்த சஷ்டி சூர
சம்ஹார லீலை நடந்தது. இன்று காலை 8:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
கோயிலில் அக்.,20 முதல் நடந்த யாகசாலை பூஜைகள் நேற்று காலை பூர்த்தியானது.
தங்கம், வெள்ளி குடங்களில் இருந்த புனித நீர், சண்முகர், வள்ளி,
தெய்வானைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சண்முகார்ச்சனை, உச்சி காலை பூஜை
முடிந்து, உற்சவர் சுவாமி தங்க மயில் வாகனத்திலும், வீரபாகு தேவர் வெள்ளை
குதிரை வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நடந்தது. இதைதொடர்ந்து வேலுடன்
சூரனை சுவாமி எட்டு திக்குகளிலும் விரட்டிச் சென்று சம்ஹாரம் செய்யும்
நிகழ்ச்சி நடந்தது. பின்பு சொக்கநாதர் கோயில் முன்பு சுவாமி
எழுந்தருளினார். அங்கு சூரசம்ஹார புராண கதையை பக்தர்களுக்கு சிவாச்சாரியார்
கூறினார். உற்சவர் சன்னதியில் சுவாமி, தெய்வானைக்கு மாலை மாற்றி,
தீபாராதனை முடிந்து, பூ சப்பரத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. திருவிழாவின்
உச்ச நிகழ்ச்சியாக இன்று காலை சட்டத் தேரில் சுவாமி, தெய்வானை
எழுந்தருளுவர். கோயிலில் ஆறு நாட்களாக தங்கி விரதமிருந்த பக்தர்கள், தேரின்
வடம் பிடித்து இழுக்க கிரிவீதி, ரத வீதிகளில் தேரோட்டம் நடக்கும். மாலை
மூலவர் சுவாமி முன்பு தயிர் சாதம் படைக்கப்பட்டு, பாவாடை நைவேதன தரிசனம்
நடக்கிறது. விழாக்காலங்களில் தெய்வானையுடன் வலம் வரும் சுவாமி, தனியாக
புறப்பாடாவது சூரசம்ஹாரத்திற்காக மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.