பதிவு செய்த நாள்
16
நவ
2017
01:11
காளையார்கோவில், கொல்லங்குடி கோயில் அருகே நிழற்குடை வசதியில்லாததால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் வெயிலுக்கும், மழைக்கும் ஒதுங்கி நிற்க இடமின்றி அவதிப்படுகின்றனர். காளையார்கோவில் - சிவகங்கை இடையே உள்ள முக்கிய கிராமம் கொல்லங்குடி. இங்கு பிரசித்தி பெற்ற வெட்டுடையார் காளிகோவில் உள்ளது. இக்கோயிலுக்கு செல்வாய், வெள்ளிக்கிழமைகளில் மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும், சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை போன்ற வெளியூர்களில் இருந்தும் 1000 க்கும் அதிகமான பக்தர்கள் வந்திருந்து, நேர்த்திக்கடன் செலுத்தி விட்டு செல்கின்றனர்.
மற்ற நாட்களில் 100 க்கும் அதிகமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வந்து செல்கின்றனர். கொல்லங்குடியை சுற்றிலும் 40 க்கும் அதிகமான சிறு, சிற கிராமங்கள் உள்ளன. மதுரையில் இருந்து தொண்டி செல்லும் அரசு புறநகர் மற்றும் தனியார் பஸ்கள் சிவகங்கைக்கு பிறகு பெரிய ஊராட்சியான கொல்லங்குடியிலும், காளையார்கோவிலிலும் மட்டுமே நின்று செல்லும். இதனால் சிவகங்கை, மதுரையில் இருந்து பஸ்களில் வரும் கிராமமக்கள் கொல்லங்குடியில் இறங்கி, அருகில் உள்ள அழகாபுரி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் டவுன் பஸ்களுக்குகாத்து நிற்க வேண்டியுள்ளது. ஆனால், கொல்லங்குடி கோயில் அருகே பஸ் ஸ்டாப்போ, பயணிகள் அமருவதற்கு நிழற்குடை வசதியோ இல்லை. இதனால், மழையிலும், வெயிலிலும், பயணிகளும், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளும் அவதிப்படும் நிலை உள்ளது. பெண்கள் கோயிலின் நுழைவு பகுதியில் உள்ள ஆர்ச்சை ஒட்டியுள்ள கடைகளின் முன் உள்ள தாழ்வாரத்தின் நிழலில் ஒடுங்கியபடி நிற்க வேண்டியுள்ளது. கொல்லங்குடி கோயில் அருகே பஸ் ஸ்டாப் நிழற்குடை வசதி ஏற்படுத்த வேண்டும் என வெளியூர்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.