பதிவு செய்த நாள்
24
நவ
2017
12:11
சென்னை : அறநிலையத்துறையின் தொடர் அலட்சியத்தால், 200 ஆண்டுகள் பழமையான, சூளை, சிதம்பரேஸ்வரர் கோவில், இடிந்து விழும் நிலையில், பரிதாபமாக காணப்படுகிறது. இந்த கோவிலை புதுப்பித்து, விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.சென்னை சூளையில், இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது.
சிதம்பரம், நடராஜர் கோவில் போலவே, சென்னையில் ஆகாயத் தலமாக, 200 ஆண்டுகளுக்கு முன், இந்த கோவில் கட்டப்பட்டது.சிதம்பரம் நடராஜர் கோவிலில் செய்யப்படுவது போலவே, இந்த கோவிலிலும் ஸ்படிக லிங்கத்திற்கு பூஜை செய்யப்படுகிறது.அங்கு போலவே பிரம்மோற்சவம் மற்றும் ஆனி திருமஞ்சனம், இந்த கோவிலில் விஷேசம்.இது மட்டுமின்றி, அங்கு போலவே இந்த கோவிலிலும், ஆண்டிற்கு ஆறு முறை தான் அபிஷேகம் நடக்கிறது. இந்த கோவிலில் மூலவரும், உற்சவரும் ஒருவரே ஆவர்.சிதம்பரத்தில் உள்ளது போல், நடராஜரும், தில்லை கோவிந்தராஜ பெருமாளும் ஒரே கோவிலில் உள்ளனர். சிதம்பரம் செல்ல முடியாத பக்தர்கள், இந்த கோவிலுக்கு வந்து வணங்கி செல்வர்.ஆகம விதிப்படி, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். ஆனால், இந்த கோவிலில், 1986ம் ஆண்டிற்கு பிறகு, கடந்த 32 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை.கோவிலின் ராஜ கோபுரம், நவக்கிரக மண்டபம், கோவில் முகப்பு, கோவிலின் பிரதான மண்டபம், கோவிலில் உள்ள எட்டு கல் துாண்கள் ஆகியவை சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன.மடப்பள்ளி மற்றும் பொருட்கள் வைக்கும் அறை முழுவதும், இடிந்து விழுந்துள்ளதால், சாமிக்கு படைக்கப்படும் பிரசாதம், கோவிந்தராஜ பெருமாள் சன்னதி முன், சமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இந்த கோவிலை சீரமைக்க, அனைத்து செலவுகளையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்; அனுமதி தாருங்கள் என அறநிலையத்துறை செயல் அதிகாரியிடம், கடந்த, 2004ம் ஆண்டில் இருந்து, பக்தர்கள் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர்.இதுவரை இந்த கோவிலுக்கு, நான்கு செயல் அதிகாரிகள் மாறிவிட்டனரே தவிர, கோவிலை சீரமைப்பதற்கான அனுமதி மட்டும் வழங்கப்படவில்லை.சென்னையின், ஆகாயதலமான, நடராஜர் கோவில் இடிந்து விழுவதற்கு முன், பழமை மாறாமல் புதுப்பித்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர். - நமது நிருபர் -