பதிவு செய்த நாள்
25
நவ
2017
01:11
திருத்தணி : குமார சஷ்டி விழாவையொட்டி, நேற்று, திருத்தணி முருகன் கோவிலில், சிறப்பு அபிஷேகம் நடந்தது. திருத்தணி, முருகன் கோவிலில், மாதந்தோறும், வளர்பிறை சஷ்டி விழா, வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், கார்த்திகை மாதத்தில் வரும், வளர்பிறை சஷ்டி, குமார சஷ்டியாக கொண்டாடப்படுகிறது.நேற்று, குமார சஷ்டி விழாவை ஒட்டி, காலை, 9:00 மணிக்கு, மூலவர் மற்றும் உற்சவர் சண்முகப்பெருமானுக்கு பால், பன்னீர், விபூதி... இளநீர் மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால், சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்கவேல், தங்ககீரிடம், வைர ஆபரணங்கள் மற்றும் வண்ண மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.காலை, 10:30 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமானுக்கு, திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
முருகன் காலண்டர் வெளியீடு: திருத்தணி முருகன் கோவில் சார்பில், ஆண்டுதோறும், முருகன் காலண்டர் அச்சடிக்கப்பட்டு, குறைந்த கட்டணத்தில் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதை, பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்வர். வரும், 2018ம் ஆண்டிற்கான காலண்டர், நேற்று மலைக்கோவிலில், வெளியீடு செய்யப்பட்டது.கோவில் தக்கார், ஜெய்சங்கர், இணை ஆணையர், சிவாஜி ஆகியோர், காலண்டர் விற்பனையை துவக்கி வைத்தனர். ஒரு காலண்டரின் விலை, 20 ரூபாய். 2017ம் ஆண்டு, ஒரு லட்சம் காலண்டர் விற்பனை செய்யப்பட்டது.தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில், முருகன் காலண்டர், மலைக்கோவிலில் கிடைக்கிறது.