மேல் சாந்தி: சபரி யாத்திரை செல்பவர்கள் பலரும் மலையில் மேல்சாந்தி என்பவரை தரிசித்து ஆசி பெறுவர். யார் இந்த மேல்சாந்தி? அவருக்கு என்ன மகிமை? ஏன் அவரை எல்லாரும் வணங்கி ஆசி பெறுகிறார்கள்? அவர்தான் கோயிலின் தலைமைப் பொறுப்பில் இருந்து பணி ஆற்றுகிறார். நிர்வாகப் பொறுப்பு முதல் பூஜைகளைத் தொடங்கி வைக்கும் அதிகாரம் வரை அனைத்தும் நிரம்பப் பெற்றவர். கோயிலைத் திறந்து வைக்கும் அதிகாரமும், நடை அடைத்து கோயிலை மூடி வைக்கும் அதிகாரமும் அவருக்கு உண்டு. பக்தர்கள் ஐயப்பனுக்கு நிகராக மேல் சாந்தியையும் தந்திரியையும் வணங்கி ஆசி பெறுவர்.
வேதங்கள், தாந்திரீகம், சாஸ்திரங்கள் எல்லாம் கற்று மற்ற கோயில்களில் மேல்சாந்தியாக அனுபவம் பெற்றவர்கள் மட்டுமே சபரியில் மேல்சாந்தியாக வர முடியும். இந்த பதவியின் காலம் ஒரு வருடம் வருடா வருடம் தகுதி உள்ளவர்களின் விண்ணபங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத் தேர்வு நடைபெறும். தேர்வானவர்களில் இருந்து மேல்சாந்தி ஐயப்பன் சன்னதியில் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒரு குடுவையில் தேர்வானோர் பெயர்கள் எழுதிய சீட்டுகள் போடப்படும். மற்றொரு குடுவையில் சீட்டுகளில் ஒரு சீட்டு மட்டும் மேல்சாந்தி என்று எழுதி இருக்கும். சிறப்பு பூஜைகள் முடிந்து ஒரு குழுந்தை இரண்டு குடுவையில் இருந்தும் ஒவ்வொரு சீட்டாக எடுக்க, யார் பெயர் ‘மேல்சாந்தி ’ என்ற சீட்டோடு சேர்ந்து வருகிறதோ அவரே மேல்சாந்தி தேர்ந்தெடுக்கப்படும் மேல்சாந்தி சபரிமலையிலேயே வருடம் முழுவதும் தங்கி இருக்க வேண்டும்.ஒருவர், தம் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே சபரி மலை ஐயப்பன் கோயில் மேல்சாந்தியாக ஆக முடியும்.