பதிவு செய்த நாள்
27
நவ
2017
03:11
சபரிமலையில் ஐயப்பனுக்கு அரவணைப் பாயசம், அப்பம் போன்ற பிரசாதங்கள் நிவேதிக்கப்படுவது. எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அங்கே செய்யப்படும் தனிச்சிறப்பான பிரசாதம் பானகம். பானகம் பிரசாதம் அபூர்வமாக வெகு சிலருக்கே கிடைத்திருக்கும். அவர்கள் அந்த கெட்டியான பானகத்தை மறக்க முடியாது.
அந்தப் பானகம் எப்படித் தயாரிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வோம்! 5 லிட்டர் தூய நீரில் 1 1/2 கிலோ நல்ல வெல்லம், 200 கிராம் சுக்குப் பொடி, 200 கிராம் மிளகு பொடி, 200 கிராம் சீரகப்பொடி, சிறிது ஏலக்காய்ப் பொடி ஆகியவற்றை நன்கு கரைத்து கொதிக்க வைக்கிறார்கள். நீர் வற்றி 5 லிட்டர் 2 1/2 லிட்டருக்கு வந்ததும் இறங்கி ஆறவைத்து அதில் பாதி எலுமிச்சம் பழம் பிழிகிறார்கள். இதுவே சபரிமலை ஐயப்பனுக்குப் படைக்கப்படுகிறது. பக்தர்கள் நடத்தும் ஐயப்பன் பூஜைகளில்கூட இந்தப் பானகம் செய்து நிவேதிப்பது மிகமிக விசேஷமானது. ஐயப்பனுக்கு மிகவும் பிடித்தமானது அரவணையும், அப்பமும்தான். சபரிமலை சென்று வரும் பக்தர்கள் கண்டிப்பாக அந்த பிரசாதங்களை வாங்கி வருவார்கள். இது மட்டுமல்லாமல் சபரிமலையில் பாயசம் வைத்தல், வெள்ளை நைவேத்யம், திரிமதுரம், பஞ்சாமிர்தம், எள் உருண்டை, கதலிப்பழம், பானகம், இளநீர் ஆகியவையும் நைவேத்யம் செய்யப்படுகிறது.