பதிவு செய்த நாள்
28
நவ
2017
01:11
அந்தியூர்: பட்லூர் வாகீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 24 ஏக்கர் நிலம் பல ஆண்டுகளுக்குப் பின், ஒருவழியாக நேற்று மீட்கப்பட்டது.
அந்தியூரை அடுத்த பட்லூரில் வாகீஸ்வரர், சென்றாயப்பெருமாள் மற்றும் கரியகாளியம்மன் கோவில்கள் உள்ளன. இவை, 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. கடந்த, 2008 முதல், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலுக்கு, 60 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவை தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, பட்டா மாறுதலும் செய்யப்பட்டிருந்தது. இவை, 2013ல் கோவில் பெயரில் பட்டா மாறுதல் செய்யப்பட்டது. அறநிலைய, வருவாய் துறை அதிகாரிகள், நிலங்களை அளந்து குத்தகைக்கு விட்டனர். ஆனால், சாகுபடி செய்தவர்கள், முறையாக குத்தகை செலுத்தவில்லை. இதனால் அவர்கள் மீது, 2014ல் வழக்கு தொடரப்பட்டது. அவர்களை வெளியேற்றி நிலத்தை மீட்க, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கடந்த, 2017ல் ஏழு பேர், 14.52 ஏக்கர் நிலத்தை ஒப்படைத்தனர். மீதி, 15 பேர் நிலத்தை ஒப்படைக்கவில்லை. இந்நிலையில் அறநிலையத்துறை உதவி ஆணையர் முருகையா தலைமையில், அந்தியூர் தாசில்தார் செல்லையா முன்னிலையில், கோவில் நிலம் மீட்கும் பணி நேற்று நடந்தது. இதில், 24 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. ஆன்மிகம் ஆதிக்கம் செலுத்தினாலும், ஆண்டவனுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பிறர் அனுபவத்தில், பாடம் பெறாமல், சொந்த அனுபவத்தில் பாடம் பெறவே, பெரும்பாலானோர் விரும்புகின்றனரே?