பதிவு செய்த நாள்
29
நவ
2017
11:11
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கோவிலுக்கு வரும் வெளி மாநில பக்தர்கள், சமையல் செய்து சாப்பிட போதிய இட வசதி இல்லாததால், மிகவும் அவதிப்படுகின்றனர். காஞ்சிபுரத்தில், காமாட்சி அம்மன், ஏகாம்பரநாதர், வரதராஜ பெருமாள் ஆகிய கோவில்கள் உள்ளன. இங்கு, வெளி மாநிலம், பிற மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள், ஏராளமாக வருகின்றனர். இந்நிலையில், சபரிமலை சீசன் துவங்கியுள்ளதால், வட மாநில பக்தர்கள் பலர், காஞ்சிபுரத்திற்கு அதிகம் வருகின்றனர். வாகனங்களை, கோவில் பகுதியில் நிறுத்துகின்றனர். சமைத்து சாப்பிட இட வசதியில்லாததால், திறந்த வெளியில் சமைக்கின்றனர். மீதமாகும் உணவுகள் மற்றும் குப்பை கழிவுகளை, கால்வாயில் கொட்டுகின்றனர். இதனால், கடும் துர்நாற்றம் ஏற்பட்டு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.வெளி மாநில பக்தர்கள் தங்கி, சமைத்து சாப்பிட, போதுமான இடவசதியை நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி தர வேண்டும் என, கோரிக்கை எழுந்துஉள்ளது.