பதிவு செய்த நாள்
29
நவ
2017
11:11
திருத்தணி:முருகன் கோவிலின் துணை கோவில்களான, பாவாடை விநாயகர் மற்றும் சஹஸ் ரீஸ்வரர் கோவில்களின் கும்பாபிஷேக விழா, நாளை நடைபெறுகிறது. திருத்தணி முருகன் கோவிலின், துணை கோவில்களான, பாவாடை விநாயகர் கோவில் மற்றும் சஹஸ் ரீஸ்வரர் கோவில்களில் திருப்பணிகள் நடந்து முடிந்து, நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கான, கணபதி ஹோமத்துடன் நேற்று, விழா ஏற்பாடு துவங்கியது. இதற்காக, இரண்டு கோவில் வளாகத்தில், தலா, ஒரு யாகசாலை, 108 கலசங்கள் வைத்து, பூஜைகள் துவங்கப்பட்டன. விழாவை, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
காலை, 9:00 மணிக்கு கணபதி, நவக்கிரக ஹோமம், கோ பூஜை, தன பூஜை பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தன. மாலை, 6:00 மணிக்கு, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் கும்ப அலங்காரம் கலாகர்ஷனம், யாகசாலை பிரவேசம் யாகபூஜை, அதிவாச யாகம் பூர்ணாஹூதி தீபாராதனை மற்றும் முதல் கால பூஜைகள் நடந்தது. இன்று காலை, இரண்டாம் கால பூஜையும்; மாலையில், மூன்றாம் கால பூஜைகளும் நடைபெறுகிறது. நாளை காலை, 6:00 மணிக்கு, நான்காம் கால பூஜையும்; காலை, 9:30 மணி முதல், காலை, 10:00 மணிக்குள், விமான கோபுரத்தின் மீது, புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. தொடர்ந்து, நண்பகல், 11:30 மணிக்கு, மூலவருக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.