பதிவு செய்த நாள்
29
நவ
2017
01:11
காரைக்கால் : காரைக்கால் திருநள்ளார் சனி பகவான் கோவிலில், சனிப்பெயர்ச்சி விழா குறித்து அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது. திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், வரும் டிச.,19ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது.பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து, காமராஜர் நிர்வாக வளாகத்தில், அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக ரூ.500 மற்றும் ரூ.200 டிக்கட் அச்சடிக்கப்படும். கோவிலில் உள்ளே அதிக வெப்பத்தை தடுப்பதற்காக ஏசி வசதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தேவையான இடங்களில் சி.சி.டி.வி.,கேமராக்கள் அமைக்கப்படும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 50க்கு மேற்பட்ட பேட்டரி வாகனங்கள், ஏற்பாடு செய்யப்படும். பக்தர்களுக்கு முதல் உதவி சிகிச்சை, ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார். கூட்டத்தில் திருமுருகன் எம்.எல்.ஏ., கலெக்டர் கேசவன், கோவில் நிர்வாக அதிகாரி விக்ராந்த ராஜா, சீனியர் எஸ்.பி., சந்திரன், எஸ்.பி., மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனார்.