பதிவு செய்த நாள்
29
நவ
2017
01:11
ஆர்.கே.பேட்டை:விளக்கணாம்பூடி மேடு கிராமத்தில் அமைந்துள்ள, கமல விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், இன்று காலை நடைபெற உள்ளது. இதற்கான யாகசாலை பூஜை, நேற்று முன்தினம் துவங்கியது. ஆர்.கே.பேட்டை அடுத்த, விளக்கணாம்பூடி மேடு கிராமத்தில் அமைந்துள்ளது, கமல விநாயகர் கோவில். ஓராண்டு காலமாக, கோவில் புனரமைப்பு பணிகள் நடந்து வந்தன.பக்தர்கள் பங்களிப்புடன் நடந்து வந்த இப்பணிகள், நிறைவு பெற்றதை அடுத்து, இன்று காலை, கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதற்கான யாகசாலை பூஜை, நேற்று முன்தினம் துவங்கியது. திங்கட்கிழமை காலை, 10:00 மணிக்கு, கணபதி பூஜை நடத்தப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, வாஸ்து பூஜையும், அதை தொடர்ந்து, சண்முகானந்தா பஜனை குழுவினரின், பக்தி இசை கச்சேரியும் நடந்தது. நேற்று காலை, யாகசாலை பிரவேசம் நடந்தது. இன்று காலை, 9:30 மணிக்கு யாகசாலையில் இருந்து புனிதநீர் கலசங்கள் புறப்பாடு ஆகின்றன. 10:-00 மணிக்கு, கோவில் கோபுர கலசம், நவகிரகங்கள் மற்றும் மூலவருக்கு, கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. மாலை, 6:00 மணிக்கு, உற்சவர் பெருமான், வீதியுலா எழுந்தருளுகிறார். இதற்காக, பிரத்யேக உற்சவர் சிலை, கும்பகோணத்தில் இருந்து வாங்கி வரப்பட்டுள்ளது.