பதிவு செய்த நாள்
29
நவ
2017
12:11
பாகூர் : பாகூர் மூலநாதர் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, நாளை (30ம் தேதி) நடக்கிறது. பாகூரில் 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில், தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலும், புதுச்சேரி இந்து அறநிலையத் துறை பராமரிப்பிலும் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்தது. பணிகள் முடிவடைந்த நிலையில், நாளை (30ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. கடந்த 24ம் தேதி விக்னேஷ்வர பூஜை, கணபதி, லட்சுமி கோ பூஜை நடந்தன. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. நாளை கும்பாபிஷேகத்தையொட்டி, காலை 7.00 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 9.00 மணிக்கு கோவில் கோபுர விமானங்களுக்கும், காலை 9.45 மணிக்கு பரிவார சுவாமிகளுக்கும், 10.15 மணிக்கு மூலவர் மூலநாதர் சுவாமிக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. இரவு 8.00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை, அறங்காவலர் குழுவினர், கும்பாபிஷேக கமிட்டி, அர்ச்சகர்கள், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
உள்ளூர் விடுமுறை: விழாவையொட்டி, நாளை (30ம் தேதி) பாகூர், சேலியமேடு, அரங்கனுார், ஆதிங்கப்பட்டு, சோரியாங்குப்பம், குருவிநத்தம், மதிக்கிருஷ்ணாபுரம், கன்னியக்கோவில் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கு, உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை ஈடு செய்யும் வகையில், வரும் 9ம் தேதி சனிக்கிழமை, பள்ளிகள் இயங்கும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.