பதிவு செய்த நாள்
01
டிச
2017
12:12
சபரிமலை: சபரிமலை சன்னிதானத்தை துாய்மையாக பராமரிக்கும் பணியில், 300 தமிழக துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்; இவர்கள், சன்னி தானத்தை, ஒன்பது பிரிவுகளாக பிரித்து, பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற, சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதானத்தை, பத்தினம்திட்டா மாவட்ட கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள, சுகாதார சங்கத்தைச் சேர்ந்த குழு, பராமரித்து வருகிறது. சன்னிதானத்தை துாய்மையாக பராமரிக்கும் பணியை, இந்த குழு செய்து வருகிறது. மண்டல, மகர விளக்கு காலத்தில், இந்த பணிக்காக, தமிழகத்தின் சேலம், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வரவழைக்கப்படுகின்றனர். இவர்களுக்கான சம்பளம், இந்த சங்கத்தில் இருந்து கொடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு சன்னிதானம் துாய்மை பணியில், 300 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சன்னிதானம் கீழ் திருமுற்றம், அப்பாச்சிமேடு - மரக்கூட்டம் ரோடு, மரக்கூட்டம் - சரங்குத்தி ரோடு, நடைப்பந்தல், பஸ்மக்குளம், பாண்டித்தாவளம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் என, ஒன்பது பகுதிகளாக பிரிக்கப்பட்டு, துப்புரவு பணி நடக்கிறது. 24 மணி நேரமும் துப்புரவு பணி மேற்கொள்ளப்படுகிறது. சம்பளத்துக்காக மட்டுமின்றி, அய்யப்பனுக்கு சேவை செய்வதில் நல்ல திருப்தி கிடைப்பதாகவும், தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
பலத்த மழையால் பக்தர்கள் சிரமம் : சபரிமலையில் தற்போது, மண்டல கால பூஜை நடக்கிறது. நடை திறந்தது முதல், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த சீசனில், அவ்வளவாக மழை இல்லை. ஆனால், நேற்று முன்தினம் இரவு துவங்கிய மழை, நேற்று பகல் முழுவதும் நீடித்தது. மழை காரணமாக, பம்பையில் இருந்து அப்பாச்சிமேடு வரையிலான பாதை வழுக்கியதால், பக்தர்களால் மெதுவாகவே மலையேற முடிந்தது. இதனால், ஆன் - லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள், குறிப்பிட்ட நேரத்துக்கு வர முடியாமல் சிரமப்பட்டனர். சன்னிதானத்தில் தங்குவதற்கும், நிற்பதற்கும் கூட இடமில்லாமல் சிரமப்பட்டனர். மழையால், நேற்று கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
தமிழில் விலைப்பட்டியல்: ஓட்டல்களுக்கு உத்தரவு : சபரிமலை ஓட்டல்களில், பக்தர்கள் பேசும் மொழியை வைத்து, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை தடுக்கும் வகையில், ஓட்டல் உரிமையாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டு, உணவுப் பொருட்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, விலைப்பட்டியலும் வைக்க உத்தரவிடப்பட்டது.ஆனால், பல ஓட்டல்களில் விலைப்பட்டியல் வைக்கப்படவில்லை. சில கடைகளில், மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சன்னிதான பணி வருவாய் துறை அலுவலர், சந்தோஷ்குமார் ஆய்வு நடத்தினார்.அப்போது, பல கடைகளிலும் மலையாள போர்டுகள் மட்டுமே இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, எல்லா ஓட்டல்களிலும், ஆங்கிலம், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில், விலைப்பட்டியல் வைக்க, அவர் உத்தரவிட்டார்.