பதிவு செய்த நாள்
01
டிச
2017
12:12
திருவள்ளூர் : கார்த்திகை தீபத் திருவிழா நாளை கொண்டாடப்படுகிறது. இதற்காக, அகல் விளக்கு தயாரிக்கும் பணியில், மண்பாண்ட தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். கார்த்திகை தீப திருவிழா, நாளை கொண்டாடப்படுகிறது. அன்று முதல், தொடர்ந்து மூன்று நாட்கள், பொதுமக்கள் தங்கள் வீடுகளில், அகல் விளக்கில் தீபம் ஏற்றி, வழிபடுவர். திருவள்ளூர் மாவட்டத்தில், காக்களூர், கொசவன்பாளையம், ஊத்துக்கோட்டை, ஆரணி, கும்மிடிப்பூண்டி பகுதி களில், மண்பாண்ட தொழிலாளர்கள், இரவு, பகலாக அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். காக்களூர் ஏரிக்கரை அருகில், அகல் விளக்கும் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும், கே.ஆறுமுகம் கூறியதாவது: மீன் பாடி வண்டிகளில், 600 ரூபாய் கொடுத்து, ஏரியில் இருந்து மண் எடுத்து வந்து, அகல் விளக்கு தயாரிக்கிறோம். ஒரு லோடு மண்ணில், 5,000 விளக்குகள் தயாரிக்கலாம். வியாபாரிகள், முன்னரே ஆர்டர் கொடுத்து விடுகின்றனர். விளக்குகள் தயாரித்ததும், அவர்களே வந்து எடுத்துச் சென்று, பொதுமக்களிடம் சிறிய விளக்கு, இரண்டு ரூபாய் என, விற்பனை செய்கின்றனர். பெரிய அளவிலான விளக்குகளை, 50 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.