குண்டும், குழியுமான கம்பமெட்டு ரோட்டால்... சிரமத்தில் சபரிமலை பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01டிச 2017 12:12
கம்பம், கம்பமெட்டு ரோடு சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக இருப்பதால் வாகனங்களில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கார்த்திகை 1ல் மாலையணிந்து சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் செல்கின்றனர். டிசம்பர், ஜனவரியில் மண்டல பூஜை, மகரஜோதி காலங்களில் அவர்களது வாகனங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும். இந்த வாகனங்களால் குமுளி மலைப்பாதையில் பல மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், தமிழக- கேரள அதிகாரிகள் பேசி, குமுளி மலைப்பாதையை ஒருவழிப்பாதையாக அறிவித்துள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் முதல் கம்பமெட்டு ரோட்டில் சபரிமலை செல்லும் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளது. கோயிலில் இருந்து திரும்பி குமுளி வழியாக வர வேண்டும். கம்பத்திலிருந்து கம்பமெட்டுவரை 13 கி.மீ., துாரமாகும். அதில் மலைப்பாதை மட்டும் 8 கி.மீ., உள்ளது. இங்கு பெரும்பாலான ரோடுகள் சேதமடைந்துள்ளன. குறுகலான மலைப்பாதையில் குண்டும் குழியுமாக இருப்பதால் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றன.மேலும் அதி காலையில் ஏலத்தோட்டங்களுக்கு ஜீப்புக்கள் அதிக எண்ணிககையில் வருவதாலும் சபரிமலை செல்லும் வாகனங்களுக்கு மிக மெதுவாக செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
ஐயப்ப பக்தர்கள் கூறுகையில், ’கம்பமெட்டு ரோட்டை கடக்கவே சில மணிநேரம் ஆகிறது. ரோடு நன்றாக இருந்தால் வேகமாக செல்ல முடியும். ஆனால் குண்டும், குழியுமாக உள்ளது.சில இடங்களில் ஒட்டுப்போட்டுள்ளனர். அதுவும் பெயர்ந்துவிட்டதால் நாங்கள் அவதிப்படுகிறோம். இந்த ரோட்டை முறையாக பராமரிக்க வேண்டும்,’என்றனர். ஆனால் ஒருவழிப்பாதையாக அறிவித்து சபரிமலை செல்லும் வாகனங்கள் திருப்பிவிடப்பட்ட பின் இனி பராமரிப்பு செய்வது இயலாது. இந்த சீசன் முடிந்தபின் தான் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என்று நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.