Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குலசேகரப்பொருமாள் அருளிச் செய்த ...
முதல் பக்கம் » முதலாயிரம்
திருமழிசைப்பிரான் அருளிச்செய்த திருச்சந்த விருத்தம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 டிச
2011
05:12

திருச்சந்த விருத்தத் தனியன்கள்

திருக்கச்சி நம்பிகள் அருளிச்செய்தவை
தரவு கொச்சகக் கலிப்பா

தருச்சந்தப் பொழில்தழுவு தாரணியின் துயர்தீர
திருச்சந்த விருத்தம்செய் திருமழிசைப் பரன்வருமூர்
கருச்சந்தும் காரகிலும் கமழ்கோங்கும் மணநாறும்
திருச்சந்தத் துடன்மருவு திருமழிசை வளம்பதியே

இருவிகற்ப நேரிசை வெண்பா

உலகும் மழிசையு முள்ளுணர்ந்து, தம்மில்
புலவர் புகழ்க்கோலால் தூக்க-உலகுதன்னை
வைத்தெடுத்த பக்கத்தும், மாநீர் மழிசையே
வைத்தெடுத்த பக்கம் வலிது

திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்

திருமழிசைப்பிரான் அருளிச்செய்த திருச்சந்த விருத்தம்

தமிழ் மொழியிலுள்ள பாவினங்களுள் ஒன்றான விருத்தத்தினால் ஆகியது இப்பிரபந்தம். இனிய ஓசையையுடையது அதனால் சந்த விருத்தம் எனப்பட்டது. எம்பெருமானின் பெருமைகளை அனுபவித்து மகிழ்கிறவர் இவ்வாழ்வார். இவ்வுலகிலுள்ள மக்கள் பகவானை நினைக்காமல் இப்படித் துன்புறுகிறார்களே! துன்பம் நீக்கும் வழியாது? என்று சிந்தித்தார். ராஜஸ தாமஸ நூல்களால் மனங்கலங்கி தேவ தாந்தரங்களை நாடுவதுதான் துன்பமடையக் காரணம் என்று தெளிவித்தார். ஸ்ரீமந்நாராயணனே பரதேவதை; தத்துவப் பொருள் என்பதை விளக்குவதற்காகவே இப்பிரபந்தத்தை அருளியுள்ளார். பர, வ்யூஹ, விபவ, அர்ச்சாவதாரங்களில் எம்பெருமான் காட்டிய பெருமைகளை வாசித்தும் கேட்டும், அவனையே வணங்கி வழிபட்டும் பொழுதுபோக்கும் பாக்கியத்தை எம்பெருமான் எனக்குக் கொடுத்திருக்கிறானே! என்னே கருணை! என்று பகவானிடமிருந்து தாம் அடைந்த நற்பயன்களை இப்பிரபந்தத்தில் கூறி மகிழ்கிறார்.

தத்துவநிலை பரந்தாமனே எனல்

சந்தக் கலி விருத்தம்

நின்னை யார் நினைக்க வல்லர்?

752. பூநிலாய வைந்துமாய்ப் புனற்கண்நின்ற நான்குமாய்
தீநிலாய மூன்றுமாய்ச் சிறந்தகா லிரண்டுமாய்
மீநிலாய தொன்றுமாகி வேறுவேறு தன்மையாய்
நீநிலாய வண்ணநின்னை யார்நினைக்க வல்லரே.

ஆய மாயனே! நின்னை எப்படி நினைப்பது?

753. ஆறுமாறு மாறுமா யோரைந்துமைந்து மைந்துமாய்
ஏறுசீரி ரண்டுமூன்று மேழுமாறு மெட்டுமாய்
வேறுவேறு ஞானமாகி மெய்யினொடு பொய்யுமாய்
ஊறொடோசை யாயவைந்து மாய ஆய மாயனே.

நின்னை யாவர் காண வல்லார்?

754. ஐந்துமைந்து மைந்துமாகி யல்லவற்று ளாயுமாய்
ஐந்துமூன்று மொன்றுமாகி நின்றவாதி தேவனே
ஐந்துமைந்து மைந்துமாகி யந்தரத்த ணைந்துநின்று
ஐந்துமைந்து மாயநின்னை யாவர்காண வல்லரே.

என் ஆவியுள் புகுந்தது ஏனோ?

755. மூன்றுமுப்ப தாறினோடொ ரைந்துமைந்து மைந்துமாய்
மூன்றுமூர்த்தி யாகிமூன்று மூன்றுமூன்று மூன்றுமாய்
தோன்றுசோதி மூன்றுமாய்த் துளக்கமில் விளக்கமாய்
ஏன்றெனாவி யுள்புகுந்த தென்கொலோவெம் மீசனே

பிரமனைப் பெற்றவன் நீ தானே!

756. நின்றியங்கு மொன்றலாவு ருக்கடோறும் ஆவியாய்
ஒன்றியுள்க லந்துநின்ற நின்னதன்மை யின்னதென்று
என்றும்யார்க்கு மெண்ணிறந்த ஆதியாய்நின் னுந்திவாய்
அன்றுநான்மு கற்பயந்த வாதிதேவ னல்லையே

ஐம்பூதங்களையும் காப்பவன் நீ தானே!

757. நாகமேந்து மேருவெற்பை நாகமேந்து மண்ணினை
நாகமேந்து மாகமாக மாகமேந்து வார்புனல்
மாகமேந்து மங்குல்தீயொர் வாயுவைந் தமைந்துகாத்து
ஏகமேந்தி நின்றநீர்மை நின்கணேயி யன்றதே

முக்கண்ணனும் உன்னை உள்ளவாறு துதிக்க முடியாது

758. ஒன்றிரண்டு மூர்த்தியா யுறக்கமோடு ணர்ச்சியாய்
ஒன்றிரண்டு காலமாகி வேலைஞால மாயினாய்
ஒன்றிரண்டு தீயுமாகி யாயனாய மாயனே
ஒன்றிரண்டு கண்ணினானு முன்னையேத்த வல்லனே

ஆதிமூலம் நீ தான்

759. ஆதியான வானவர்க்கு மண்டமாய வப்புறத்து
ஆதியான வானவர்க்கு மாதியான வாதிநீ
ஆதியான வானவாண ரந்தகாலம் நீயுரைத்தி
ஆதியான காலநின்னை யாவர்காண வல்லரே

யாவரும் வணங்கும் தன்மை உன்னிடம் உள்ளது

760. தாதுலாவு கொன்றைமாலை துன்னுசெஞ்ச டைச்சிவன்
நீதியால்வ ணங்குபாத நின்மலாநி லாயசீர்
வேதவாணர் கீதவேள்வி நீதியான வேள்வியார்
நீதியால் வணங்குகின்ற நீர்மைநின்கண் நின்றதே

இவ்வுலகம் உன்னிடமே அடங்குகிறது.

761. தன்னுளேதி ரைத்தெழும் தரங்கவெண்த டங்கடல்
தன்னுளேதி ரைத்தெழுந் தடங்குகின்ற தன்மைபோல்
நின்னுளேபி றந்திறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுளேய டங்குகின்ற நீர்மைநின்கண் நின்றதே.

யாராலும் உன் குணங்கனைச் சொல்ல முடியாது

762. சொல்லினால்தொ டர்ச்சிநீசொ லப்படும்பொ ருளும்நீ
சொல்லினால்சொ லப்படாது தோன்றுகின்ற சோதிநீ
சொல்லினால்ப டைக்கநீப டைக்கவந்து தோன்றினார்
சொல்லினால்சு ருங்கநின்கு ணங்கள்சொல்ல வல்லரே

நின் இருப்பிடத்தை நிணைக்கவல்லார் யார்?

763. உலகுதன்னை நீபடைத்தி யுள்ளொடுக்கி வைத்திமீண்
டுலகுதன்னு ளேபிறத்தி யோரிடத்தை யல்லையால்
உலகுநின்னொ டொன்றிநிற்க வேறுநிற்றி யாதலால்
உலகில்நின்னை யுள்ளசூழல் யாவருள்ளா வல்லரே

உன் அருளினாலேயே உன்னை நினைக்கவேண்டும்

764. இன்னையென்று சொல்லலாவ தில்லையாதும் இட்டிடைப்
பின்னைகேள்வ னென்பருன்பி ணக்குணர்ந்த பெற்றியோர்
பின்னையாய கோலமோடு பேருமூரு மாதியும்
நின்னையார் நினைக்கவல்லர் நீர்மையால்நி னைக்கிலே.

சாமதேவ கீதன் நீ அல்லனோ!

765. தூய்மையோக மாயினாய்து ழாயலங்கல் மாலையாய்
ஆமையாகி யாழ்கடல்து யின்றவாதி தேவநின்
நாமதேய மின்னதென்ன வல்லமல்ல மாகிலும்
சாமவேத கீதனாய சக்ரபாணி யல்லையே

சாரங்க பாணி நீதான்

766. அங்கமாறும் வேதநான்கு மாகிநின்ற வற்றுளே
தங்குகின்ற தன்மையாய்த டங்கடல்ப ணத்தலை
செங்கண்நாக ணைக்கிடந்த செல்வமல்கு சீரினாய்
சங்கவண்ண மன்னமேனி சார்ங்கபாணி யல்லையே.

நின் பெருமை மலைகளினும் உயர்ந்தது

767. தலைக்கணத்து கள்குழம்பு சாதிசோதி தோற்றாமாய்
நிலைக்கணங்கள் காணவந்து நிற்றியேலும் நீடிருங்
கலைக்கணங்கள் சொற்பொருள்க ருத்தினால்நி னைக்கொணா
மலைக்கணங்கள் போலுணர்த்தும் மாட்சிநின்றன் மாட்சியே.

நீ எப்படியும் பல மூர்த்திகள் ஆனாய்?

768. ஏகமூர்த்தி மூன்றுமூர்த்தி நாலுமூர்த்தி நன்மைசேர்
போகமூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தியெண்ணில்
மூர்த்தியாய் நாகமூர்த்தி சயனமாய்ந லங்கடல்கி டந்துமேல்
ஆகமூர்த்தி யாயவண்ண மெங்கொலாதி தேவனே.

பாம்பணைமேல் பள்ளிகொண்ட தன்மை என்னே!

769. விடத்தவாயொ ராயிரமி ராயிரம்கண் வெந்தழல்
விடுத்துவீழ்வி லாதபோகம் மிக்கசோதி தொக்கசீர்
தொடுத்துமேல்வி தானமாய பௌவநீர ராவணை
படுத்தபாயல் பள்ளிகொள்வ தென்கொல்வேலை வண்ணனே

பாம்பணையை நீ எப்படி விரும்பினாய்?

770. புள்ளாதாகி வேதநான்கு மோதினாய்அ தன்றியும்
புள்ளின்வாய்பி ளந்துபுட்கொ டிப்பிடித்த பின்னரும்
புள்ளையூர்தி யாதலால தென்கொல்மின்கொள் நேமியாய்
புள்ளின்மெய்ப்ப கைக்கடல்கி டத்தல்காத லித்ததே

பாம்பணையில் படுத்த காரணம் சொல்

771. கூசமொன்று மின்றிமாசு ணம்படுத்து வேலைநீர்
பேசநின்ற தேவர்வந்து பாடமுன்கி டந்ததும்
பாசம்நின்ற நீரில்வாழு மாமையான கேசவா
ஏசவன்று நீகிடந்த வாறுகூறு தேறவே.

நீ கடல் கடைந்தபோது அசுரர்கள் என் செய்தனர்?

772. அரங்கனே! தரங்கநீர்க லங்கவன்று குன்றுசூழ்
மரங்கடேய மாநிலம்கு லுங்கமாசு ணம்சுலாய்
நெருங்கநீ கடைந்தபோது நின்றசூர ரெஞ்செய்தார்
குரங்கையா ளுகந்தவெந்தை கூறுதேற வேறிதே.

ஆலிலைமேல் துயின்றாயே!

773. பண்டுமின்று மேலுமாயொர் பாலனாகி ஞாலமேழ்
உண்டுமண்டி யாலிலைத்து யின்றவாதி தேவனே!
வண்டுகிண்டு தண்டுழாய லங்கலாய்! கலந்தசீர்ப்
புண்டரீக பாவைசேரு மார்ப பூமிநாதனே!

நான்மறையோர் நின்னை வணங்குகின்றனர்

774. வானிறத்தொர் சீயமாய் வளைந்தவாளெ யிற்றவன்
ஊன்நிறத்துகிர்த்தலம ழுத்தினாய் உலாயசீர்
நால்நிறத்த வேதநாவர் நல்லயோகி னால்வணங்கு
பால்நிறக்க டல்கிடந்த பற்பநாப னல்லையே.

பஞ்ச ஆயுதங்களை ஏந்தினாயே!

775. கங்கைநீர்ப யந்தபாத பங்கயத்தெம் மண்ணலே
அங்கையாழி சங்குதண்டு வில்லும்வாளு மேந்தினாய்
சிங்கமாய தேவதேவ தேனுலாவு மென்மலர்
மங்கைமன்னி வாழுமார்ப ஆழிமேனி மாயனே.

கண்ணனே! உன் கருத்து யாருக்குத் தெரியும்?

776. வரத்தினில்சி ரத்தைமிக்க வாளெயிற்று மற்றவன்
உரத்தினில்க ரத்தைவைத்து கிர்த்தலத்தை யூன்றினாய்
இரத்தநீயி தென்னபொய்யி ரந்தமண்வ யிற்றுளே
கரத்திஉன்க ருத்தையாவர் காணவல்லர் கண்ணனே.

உன் மாயம் தான் என்னே!

777. ஆணினோடு பெண்ணுமாகி யல்லவோடு நல்லவாய்
ஊணொடோசை யூறுமாகி யொன்றலாத மாயையாய்
பூணிபேணு மாயனாகிப் பொய்யினோடு மெய்யுமாய்
காணிபேணும் மாணியாய்க்க ரந்துசென்ற கள்வனே.

உன்னை யாரால் மதிக்க முடியும்?

778. விண்கடந்த சோதியாய்வி ளங்குஞான மூர்த்தியாய்
பண்கடந்த தேசமேவு பாவநாச நாதனே
எண்கடந்த யோகினோடி ரந்துசென்று மாணியாய்
மண்கடந்த வண்ணம்நின்னை யார்மதிக்க வல்லரே.

எதிர்த்தோரை யெல்லாம் அழித்த மாயன்

779. படைத்தபாரி டந்தளந்த துண்டுமிழ்ந்து பௌவநீர்
படைத்தடைத்த திற்கிடந்து முன்கடைந்த பெற்றியோய்
மிடைத்தமாலி மாலிமான்வி லங்குகால னூர்புக
படைக்கலம் விடுத்தபல்ப டைத்தடக்கை மாயனே.

உன் தன்மையை யாராலும் சொல்ல முடியாது

780. பரத்திலும்ப ரத்தையாதி பௌவநீர ணைக்கிடந்து
உரத்திலும்மொ ருத்திதன்னை வைத்துகந்த தன்றியும்
நரத்திலும்பி றத்திநாத ஞானமூர்த்தி யாயினாய்
ஒருத்தரும்நி னாதுதன்மை யின்னதென்ன வல்லரே.

யாவற்றையும் உண்டு துயின்றாயே!

781. வானகம்மும் மண்ணகம்மும் வெற்புமேழ்க டல்களும்
போனகம்செய் தாலிலைத்து யின்றபுண்ட ரீகனே
தேனகஞ்செய் தண்ணறும்ம லர்த்துழாய்நன் மாலையாய்
கூனகம்பு கத்தெறித்த கொற்றவில்லி யல்லையே.

பக்தர்க்கு முக்தி அளிக்கும் மூர்த்தி

782. காலநேமி காலனே கணக்கிலாத கீர்த்தியாய்
ஞாலமேழு முண்டுபண்டோர் பாலனாய பண்பனே
வேலைவேவ வில்வளைத்த வெல்சினத்த வீரநின்
பாலராய பத்தர்சித்தம் முத்திசெய்யும் மூர்த்தியே.

மாவலியினிடம் இரக்கமே காட்டவில்லையே!

783. குரக்கினப்ப டைகொடுகு ரைகடலின் மீதுபோய்
அரக்கரங்க ரங்கவெஞ்ச ரந்துரந்த வாதிநீ
இரக்கமண்கொ டுத்தவற்கி ரக்கமொன்று மின்றியே
பரக்கவைத்த ளந்துகொண்ட பற்பபாத னல்லையே.

விபீடணனுக்கு அரசளித்தாயே!

784. மின்னிறத்தெ யிற்றரக்கன் வீழவெஞ்ச ரம்துரந்து
பின்னவற்க ருள்புரிந்த ரசளித்த பெற்றியோய்
நன்னிறத்தொ ரிஞ்சொலேழை பின்னைகேள்வ மன்னுசீர்
பொன்னிறத்த வண்ணனாய புண்டரீக னல்லையே.

ஆயனாய மாயம் என்ன மாயமோ!

785. ஆதியாதி யாதிநீயொ ரண்டமாதி யாதலால்
சோதியாத சோதிநீஅ துண்மையில்வி ளங்கினாய்
வேதமாகி வேள்வியாகி விண்ணினோடு மண்ணுமாய்
ஆதியாகி யாயனாய மாயமென்ன மாயமே.

ஆயச்சியின் பிள்ளை ஆயினாயே!

786. அம்புலாவு மீனுமாகி யாமையாகி ஆழியார்
தம்பிரானு மாகிமிக்க தன்புமிக்க தன்றியும்
கொம்பராவு நுண்மருங்கு லாயர்மாதர் பிள்ளையாய்
எம்பிரானு மாயவண்ண மென்கொலோவெம் மீசனே.

கோபியருடன் குலாவியவன்

787. ஆடகத்த பூண்முலைய சோதையாய்ச்சி பிள்ளையாய்
சாடுதைத்தோர் புள்ளதாவி கள்ளதாய பேய்மகள்
வீடவைத்த வெய்யகொங்கை ஐயபால முதுசெய்து
ஆடகக்கை மாதர்வா யமுதமுண்ட தென்கொலோ.

பேய்ச்சி பாலையும் உண்டாயே!

788. காய்த்தநீள்வி ளங்கனியு திர்த்தெதிர்ந்த பூங்குருந்த
சாய்த்துமாபி ளந்தகைத்த லத்தகண்ண னென்பரால்
ஆய்ச்சிபாலை யுண்டுமண்ணை யுண்டுவெண்ணெ யுண்டுபின்
பேய்ச்சிபாலை யுண்டுபண்டொ ரேனமாய வாமனா.

காளிங்கன்மீது நடம் பயின்ற நாதன்

789. கடங்கலந்த வன்கரிம ருப்பொசித்துஓர் பொய்கைவாய்
விடங்கலந்த பாம்பின்மேல்ந டம்பயின்ற நாதனே
குடங்கலந்த கூத்தனாய கொண்டல்வண்ண தண்டுழாய்
வடங்கலந்த மாலைமார்ப காலநேமி காலனே.

வெற்பு எடுத்த மேகவண்ணன்

790. வெற்பெடுத்து வேலைநீர்க லக்கினாய்அ தன்றியும்
வெற்பெடுத்து வேலைநீர்வ ரம்புகட்டி வேலைசூழ்
வெற்பெடுத்த இஞ்சிசூழி லங்கைகட்ட ழித்தநீ
வெற்பெடுத்து மாரிகாத்த மேகவண்ண னல்லையே.

ஆனை காத்து ஓரானை கொன்ற மாயம்

791. ஆனைகாத்தொ ரானைகொன்ற தன்றியாயர் பிள்ளையாய்
ஆனைமேய்த்தி யானெயுண்டி அன்றுகுன்ற மொன்றினால்
ஆனைகாத்து மையரிக்கண் மாதரார்தி றத்துமுன்
ஆனையன்று சென்றடர்த்த மாயமென்ன மாயமே.

நீ செய்தன யாவும் மாயம்!

792. ஆயனாகி யாயர்மங்கை வேயதோள்வி ரும்பினாய்
ஆயநின்னை யாவர்வல்ல ரம்பரத்தொ டிம்பராய்
மாய! மாய மாயைகொல்அ தன்றிநீவ குத்தலும்
மாயமாய மாக்கினாயுன் மாயமுற்று மாயமே.

ஏறு கொன்ற ஈசன்

793. வேறிசைந்த செக்கர்மேனி நீரணிந்த புஞ்சடை
கீறுதிங்கள் வைத்தவன்கை வைத்தவன்க பால்மிசை
ஊறுசெங்கு ருதியால்நி றைத்தகார ணந்தனை
ஏறுசென்ற டர்த்தவீச பேசுகூச மின்றியே.

நீயே ஆதிதேவன்

794. வெஞ்சினத்த வேழவெண்ம ருப்பொசித்து உருத்தமா
கஞ்சனைக்க டிந்துமண்ண ளந்துகொண்ட காலனே
வஞ்சனத்து வந்தபேய்ச்சி யாவிபாலுள் வாங்கினாய்
அஞ்சனத்த வண்ணனாய ஆதிதேவ னல்லையே.

நின் தன்மையைப் புரிந்துகொள்ள முடியவில்லையே!

795. பாலினீர்மை செம்பொனீர்மை பாசியின்ப சும்புறம்
போலுநீர்மை பொற்புடைத்த டத்துவண்டு விண்டுலாம்
நீலநீர்மை யென்றிவைநி றைந்தகாலம் நான்குமாய்
மாலினீர்மை வையகம்ம றைத்ததென்ன நீர்மையே.

புனிதனே! நீ எங்கிருக்கிறாய்?

796. மண்ணுளாய்கொல் விண்ணுளாய்கொல் மண்ணுளேம யங்கிநின்று
எண்ணுமெண்ண கப்படாய்கொல் என்னமாயைநின்தமர்
கண்ணுளாய்கொல் சேயைகொல்அ னந்தன்மேல்கி டந்தவெம்
புண்ணியாபு னந்துழாய லங்கலம்பு னிதனே.

என் இறப்பொடு பிறப்பறுக்கும் வழி என்ன?

797. தோடுபெற்ற தண்டுழாய லங்கலாடு சென்னியாய்
கோடுபற்றி ஆழியேந்தி அஞ்சிறைப்புள் ளூர்தியால்
நாடுபெற்ற நன்மைநண்ண மில்லையேனும் நாயினேன்
வீடுபெற்றி றப்பொடும்பி றப்பறுக்கு மாசொலே.

உன்னைக் கண்டு வணங்கும் விதத்தைச் சொல்

798. காரொடொத்த மேனிநங்கள் கண்ணவிண்ணிண் நாதனே
நீரிடத்த ராவணைக்கி டத்தியென்பர் அன்றியும்
ஓரிடத்தை யல்லையெல்லை யில்லையென்ப
ராதலால் சேர்விடத்தை நாயினேன் தெரிந்திறைஞ்சு மாசொலே.

எல்லோரையும் படைத்தளித்தவன்

799. குன்றில்நின்று வானிருந்து நீள்கடல்கி டந்துமண்
ஒன்றுசென்ற தொன்றையுண்ட தொன்றிடந்து
பன்றியாய் நன்றுசென்ற நாளவற்றுள் நல்லுயிர்ப டைத்தவர்க்கு
அன்றுதேவ மைத்தளித்த ஆதிதேவ னல்லயே

நாதனின் ஊர் அரங்கம்

800. கொண்டை கொண்ட கோதை மீது தேன் உலாவு வுனி வுன்
உண்டை கொண்டு அர“க ஓட்டி உள் மகிழ்ந்த நாதன் ஊர்,
நண்டை உண்டு நாரை யோ, வாளை பாய, நீலமே
அண்டை கொண்டு கெண்டை மேயுமு அந்தண் நீர்அரங்கமே

வில் வீரரின் ஊர் அரங்கம்

801. வெண்திரைக் கருங்கடல் சிவந்துவேவ, முன் ஒர் நாள்
திண்திறற் சிலைக்கைவாளி விட்டவீரர் சேரும் ஊர்,
எண திசைக் கணங்களும் இறைஞ்சிஆடு தீர்த்த நீர்,
வண்டுஇரைத்த சோலை வேலி, மன்னுசீர் அரங்கமே.

பிரமன் பணிந்த கோயில் அரங்கம்

802. சரங்களைத் துரந்து வில் வளைத்து, இலங்கை மன்னவன்
சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த செல்வர் மன்னு பொன்-இடம்,
பரந்துபொன் நிரந்து நுந்தி வந்து அலைக்கும் வார் புனல்
அரங்கம் என்பர் நான்முகத்து அயன்பணிந்த கோயிலே.

பற்றற்றவர்கள் சூழ்ந்து வாழும் ஊர் அரங்கம்

803. பொற்றை உற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்த்தைப்
பற்றி உற்று மற்று அதன் மருப்பு ஒசித்த பாகன் ஊர்,
சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினர்,
அற்ற பற்றர், சுற்றி வாழும் அந்தண் நிர் அரங்கமே.

வாணனைக் கொன்றவன் ஊர் அரங்கம்

804. மோடியோடி லச்சையாய சாபமெய்தி முக்கணான்
கூடுசேனை மக்களோடு கொண்டுமண்டி வெஞ்சமத்
தோடவாண னாயிரம் கரங்கழித்த வாதிமால்
பீடுகோயில் கூடுநீர ரங்கமென்ற பேரதே.

இலங்கையை அழித்தவன் தங்கும் ஊர் அரங்கம்

805. இலைத்தலைச்ச ரந்துரந்தி லங்கைகட்ட ழித்தவன்
மலைத்தலைப்பி றந்திழிந்து வந்துநுந்து சந்தனம்
குலைத்தலைத்தி றுத்தெறிந்த குங்குமக்கு ழம்பினோடு
அலைத்தொழுகு காவிரிய ரங்கமேய வண்ணலே.

உன் பாதங்களை என் மனத்தில் தங்கவைத்தாயே!

806. மன்னுமாம லர்க்கிழத்தி வையமங்கை மைந்தனாய்
பின்னுமாயர் பின்னைதோள்ம ணம்புணர்ந்த தன்றியும்
உன்னபாத மென்னசிந்தை மன்னவைத்து நல்கினாய்
பொன்னிசூ ழரங்கமேய புண்டரீக னல்லையே.

திருக்குடந்தைக் கிடந்த திருமால்

807. இலங்கைமன்ன னைந்தொடைந்து பைந்தலைநி லத்துக
கலங்கவன்று சென்றுகொன்று வென்றிகொண்ட வீரனே
விலங்குநூலர் வேதநாவர் நீதியான கேள்வியார்
வலங்கொளக்கு டந்தையுள்கி டந்தமாலு மல்லையே.

திருக்குடந்தை ஆராவமுது

808. சங்குதங்கு முன்கைநங்கை கொங்கைதங்க லுற்றவன்
அங்கமங்க வன்றுசென்ற டர்த்தெறிந்த வாழியான்
கொங்குதங்கு வார்குழல்ம டந்தைமார்கு டைந்தநீர்
பொங்குதண்கு டந்தையுள்கி டந்தபுண்ட ரீகனே.

மத்தயானை கொம்பொடித்தவன்

809. மரங்கெட நடந்தடர்த்து மத்தயானை மத்தகத்து
உரங்கெடப்பு டைத்தொர்கொம்பொ சித்துகந்த வுத்தமா
துரங்கம்வாய்பி ளந்துமண்ண ளந்தபாதவேதியர்
வரங்கொளக்கு டந்தையுள்கி டந்தமாலு மல்லையே.

திருக்குடந்தையுள் வாழும் கோவலன்

810. சாலிவேலி தண்வயல்த டங்கிடங்கு பூம்பொழில்
கோலமாட நீடுதண்கு டந்தைமேய கோவலா
காலநேமி வக்கரன்க ரன்முரஞ்சி ரம்மவை
காலனோடு கூடவில்கு னித்தவிற்கை வீரனே.

உயர் வேங்கடத்தில் நின்றவன்

811. செழுங்கொழும்பெ ரும்பனிபொ ழிந்திடஉ யர்ந்தவேய்
விழுந்துலர்ந்தெ ழுந்துவிண்பு டைக்கும்வேங்க டத்துள்நின்று
எழுந்திருந்து தேன்பொருந்து பூம்பொழில்த ழைக்கொழுஞ்
செழுந்தடங்கு டந்தையுள்கி டந்தமாலு மல்லையே.

கேசனே! எழுந்திருந்து பேசு

812. நடந்தகால்கள் நொந்தவோ நடுங்குஞால மேனமாய்
இடந்தமெய்கு லுங்கவோவி லங்குமால்வ ரைச்சுரம்
கடந்தகால்ப ரந்தகாவி ரிக்கரைக்கு டந்தையுள்
கிடந்தவாறெ ழுந்திருந்து பேசுவாழி கேசனே.

நரசிங்கன் தானே நீ!

813. கரண்டமாடு பொய்கையுள்க ரும்பனைப்பெ ரும்பழம்
புரண்டுவீழ வாளைபாய்கு றுங்குடிநெ டுந்தகாய்
திரண்டதோளி ரணியஞ்சி னங்கொளாக மொன்றையும்
இரண்டுகூறு செய்துகந்த சிங்கமென்ப.

திருவெஃகாவில் கிடந்தது ஏன்?

814. நன்றிருந்து யோகநீதி நண்ணுவார்கள் சிந்தையுள்
சென்றிருந்து தீவினைகள் தீர்த்ததேவ தேவனே
குன்றிருந்த மாடநீடு பாடகத்து மூரகத்தும்
நின்றிருந்து வெஃகணைக்கி டந்ததென்ன நீர்மையே.

என் மனத்தில்தான் நீ வாழ்கிறாய்

815. நின்றதெந்தை யூரகத்தி ருந்ததெந்தை பாடகத்து
அன்றுவெஃக ணைக்கிடந்த தென்னிலாத முன்னெலாம்
அன்றுநான்பி றந்திலேன்பி றந்தபின்ம றந்திலேன்
நின்றதும் மிருந்ததும்கி டந்ததும்மென் நெஞ்சுளே.

நீ தங்குமிடம் என் உள்ளம் தான்

816. நிற்பதும்மொர் வெற்பகத்தி ருப்பும்விண்கி டப்பதும்
நற்பெருந்தி ரைக்கடலுள் நானிலாத முன்னெலாம்
அற்புதன னந்தசயன னாதிபூதன் மாதவன்
நிற்பதும்மி ருப்பதும்கி டப்பதும்என் நெஞ்சுளே.

எல்லோரும் உன்னைத்தான் நினைக்க வேண்டும்

817. இன்றுசாதல் நின்றுசாத லன்றியாரும் வையகத்து
ஒன்றிநின்று வாழ்தலின்மை கண்டுநீச ரென்கொலோ
அன்றுபார ளந்தபாத போதையுன்னி வானின்மேல்
சென்றுசென்று தேவராயி ருக்கிலாத வண்ணமே.

உறுவினை நீங்கி வாழுங்கள்

818. சண்டமண்ட லத்தினூடு சென்றுவீடு பெற்றுமேல்
கண்டுவீடி லாதகாத லின்பம்நாளு மெய்துவீர்
புண்டரீக பாதபுண்ய கீர்த்திநுஞ்செ விமடுத்து
உண்டுநும்மு றுவினைத்து யருள்நீங்கி யுய்ம்மினோ.

திருமாலை வாழ்த்தி வாழ்மின்

819. முத்திறத்து வாணியத்தி ரண்டிலொன்று நீசர்கள்
மத்தராய்ம யங்குகின்ற திட்டதிலி றந்துபோந்து
எத்திறத்து முய்வதோரு பாயமில்லை யுய்குறில்
தொத்துறுத்த தண்டுழாய்நன் மாலைவாழ்த்தி வாழ்மினோ.

பகவானை நினைந்து பிறவித்துயர் அகற்றுங்கள்

820. காணிலும்மு ருப்பொலார்செ விக்கினாத கீர்த்தியார்
பேணிலும்வ ரந்தரமி டுக்கிலாத தேவரை
ஆணமென்ற டைந்துவாழும் ஆதர்காள்எம் மாதிபால்
பேணிநும்பி றப்பெனும்பி ணக்கறுக்க கிற்றிரே.

வாணன் தோள்களை மட்டும் துணித்தாயே!

821. குந்தமோடு சூலம்வேல்கள் தோமரங்கள் தண்டுவாள்
பந்தமான தேவர்கள்ப ரந்துவான கம்முற
வந்தவாண னீரைஞ்ஞாறு தோள்களைத்து ணித்தநாள்
அந்தவந்த வாகுலம மரரேயறிவரே

வாணனுக்கு இரங்கினாயே!

822. வண்டுலாவு கோதைமாதர் காரணத்தி னால்வெகுண்டு
இண்டவாண னீரைஞ்ஞாறு தோள்களைத்து ணித்தநாள்
முண்டனீறன் மக்கள்வெப்பு மோடியங்கி யோடிடக்
கண்டுநாணி வாணனுக்கி ரங்கினானெம் மாயனே

வேதநூல் ஓதுகின்றது உண்மை

823. போதில்மங்கை பூதலக்கி ழத்திதேவி யன்றியும்
போதுதங்கு நான்முகன்ம கனவன்ம கஞ்சொலில்
மாதுதங்கு கூறன்ஏற தூர்தியென்று வேதநூல்
ஓதுகின்ற துண்மையல்ல தில்லைமற்று ரைக்கிலே.

வாலி வீழ அம்பு எய்தவன்

824. மரம்பொதச்ச ரந்துரந்து வாலிவீழ முன்னோர்நாள்
உரம்பொதச்ச ரந்துரந்த வும்பராளி யெம்பிரான்
வரம்குறிப்பில் வைத்தவர்க்க லாதுவான மாளிலும்
நிரம்புநீடு போகமெத்தி றத்தும்யார்க்கு மில்லையே.

அரங்கனை வாழ்த்தினால் தீவினைகள் நீங்கும்

825. அறிந்தறிந்து வாமனன டியணைவ ணங்கினால்
செறிந்தெழுந்த ஞானமோடு செல்வமும்சி றந்திடும்
மறிந்தெழுந்த தெண்டிரையுள் மன்னுமாலை வாழ்த்தினால்
பறிந்தெழுந்து தீவினைகள் பற்றறுதல் பான்மையே.

செங்கண்மாலைக் காணவல்லவர் யாவர்?

826. ஒன்றிநின்று நல்தவம்செய் தூழியூழி தோறெலாம்
நின்றுநின்ற வன்குணங்க ளுள்ளியுள்ளம் தூயராய்
சென்றுசென்று தேவதேவ ரும்பரும்ப ரும்பராய்
அன்றியெங்கள் செங்கண்மாலை யாவர்காண வல்லரே.

அன்பினாலேயே ஆழியானைக் காணமுடியும்

827. புன்புலவ ழியடைத்த ரக்கிலச்சி னைசெய்து
நன்புலவ ழிதிறந்து ஞானநற்சு டர்கொளீஇ
என்பிலெள்கி நெஞ்சுருகி யுள்கனிந்தெ ழுந்ததோர்
அன்பிலன்றி யாழியானை யாவர்காண வல்லரே.

எட்டெழுத்து ஓதுவோரே தேவராவர்

828. எட்டுமெட்டு மெட்டுமாயொ ரேழுமேழு மேழுமாய்
எட்டுமூன்று மொன்றுமாகி நின்றவாதி தேவனை
எட்டினாய பேதமோடி றைஞ்சிநின்ற வன்பெயர்
எட்டெழுத்து மோதுவார்கள் வல்லர்வான மாளவே

அரங்கனின் அடிகளை ஆர்வமோடு இறைஞ்சு

829. சோர்விலாத காதலால்தொ டக்கறாம னத்தராய்
நீரராவ ணைக்கிடந்த நின்மலன்ந லங்கழல்
ஆர்வமோடி றைஞ்சிநின்ற வன்பெயரெட் டெழுத்தும்
வாரமாக வோதுவார்கள் வல்லர்வான மாளவே.

பக்தியுள்ளவர்களுக்கே மோட்சம் கிட்டும்

830. பத்தினோடு பத்துமாயொ ரேழினோடொ ரொன்பதாய்
பத்தினால்தி சைக்கணின்ற நாடுபெற்ற நன்மையாய்
பத்தினாய தோற்றமோடொ ராற்றல்மிக்க வாதிபால்
பத்தராம வர்க்கலாது முத்திமுற்ற லாகுமே.

நித்ய சூரிபோகம் கிடைப்பது உறுதி

831. வாசியாகி நேசமின்றி வந்தெதிர்ந்த தேனுகன்
நாசமாகி நாளுலப்ப நன்மைசேர்ப னங்கனிக்கு
வீசிமேல்நி மிர்ந்ததோளி லில்லையாக்கி னாய்கழற்கு
ஆசையாம வர்க்கலால மரராக லாகுமே.

திருவேங்கடவன் திருவடிகளை அடையுங்கள்

832. கடைந்தபாற்க டல்கிடந்து காலநேமி யைக்கடிந்து
உடைந்தவாலி தந்தனுக்கு உதவவந்தி ராமனாய்
மிடைந்தவேழ்ம ரங்களும டங்கவெய்து வேங்கடம்
அடைந்தமால பாதமே யடைந்துநாளு முய்ம்மினோ

பற்றற்ற பக்தர்களுக்கு எங்கும் இன்பம்

833. எத்திறத்து மொத்துநின்று யர்ந்துயர்ந்த பெற்றியோய்
முத்திறத்து மூரிநீர ராவணைத்து யின்றநின்
பத்துறுத்த சிந்தையோடு நின்றுபாசம் விட்டவர்க்கு
எத்திறத்து மின்பமிங்கு மங்குமெங்கு மாகுமே.

பகவானிடம் அன்பு கொள்வதற்கு ஈடேயில்லை

834. மட்டுலாவு தண்டுழாய லங்கலாய் புலன்கழல்
விட்டுவீழ்வி லாதபோகம் விண்ணில்நண்ணி யேறினும்
எட்டினோடி ரண்டெனும்க யிற்றினால்ம னந்தனைக்
கட்டிவீடி லாதுவைத்த காதலின்ப மாகுமே.

என்திறத்தில் எம்பிரான் குறிப்பு யாதோ?

835. பின்பிறக்க வைத்தனன்கொ லன்றிநின்று தன்கழற்கு
அன்புறைக்க வைத்தநாள றிந்தனன்கொ லாழியான்
தந்திறத்தொ ரன்பிலாவ றிவிலாத நாயினேன்
எந்திறத்தி லென்கொலெம்பி ரான்குறிப்பில் வைத்ததே

என்னைப் பாசங்களில் ஈடுபடுத்தி மயக்காதே

836. நச்சராவ ணைக்கிடந்த நாத.பாத போதினில்
வைத்தசிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீயினம்
மெய்த்தன்வல்லை யாதலால றிந்தனன்நின் மாயமே
உய்த்துநின்ம யக்கினில்ம யக்கலென்னை

பாம்பின்மீது நடம்பயின்ற நாதன்

837. சாடுசாடு பாதனே சலங்கலந்த பொய்கைவாய்
ஆடராவின் வன்பிடர்ந டம்பயின்றநாதனே
கோடுநீடு கைய செய்ய பாதநாளு முன்னினால்
வீடனாக மெய்செயாத வண்ணமென்கொல் கண்ணனே.

நின் பற்றின்றி மற்றோர் பற்றில்லை

838. நெற்றிபெற்ற கண்ணன்விண்ணி னாதனோடு போதின்மேல்
நற்றவத்து நாதனோடு மற்றுமுள்ள வானவர்
கற்றபெற்றி யால்வணங்கு பாத நாத வேதநின்
பற்றலாலொர் பற்றுமற்ற துற்றிலேனு ரைக்கிலே.

வானவர்க்கு மருந்தளித்த வள்ளல்

839. வெள்ளைவேலை வெற்புநாட்டி வெள்ளெயிற்ற ராவளாய்
அள்ளலாக்க டைந்தவன்ற ருவரைக்கொ ராமையாய்
உள்ளநோய்கள் தீர்மருந்து வானவர்க்க ளித்தஎம்
வள்ளலாரையன்றிமற்றொர்தெய்வம்நான்ம திப்பனே.

பாண்டவர்க்கு உதவிய தெய்வம்

840. பார்மிகுத்த பாரமுன்னொ ழிச்சுவான ருச்சனன்
தேர்மிகுத்து மாயமாக்கி நின்றுகொன்று வென்றிசேர்
மாரதர்க்கு வான்கொடுத்து வையமைவர் பாலதாம்
சீர்மிகுத்த நின்னலாலொர் தெய்வம்நான்ம திப்பனே.

நின் பாதமின்றி மற்றோர் பற்றிலேன்

841. குலங்களாய வீரிரண்டி லொன்றிலும்பி றந்திலேன்
நலங்களாய நற்கலைகள் நாவிலும்ந வின்றிலேன்
புலன்களைந்தும் வென்றிலேன்பொ றியிலேன்பு னிதநின்
இலங்குபாத மன்றிமற்றொர் பற்றிலேனெம் மீசனே.

என்றும் என்னைவிட்டு நீங்காதே

842. பண்ணுலாவு மென்மொழிப்ப டைத்தடங்க ணாள்பொருட்டு
எண்ணிலாவ ரக்கரைநெ ருப்பினால்நெ ருக்கினாய்
கண்ணலாலொர் கண்ணிலேன்க லந்தசுற்றம் மற்றிலேன்
எண்ணிலாத மாயநின்னை யென்னுள்நீக்க லென்றுமே.

அடைக்கலம் புகுந்த என்னை அஞ்சாதே என்க

843. விடைக்குலங்க ளேழடர்த்து வென்றிவேற்கண் மாதரார்
கடிக்கலந்த தோள்புணர்ந்த காலியாயவேலைநீர்
படைத்தடைத்த திற்கிடந்து முன்கடைந்து நின்றனக்கு
அடைக்கலம்பு குந்தவென்னை யஞ்சலென்ன வேண்டுமே.

அம்பு எய்த வில்லிராமன்

844. சுரும்பரங்கு தண்டுழாய்து தைந்தலர்ந்த பாதமே
விரும்பிநின்றி றைஞ்சுவேற்கி ரங்கரங்க வாணனே
கரும்பிருந்த கட்டியேக டல்கிடந்த கண்ணனே
இரும்பரங்க வெஞ்சரம்து ரந்தவில்லி ராமனே.

எல்லாம் நீயே

845. ஊனின்மேய ஆவிநீஉ றக்கமோடு ணர்ச்சிநீ
ஆனில்மேய ஐந்தும்நீஅ வற்றுள்நின்ற தூய்மைநீ
வானினோடு மண்ணும்நீவ ளங்கடற்ப யனும்நீ
யானும்நீய தன்றியெம்பி ரானும்நீயி ராமனே.

கடல்கிடந்த நியே என் தெய்வம்

846. அடக்கரும்பு லன்கள்ஐந்த டக்கியாசை யாமவை
தொடக்கறுத்து வந்துநின்தொ ழிற்கணின்ற வென்னைநீ
விடக்கருதி மெய்செயாது மிக்கொராசை யாக்கிலும்
கடற்கிடந்த நின்னலாலொர் கண்ணிலேனெம் மண்ணலே.

நின்கழல் பற்ற வரம்தா

847. வரம்பிலாத மாயமாய வையமேழும் மெய்ம்மையே
வரம்பிலூழி யேத்திலும்வ ரம்பிலாத கீர்த்தியாய்
வரம்பிலாத பல்பிறப்ப றுத்துவந்து நின்கழல்
பொருந்துமாதி ருந்தநீவ ரஞ்செய்புண்ட ரீகனே.

நான் உய்யும் உபாயத்தை எனக்கு அளித்திடு

848. வெய்யவாழி சங்குதண்டு வில்லும்வாளு மேந்துசீர்க்
கையசெய்ய போதில்மாது சேருமார்ப நாதனே
ஐயிலாய வாக்கைநோய றுத்துவந்து நின்னடைந்து
உய்வதோரு பாயம்நீயெ னக்குநல்க வேண்டுமே.

மறந்திடாது எனக்கு அருளவேண்டும்

849. மறம்துறந்து வஞ்சமாற்றி யைம்புலன்க ளாசையும்
துறந்துநின்க ணாசையேதொ டர்ந்துநின்ற நாயினேன்
பிறந்திறந்து பேரிடர்ச்சு ழிக்கணின்று நீங்குமா
மறந்திடாது மற்றெனெக்கு மாயநல்க வெண்டுமே.

என்னை உன்னைவிட்டுப் பிரித்திடாதே

850. காட்டிநான்டிசய்வல்வினைப் பயன்றனில்மனந்தனை
நாட்டிவைத்துநல்லவல்ல செய்யவெண்ணினாரென
கேட்டதன்றியென்னதாவி பின்னைகேள்வநின்னொடும்
பூட்டிவைத்தவென்னை நின்னுள்நீக்கல்பூவை வண்ணனே.

பிறவிக்கடலைத் தாண்ட அருள்செய்

851. பிறப்பினோடு பேரிடர்ச் சுழிக்கண்நின்றும் நீங்குமஃது
இறப்பவைத்த ஞானநீச ரைக்கரைக்கொ டேற்றுமா
பெறற்கரிய நின்னபாத பத்தியான பாசனம்
பெறற்கரிய மாயனே எனக்குநல்க வேண்டுமே.

நின் பாததாமரையை நான் என்றும் நினைக்கவேண்டும்

852. இரந்துரைப்ப துண்டுவாழி ஏமநீர்தி றத்தமா
வரர்தரும்தி ருக்குறிப்பில் வைத்ததாகில் மன்னுசீர்
பரந்தசிந்தை யொன்றிநின்று நின்னபாத பங்கயம்
நிரந்தரம்நி னைப்பதாக நீநினைக்க வேண்டுமே.

உடல் நோய் தீர ஒருவழி சொல்வாய்

853. விளவுவிலாத காதலால் விளங்குபாத போதில்வைத்து
உள்ளுவேன தூனநோயொ ழிக்குமாதெ ழிக்குநீர்
பள்ளிமாய பன்றியாய வென்றிவீரகுன்றினால்
துள்ளுநீர்வ ரம்புசெய்த தோன்றலொன்று சொல்லிடே.

நின் பெயரையே நான் சொல்லவேண்டும்

854. திருக்கலந்து சேருமார்ப தேவதேவ தேவனே
இருக்கலந்த வேதநீதி யாகிநின்ற நின்மலா
கருக்கலந்த காளமேக மேனியாய நின்பெயர்
உருக்கலந்தொ ழிவிலாது ரைக்குமாறு ரைசெயே.

திருவடித் தொடர்பினை எனக்கு நல்குக

855. கடுங்கவந்தன் வக்கரன்க ரன்முரன்சி ரம்மவை
இடந்துகூறு செய்தபல்ப டைத்தடக்கை மாயனே
கிடந்திருந்து நின்றியங்கு போதும்நின்ன பொற்கழல்
தொடர்ந்துவிள்வி லாததோர்தொ டர்ச்சிநல்க வேண்டுமே.

நின்னையே யான் எண்ணுவேன்

856. மண்ணையுண்டு மிழ்ந்துபின்னி ரந்துகொண்ட ளந்துமண்
கண்ணுளல்ல தில்லையென்று வென்றகால மாயினாய்
பண்ணைவென்ற விஞ்சொல்மங்கை கொங்கைதங்கு பங்கயக்
கண்ணநின்ன வண்ணமல்ல தில்லையெண்ணும் வண்ணமே

என் மனம் உன் புகழையே விரும்பும்

857. கறுத்தெதிர்ந்த காலநேமி காலனோடு கூடஅன்
றறுத்தவாழி சங்குதண்டு வில்லும்வாளு மேந்தினாய்
தொறுக்கலந்தவூனமஃதொ ழிக்கவன்று குன்றம்முன்
பொறுத்தநின்பு கழ்க்கலாலொர் நேசமில்லை.

உன் திருவடிகளையே நேசிப்பேன்

858. காய்சினத்த காசிமன்னன் வக்கரன்ப வுண்டிரன்
மாசினத்த மாலிமாஞ்சு மாலிகேசி தேனுகன்
நாசமுற்று வீழநாள்க வர்ந்தநின்க ழற்கலால்
நேசபாச மெத்திறத்தும் வைத்திடேனெம் மீசனே.

நின்னொடு கூடுமாசையே கொள்வேன்

859. கேடில்சீர்வ ரத்தனாய்க்கெ டும்வரத்த யனரன்
நாடினோடு நாட்டமாயி ரத்தன்நாடு நண்ணிலும்
வீடதான போகமெய்தி வீற்றிருந்த போதிலும்
கூடுமாசை யல்லதொன்று கொள்வனோகு றிப்பிலே.

முனிவர்கள் உன்னையே தேவதேவன் என்பர்

860. சுருக்குவாரை யின்றியேசு ருங்கினாய்சு ருங்கியும்
பெருக்குவாரை யின்றியேபெ ருக்கமெய்து பெற்றியோய்
செருக்குவார்கள் தீக்குணங்கள் தீர்த்ததேவ தேவனென்று
இருக்குவாய்மு னிக்கணங்க ளேத்தயானு மேத்தினேன்.

பக்தர் சித்தம் மேவியவன்

861. தூயனாயு மன்றியும்சு ரும்புலாவு தண்டுழாய்
மாயநின்னை நாயினேன்வ ணங்கிவாழ்த்து மீதெலாம்
நீயுநின்கு றிப்பினிற்பொ றுத்துநல்கு வேலைநீர்ப்
பாயலோடு பத்தர்சித்தம் மேயவேலை கண்ணனே.

செய்த குற்றம் நற்றமாகவே கொள்

862. வைதுநின்னை வல்லவாப ழித்தவர்க்கும் மாறில்போர்
செய்துநின்னை செற்றதீயில் வெந்தவர்க்கும்
வந்துன்னை எய்தலாகு மென்பராத லாலெம்மாய
நாயினேன் செய்தகுற்றம் நற்றமாக வேகொள்ஞால நாதனே.

பேரின்பம் நல்கவேண்டும்

863. வாள்களாகி நாள்கள்செல்ல நோய்மைகுன்றி மூப்பெய்தி
மாளுநாள தாதலால்வ ணங்கிவாழ்த்தென் நெஞ்சமே
ஆளதாகு நன்மையென்று நன்குணர்ந்த தன்றியும்
மீள்விலாத போகம்நல்க வேண்டும்மால பாதமே.

நெஞ்சே! நலன்கொள் மாலையே எண்ணு

864. சலங்கலந்த செஞ்சடைக்க றுத்தகண்டன் வெண்டலைப்
புலன்கலங்க வுண்டபாத கத்தன்வன்து யர்கெட
அலங்கல்மார்வில் வாசநீர்கொ டுத்தவன்ன டுத்தசீர்
நலங்கொள்மாலை நண்ணும்வண்ண மெண்ணுவாழி நெஞ்சமே.

ஞானமாகி ஞாயிறாகி ஏனமான பிரானை வாழ்த்து

865. ஈனமாய வெட்டுநீக்கி யேதமின்றி மீதுபோய்
வானமாள வல்லையேல்வ ணங்கிவாழ்த்தென் நெஞ்சமே
ஞானமாகி ஞாயிறாகி ஞாலமுற்று மோரெயிற்று
ஏனமாயி டந்தமூர்த்தி யெந்தைபாத மெண்ணியே

மனமே! ஏன் இடர்க்கடலில் கிடக்கிறாய்?

866. அத்தனாகி யன்னையாகி யாளுமெம்பி ரானுமாய்
ஒத்தொவ்வாத பல்பிறப்பொ ழித்துநம்மை யாட்கொள்வான்
முத்தனார்மு குந்தனார்பு குந்துநம்முள் மேவினார்
எத்தினாலி டர்க்கடல்கி டத்தியேழை நெஞ்சமே.

அரக்கரைக் கொன்ற வீரனார் அருளே தேவை

867. மாறுசெய்த வாளரக்கன் நாளுலப்ப அன்றிலங்கை
நீறுசெய்து சென்றுகொன்று வென்றிகொண்ட வீரனார்
வேறுசெய்து தம்முளென்னை வைத்திடாமை யால்நமன்
கூறுசெய்து கொண்டிறந்த குற்றமெண்ண வல்லனே.

அச்சுதன் ஆதியந்தமில்லாதவன்

868. அச்சம்நோயொ டல்லல்பல்பி றப்புவாய மூப்பிவை
வைத்தசிந்தை வைத்தவாக்கை மாற்றிவானி லேற்றுவான்
அச்சுதன நந்தகீர்த்தி யாதியந்த மில்லவன்
நச்சுநாக ணைக்கிடந்த நாதன்வேத கீதனே.

திருமகள் கொழுநனையே நினைப்பேன்

869. சொல்லினும்தொ ழிற்கணும்தொ டக்கறாத வன்பினும்
அல்லுநன்ப கலினோடு மானமாலை காலையும்
அல்லிநாண்ம லர்க்கிழத்தி நாத பாத போதினை
புல்லியுள்ளம் விள்விலாது பூண்டுமீண்ட தில்லையே.

நின்னை நினைந்தால் வாட்டம் நீங்கும்

870. பொன்னிசூழ ரங்கமேய பூவைவண்ணமாயகேள்
என்னதாவி யென்னும் வல்வினையினுள்கொ ழுந்தெழுந்து
உன்னபாத மென்னநின்ற வொண்சுடர்க்கொ ழுமலர்
மன்னவந்து பூண்டுவாட்ட மின்றுயெங்கும் நின்றதே

என் ஆவி இன்ப வீடு பெற்றது

871. இயக்கறாத பல்பிறப்பி லென்னைமாற்றி யின்றுவந்து
உயக்கொள்மேக வண்ணன்நண்ணி யென்னிலாய தன்னுளே
மயக்கினான்றன் மன்னுசோதி யாதலாலென் னாவிதான்
இயக்கெலாம றுத்தறாத வின்பவீடு பெற்றதே

அடிவரவு: பூ ஆறு ஐந்து மூன்று நின்று நாகம் ஒன்று ஆதி தாது தன்னுள் சொல்-சொல் உலகு இன்னை தூய்மை அங்கம் தலை ஏக விடத்த புள் கூசம் அரங்கன்-அரங்கன் பண்டு வானிறத்து கங்கை வரத்தினில் ஆண் விண் படை பரத்தில் வானகம் கால-கால குரக்கு மின் ஆதி அம்பு ஆடகத்த காய்த்த கடம் வெற்பு ஆனை ஆயன்-ஆயன் வேறு வெஞ்சின பால் மண் தோடுகார் குன்று கொண்டை வெண்டிரை சரம்-சரம் பொற்றை மோடி இலை மன்னு இலங்கை சங்கு மரம் சாலி செழு நடந்த-நடந்த கரண்டம் நன்று நின்றது நிற்பது இன்று சண்ட முத்திறம் காணிலும் குந்தம் வண்டு-வண்டு போதில் மரம் அறிந்து ஒன்றி புன்புல எட்டு சோர்வு பத்தின் வாசி கடை-கடை எத்திறம் மட்டு பின் நச்சரா சாடு நெற்றி வெள்ளை பார் குலம் பண்-பண் விடை சுரும்பு ஊன் அடக்கு வரம்பு வெய்ய மறம் காட்டினான் பிறப்பு இரந்து-இரந்து விள் திரு கடும் மண்ணை கறுத்து காய் கேடு சுருக்கு தூயன் வைது-வைது வாள் சலம் ஈனம் அத்தன் மாறு அச்சம் சொல் பொன்னி இயக்கறாத- காவல்

(14-வது பாசுரம் திருக்குடந்தை சக்கரபாணியையும், 15 வது பாசுரம் திருக்குடந்தை சாரங்கபாணியையும், 56-61 பாசுரங்கள் திருக்குடந்தை ஆராவமுதனையும், 62-வது பாசுரம் திருக்குறுங்குடி நரசிம்மனையும், 63-64 பாசுரங்கள் காஞ்சீபுரத்திலுள்ள பாடகம், ஊரகம் யதோக்தகாரி எம்பெருமான்களையும். 89-வது பாசுரம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதியையும், 103-வது பாசுரம் காஞ்சீபுரம் தேவப்பெருமானையும், 114-வது மாமல்லபுரம் ஞானப்பிரானையும், பல பாசுரங்கள் திருவரங்கனையும் கூறுகின்றன.

திருச்சந்த விருத்தத்தை அநுஸந்திப்பவர்கள் திருமழிசைப் பிரானைப்போல் பல்லாண்டுகள் பகவத் பக்தி பெற்று ஸ்ரீவைஷ்ணவராக உலகில் வாழலாம்.)

திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்

திருமாலைத் தனியன்

திருவரங்கப்பெருமாளரையர் அருளிச்செய்தது...

மற்றொன்றும் வேண்டா மனமே! மதிளரங்கர்
கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ்-உற்ற
திருமாலை பாடும்சீர்த் தொண்டரடிப் பொடியெம்
பெருமானை, எப்பொழுதும் பேசு

தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்

தொண்டரடிப்பொடியாழ்வார் அருளச்செய்த திருமாலை

இவ்வாழ்வார் பாகவத சேஷத்தின் எல்லை நிலத்தில் இருப்பவர். அதற்கேற்றவாறு இவருடைய திருநாமமும், தொண்டரடிப்பொடிகள் என்பதாயிற்று. இவரை அரங்கனே திருத்திப் பணி கொண்டான்.

இவ்வாழ்வார் திருவரங்கனைத் தவிர வேறு எவரையும் பாடவில்லை. அவனுக்குத் தொண்டு செய்வதையே விரும்பினார். அவன்மீது அருளிச் செய்யப்பெற்ற பாமாலையாதலால் இது திருமாலை என்று பெயர் பெற்றது. திருமாலை அறியாதவர் திருமாலை அறியார் என்பது பழமொழி. இவர் திருமாலையில் மோட்ச பலப்ரதனான திருவரங்கனே பரதெய்வம். அவனிடமும், அவனடியார்களிடமும் பக்தி செய்யாதவர் உலகில் வாழ்வதே வீண் என்றும் அரங்கனே சிலையினால் இலங்கை செற்றதேவன். அரங்கனே மதுரை மாநகரில் கவளமால் யானை கொன்ற கண்ணன் என்றும் அறுதியிட்டு அனுபவிக்கிறார்.

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அரங்கனே! நின் நாமத்தைக் கற்றேன் 

872. காவலிற் புலனை வைத்துக் கலிதனைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட் டுழிதரு கின்றோம் நமன்தமர் தலைகள் மீதே
மூவுல குண்டு மிழ்ந்த முதல்வநின் நாமம்கற்ற
ஆவலிப் புடைமை கண்டாய் அரங்கமா நகரு ளானே.

நின் பெயரைச் சொல்வதே பேரின்பம்

873. பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே.

பிறப்பே எனக்கு வேண்டாம்

874. வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவ ரேலும்
பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு
பேதைபா லகன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகரு ளானே.

அரங்கனை அடைந்தபின் அல்லலே இல்லை

875. மொய்த்தவல் வினையுள் நின்று மூன்றெழுத் துடைய பேரால்
கத்திர பந்து மன்றே பராங்கதி கண்டு கொண்டான்
இத்தனை யடிய ரானார்க் கிரங்கும்நம் மரங்க னாய
பித்தனைப் பெற்று மந்தோ பிறவியுள் பிணங்கு மாறே.

அரங்கன் அடியராகி ஆடிப்பாடுக

876. பெண்டிரால் சுகங்க ளுய்ப்பான் பெரியதோ ரிடும்பை பூண்டு
உண்டிராக் கிடக்கும்போதும் உடலுக்கே கரைந்து நைந்து
தண்டுழாய் மாலை மார்பன் தமர்களாய்ப் பாடியாடி
தொண்டுபூண் டமுத முண்ணாத் தொழும்பர்சோ றுகக்குமாறே.

அரங்கனார்க்கு அடிமையாகுங்கள்

877. மறம்சுவர் மதிளெ டுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு
புறம்சுவ ரோட்டை மாடம் புரளும்போ தறிய மாட்டீர்
அறம்சுவ ராகி நின்ற அரங்கனார்க் காட்செய் யாதே
புறம்சுவர் கோலஞ் செய்து புள்கவ்வக் கிடக்கின் றீரே.

இலங்கையை அழித்த தேவனே தேவன்

878. புலையற மாகி நின்ற புத்தொடு சமண மெல்லாம்
கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்ப ரோதாம்
தலையறுப் புண்டும் சாவேன் சத்தியங் காண்மின் ஐயா
சிலையினா லிலங்கை செற்ற தேவனே தேவனாவான்.

பகவானைப் பழிப்பவர் அழியத்தான் வேண்டும்

879. வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில்சாக் கியர்கள் நின்பால்
பொறுப்பரி யனகள் பேசில் போவதே நோய தாகி
குறிப்பெனக் கடையு மாகில் கூடுமேல் தலையை ஆங்கே
அறுப்பதே கருமங் கண்டாய் அரங்கமா நகரு ளானே.

கண்ணன் கழல்களைப் பணிக

880. மற்றுமோர் தெய்வ முண்டே மதியிலா மானி டங்காள்
உற்றபோ தன்றி நீங்கள் ஒருவனென் றுணர மாட்டீர்
அற்றமே லொன்ற றீயீர் அவனல்லால் தெய்வ மில்லை
கற்றினம் மேய்த்த வெந்தை கழலிணை பணிமி னீரே.

உலகம் உய்யத் திருவரங்கத்தைக் காட்டினான்

881. நாட்டினான் தெய்வ மெங்கும் நல்லதோ ரருள்தன் னாலே
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க் குய்யும் வண்ணம்
கேட்டிரே நம்பி மீர்காள். கெருடவா கனனும் நிற்க
சேட்டைதன் மடிய கத்துச் செல்வம்பார்த் திருக்கின் றீரே.

காலத்தை வீணாக்காமல் அரங்கனை அழையுங்கள்

882. ஒருவில்லா லோங்கு முந்நீர் அனைத்துல கங்க ளுய்ய
செருவிலே யரக்கர் கோனைச் செற்றநம் சேவ கனார்
மருவிய பெரிய கோயில் மதிள்திரு வரங்க மென்னா
கருவிலே திரு விலாதீர் காலத்தைக் கழிக் கின்றீரே.

அரங்கம் என்னாதவர்க்கு இரங்குகிறேன்

883. நமனும்முற் கலனும் பேச நரகில்நின் றார்கள் கேட்க
நரகமே சுவர்க்க மாகும் நாமங்க ளுடைய நம்பி
அவனதூ ரரங்க மென்னாது அயர்த்துவீழ்ந் தளிய மாந்தர்
கவலையுள் படுகின் றாரென் றதனுக்கே கவல்கின் றேனே.

அரங்கனை நினைத்தால் நரகம் அழிந்துவிடும்

884. எறியுநீர் வெறிகொள் வேலை மாநிலத் துயிர்க ளெல்லாம்
வெறிகொள்பூந் துளவ மாலை விண்ணவர் கோனை யேத்த
அறிவிலா மனித ரெல்லாம் அரங்கமென் றழைப்ப ராகில்
பொறியில்வாழ் நரக மெல்லாம் புல்லெழுந் தொழியு மன்றே.

கடவுளைத் தொழாதவர்க்குச் சோறு தராதீர்

885. வண்டின முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல்மீ தணவும் சோலை குயிலினம் கூவும் சோலை
அண்டர்கோ னமரும் சோலை அணிதிரு வரங்க மென்னா
மிண்டர்பாய்ந் துண்ணும் சோற்றை விலக்கிநாய்க் கிடுமி னீரே.

அழகன் வாழும் ஊர் அரங்கம்

886. மெய்யர்க்கே மெய்ய னாகும் விதியிலா வென்னைப் போல
பொய்யர்க்கே பொய்ய னாகும் புட்கொடி யுடைய கோமான்
உய்யப்போ முணர்வி னார்கட் கொருவனென் றுணர்ந்த பின்னை
ஐயப்பா டறுத்துத் தோன்றும் அழகனூ ரரங்க மன்றே.

என்னை ஆட்கொண்டவன் அரங்கன்

887. சூதனாய்க் கள்வ னாகித் தூர்த்தரோ டிசைந்த காலம்
மாதரார் கயற்க ணென்னும் வலையுள்பட் டழுந்து வேனை
போதரே யென்று சொல்லிப் புந்தியில் புகுந்துதன்பால்
ஆதரம் பெருகவைத்த அழகனூ ரரங்க மன்றே.

அரங்கனைக் கண்ட களிப்பே களிப்பு!

888. விரும்பிநின் றேத்த மாட்டேன் விதியிலேன் மதியொன் றில்லை
இரும்புபோல் வலிய நெஞ்சம் இறையிறை யுருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டேன் கண்ணிணை களிக்கு மாறே.

ஆனந்தக் கண்ணீர் வருகிறதே!

889. இனிதிரைத் திவலை மோத எறியும்தண் பரவை மீதே
தனிகிடந் தரசு செய்யும் தாமரைக் கண்ண னெம்மான்
கனியிருந் தனைய செவ்வாய்க் கண்ணணைக் கண்ட கண்கள்
பனியரும் புதிரு மாலோ எஞ்செய்கேன் பாவி யேனே.

பள்ளி கொண்டானைப் பார்த்தால் உடல் உருகும்

890. குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தென்திசை யிலங்கை நோக்கி
கடல்நிறக் கடவு ளெந்தை அரவணைத் துயிலு மாகண்டு
உடலெனக் குருகு மாலோ எஞ்செய்கே னுலகத் தீரே.

பள்ளிகொண்ட காட்சியே காட்சி!

891. பாயுநீ ரரங்கந் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திருநன் மார்பும் மரகத வுருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும் துவரிதழ் பவள வாயும்
ஆயசீர் முடியும் தேசும் அடியரோர்க் ககல லாமே.

மனமே! சஞ்சலம் எதற்கு?

892. பணிவினால் மனம தொன்றிப் பவளவா யரங்க னார்க்கு
துணிவினால் வாழ மாட்டாத் தொல்லைநெஞ் சேநீ சொல்லாய்
அணியனார் செம்பொ னாய அருவரை யனைய கோயில்
மணியனார் கிடந்த வாற்றை மனத்தினால் நினைக்க லாமே

மாசற்றார் மனத்தில் உள்ளான் அரங்கன்

893. பேசிற்றே பேச லல்லால் பெருமையொன் றுணர லாகாது
ஆசற்றார் தங்கட் கல்லால் அறியலா வானு மல்லன்
மாசற்றார் மனத்து ளானை வணங்கிநா மிருப்ப தல்லால்
பேசத்தா னாவ துண்டோ பேதைநெஞ் சேநீ சொல்லாய்

அரங்கனை எப்படி மறக்க முடியும்?

894. கங்கயிற் புனித மாய காவிரி நடுவு பாட்டு
பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழி லரங்கந் தன்னுள்
எங்கள்மா லிறைவ னீசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையே னேழை யேனே.

மனமே! காலத்தை வீணாக்காதே

895. வெள்ளநீர் பரந்து பாயும் விரிபொழி லரங்கந் தன்னுள்
கள்ளனார் கிடந்த வாறும் கமலநன் முகமும் கண்டு
உள்ளமே வலியைப் போலும் ஒருவனென் றுணர மாட்டாய்
கள்ளமே காதல் செய்துன் கள்ளத்தே கழிக்கின் றாயே.

கடல்வண்ணா! எனக்கு அருள்செய்

896. குளித்துமூன் றனலை யோம்பும் குறிகொளந் தணமை தன்னை
ஒளித்திட்டே னென்க ணில்லை நின்கணும் பத்த னல்லேன்
களிப்பதென் கொண்டு நம்பீ கடல்வண்ணா. கதறு கின்றேன்
அளித்தெனக் கருள்செய் கண்டாய் அரங்கமா நகரு ளானே.

நான் ஏன் பிறந்தேன்?

897. போதெல்லாம் போது கொண்டுன் பொன்னடி புனைய மாட்டேன்
தீதிலா மொழிகள் கொண்டுன் திருக்குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்ச மன்பு  கலந்திலே னதுதன் னாலே
ஏதிலே னரங்கர்க்கு எல்லே எஞ்செய்வான் தோன்றி னேனே.

அரங்கனுக்கு அடிமைசெய்யத் தயங்குகின்றேனே!

898. குரங்குகள் மலையை தூக்கக் குளித்துத்தாம் புரண்டிட் டோடி
தரங்கநீ ரடைக்க லுற்ற சலமிலா அணிலம் போலேன்
மரங்கள்போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால்
அரங்கனார்க் காட்செய் யாதே அளியத்தே னயர்க்கின் றேனே.

அரங்கனுக்கு அடியனாகாமல் ஏன் இருக்கின்றேன்?

899. உம்பரா லறிய லாகா ஒளியுளார் ஆனைக் காகி
செம்புலா லுண்டு வாழும் முதலைமேல் சீறி வந்தார்
நம்பர மாய துண்டே நாய்களோம் சிறுமை யோரா
எம்பிராற் காட்செய் யாதே எஞ்செய்வான் தோன்றி னேனே.

உன்னைத் தவிர ரக்ஷகர் யார்?

900. ஊரிலேன் காணி யில்லை உறவுமற் றொருவ ரில்லை
பாரில்நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ண னேஎன் கண்ணனே கதறு கின்றேன்
ஆருளர்க் களைக ணம்மா அரங்கமா நகரு ளானே.

எனக்கு இனி என்ன கதி?

901. மனத்திலோர் தூய்மை யில்லை வாயிலோ ரிஞ்சொ லில்லை
சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன் வாளா
புனத்துழாய் மாலை யானே பொன்னிசூழ் திருவ ரங்கா
எனக்கினிக் கதியென் சொல்லாய் என்னையா ளுடைய கோவே.

வீணாகப் பிறவி கொடுத்தாய்!

902. தவத்துளார் தம்மி லல்லேன் தனம்படத் தாரி லல்லேன்
உவர்த்தநீர் போல வென்றன் உற்றவர்க் கொன்று மல்லேன்
துவர்த்தசெவ் வாயி னார்க்கே துவக்கறத் துரிச னானேன்
அவத்தமே பிறவி தந்தாய் அரங்கமா நகரு ளானே

உன்னைக்காண வழி தெரியவில்லையே!

903. ஆர்த்துவண் டலம்பும் சோலை அணிதிரு வரங்கந் தன்னுள்
கார்த்திர ளனைய மேனிக் கண்ணனே உன்னைக் காணும்
மார்க்கமொன் றறிய மாட்டா மனிசரில் துரிச னாய
மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்க னேனே

உன் அருள்பெற வந்து நின்றேன்

904. மெய்யெலாம் போக விட்டு விரிகுழ லாரில் பட்டு
பொய்யெலாம் பொதிந்து கொண்ட போட்கனேன் வந்து நின்றேன்
ஐயனே அரங்க னேஉன் அருளென்னு மாசை தன்னால்
பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்ய னேனே

எனது நினைவை நீ அறிவாய்

905. உள்ளத்தே யுறையும் மாலை உள்ளுவா னுணர்வொன் றில்லா
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டேன்
உள்ளுவா ருள்ளிற் றெல்லாம் உடனிருந் தறிதி யென்று
வெள்கிப்போ யென்னுள் ளேநான் விலவறச் சிரித்திட் டேனே.

உன்னையே நான் சேவிப்பேன்

906. தாவியன் றுலக மெல்லாம் தலைவிளாக் கொண்ட எந்தாய்
சேவியே னுன்னை யல்லால்சிக் கெனச் செங்கண் மாலே
ஆவியே.அமுதே என்றன் ஆருயி ரனைய எந்தாய்
பாவியே னுன்னை யல்லால் பாவியேன் பாவி யேனே.

உன்னைத்தானே நான் அழைக்கின்றேன்!

907. மழைக்கன்று வரைமு னேந்தும் மைந்தனே மதுர வாறே
உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையுள் பட்டு
உழைக்கின்றேற் கென்னை நோக்கா தொழிவதேஉன்னை யன்றே
அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி அரங்கமா நகரு ளானே.

என் தந்தையும் தாயும் நீரே

908. தெளிவிலாக் கலங்கல் நீர்சூழ் திருவரங்கங் கத்துள் ளோங்கும்
ஒளியுளார் தாமே யன்றே தந்தையும் தாயு மாவார்
எளியதோ ரருளு மன்றே எந்திறத் தெம்பி ரானார்
அளியன்நம் பையல் என்னார் அம்மவோ கொடிய வாறே.

நானும் வேஷம் போடவேண்டுமா?

909. மேம்பொருள் போக விட்டு மெய்ம்மையை மிகவு ணர்ந்து
ஆம்பரி சறிந்து கொண்டு ஐம்புல னகத்த டக்கி
காம்பறத் தலைசி ரைத்துன் கடைத்தலை யிருந்துவாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ்புனல் அரங்கத் தானே.

அன்பு செய்யும் அடியாரையே உகக்கிறாய்

910. அடிமையில் குடிமை யில்லாஅயல்சதுப் பேதி மாரில்
குடிமையில் கடைமை பட்ட குக்கரில் பிறப்ப ரேலும்
முடியினில் துளபம் வைத்தாய் மொய்கழற் கன்பு செய்யும்
அடியரை யுகத்தி போலும் அரங்கமா நகரு ளானே.

நின்னையே மனத்தில் வைக்கவேண்டும்

911. திருமறு மார்வ நின்னைச் சிந்தையுள் திகழ வைத்து
மருவிய மனத்த ராகில் மாநிலத் துயிர்க ளெல்லாம்
வெருவரக் கொன்று சுட்டிட் டீட்டிய வினைய ரேலும்
அருவினைப் பயன துய்யார் அரங்கமா நகரு ளானே.

அடியவர் உண்டு மிஞ்சிய சேடமே சிறந்தது

912. வானுளா ரறிய லாகா வானவா என்ப ராகில்
தேனுலாந் துளப மாலைச் சென்னியாய் என்ப ராகில்
ஊனமா யினகள் செய்யும் ஊனகா ரகர்க ளேலும்
போனகம் செய்த சேடம் தருவரேல் புனித மன்றே.

எக்குலத்தாராயினும் நின் அடியவர்களே உயர்ந்தவர்கள்

913. பழுதிலா வொழுக லாற்றுப் பலசதுப் பேதி மார்கள்
இழிகுலத் தவர்க ளேலும் எம்மடி யார்க ளாகில்
தொழுமினீர் கொடுமின் கொள்மின் என்றுநின் னோடு மொக்க
வழிபட வருளி னாய்போன்ம் மதிள்திரு வரங்கத் தானே.

அடியார்களைப் பழிப்பவர் புலையர்

914. அமரவோ ரங்க மாறும் வேதமோர் நான்கு மோதி
தமர்களில் தலைவ ராய சாதியந் தணர்க ளேலும்
நுமர்களைப் பழிப்ப ராகில் நொடிப்பதோ ரளவில்ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும் அரங்கமா நகரு ளானே.

ஆனைக்கு அன்று அருள் செய்தாயே!

915. பெண்ணுலாம் சடையி னானும் பிரமனு முன்னைக் காண்பான்
எண்ணிலா வூழி யூழி தவஞ்செய்தார் வெள்கி நிற்ப
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கன் றருளை யீந்த
கண்ணறாஉன்னை யென்னோ களைகணாக் கருது மாறே.

என் கவிதைகள் எம்பிரானுக்கு இனிக்கும்

916. வளவெழும் தவள மாட மதுரைமா நகரந் தன்னுள்
கவளமால் யானை கொன்ற கண்ணனை அரங்க மாலை
துவளத்தொண் டாய தொல்சீர்த் தொண்டர டிப்பொ டிசொல்
இளையபுன் கவிதை யேலும் எம்பிறார் கினிய வாறே.

அடிவரவு: காவல் பச்சை வேதம் மொய்த்த பெண்டிர் மறம் புலை வெறுப்போடு மற்றும் நாட்டின்கண் ஒரு நமனும் எறி வண்டு மெய் சூதன் விரும்பி இனி குட பாயும் பணி பேசு கங்கை வெள்ளம் குளித்து போது குரங்கு உம்பரால் ஊர் மனம் தவம் ஆர்த்து மெய் உள்ளம் தாவி மழை தெளிவு மேம்பொருள் அடிமை திரு வான் பழுதிலா அமர பெண் வளவெழும்-கதிரவன்

(12 வது பாடல் கோவிந்த நாமத்தின் பெருமையைக் கூறுகிறது)

தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்.

திருப்பள்ளியெழுச்சித் தனியன்கள்

திருமாலையாண்டான் அருளியது...

தமேவமத்வா பரவாஸுதேவம்
ரங்கேஸயம் ராஜவதர்ஹணீயம்
ப்ராபோதகீம் யோக்ருத ஸுக்திமாலாம்
பக்தாங்க்ரி ரேணும் பகவந்த மீடே

திருவரங்கப்பெருமாளரையர் அருளியது

இருவிகற்ப நேரிசை வெண்பா

மண்டங் குடியென்பர் மாமறையோர், மன்னியசீர்த்
தொண்ட ரட்டிப்பொடி தொன்னகரம்,-வண்டு
திணர்த்தவயல் தென்னரங்கத் தம்மானைப், பள்ளி
உணர்த்தும் பிரானுதித்த வூர்

தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திருப்பள்ளியெழுச்சி

அரங்கனுக்குத் திருப்பள்ளியெழுச்சி அருளிச்செய்தவர் தொண்டரடிப்பொடியாழ்வார் ஒருவரே. அனைவரும் பல்லாண்டுகளாகத் திருப்பள்ளியெழுச்சி என்று கூறுவது இதையே. எல்லா ஸன்னிதிகளிலும் ஸேவிக்கப்படும் திருப்பள்ளியெழுச்சி இது ஒன்றே.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

சூரியன் உதித்துவிட்டான்: பள்ளியெழுந்தருள்

917. கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான்
கனவிரு ளகன்றது காலையம்பொழுதாய்
மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம்
வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி
எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த
இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும்
அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே.

கஜேந்திரனுக்கு அருளியவனே! பள்ளியெழுந்தருள்

918. கொழுங்கொடி முல்லையின் கொழுமல ரணவிக்
கூர்ந்தது குணதிசை மாருத மிதுவோ
எழுந்தன மலரணைப் பள்ளிகொள் ளன்னம்
ஈன்பனி நனைந்தத மிருஞ்சிற குதறி
விழுங்கிய முதலையின் பிலம்புரைபேழ்வாய்
வெள்ளெயி றுறவதன் விடத்தனுக்
கனுங்கி அழுங்கிய ஆனையி னருந்துயர் கெடுத்த
அரங்கத்தம்மா! பள்ளி யெழுந்தரு ளாயே.

காலைக்காற்று வீசுகிறது: பள்ளியெழுந்தருள்

919. சுடரொளி பரந்தன சூழ்திசை யெல்லாம்
துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி
படரொளி பசுத்தனன் பனிமதி யிவனோ
பாயிறு ளகன்றது பைம்பொழில் கமுகின்
மடலிடைக் கீறிவண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருத மிதுவோ
அடலொளி திகழ்தரு திகிரியந் தடக்கை
அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே.

அயோத்தி அரசே! பள்ளியெழுந்தருள்

920. மேட்டிள மேதிகள் தளைவிடு மாயர்கள்
வேய்ங்குழ லோசையும் விடைமணிக் குரலும்
ஈட்டிய இசைதிசை பரந்தன வயலுள்
இருந்தின சுரும்பினம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரிசிலை வானவ ரேறே
மாமுனி வேள்வியைக் காத்துஅவ பிரதம்
ஆட்டிய அடுதிறல் அயோத்தியெம் மரசே
அரங்கத்தம்மா பள்ளி யெழுந்தரு ளாயே.

தேவர்கள் பணிய வந்துள்ளனர்: பள்ளியெழுந்தருள்

921. புலம்பின புட்களும் பூம்பொழில் களின்வாய்
போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குணதிசை கனைகட லரவம்
களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலங்கலந் தொடையல்கொண் டடியிணை பணிவான்
அமரர்கள் புகுந்தன ராதலி லம்மா
இலங்கையர் கோன்வழி பாடுசெய் கோயில்
எம்பெரு மான் பள்ளி யெழுந்தரு ளாயே.

யாவரும் காத்துள்ளனர்: பள்ளியெழுந்தருள்

922. இரவியர் மணிநெடுந் தேரொடு மிவரோ
இறையவர் பதினொரு விடையரு மிவரோ
மருவிய மயிலின னறுமுக னிவனோ
மருதரும் வசுக்களும் வந்துவந் தீண்டி
புரவியோ டாடலும் பாடலும் தேரும்
குமரதண் டம்புகுந் தீண்டிய வெள்ளம்
அருவரை யனையநின் கோயில்முன் னிவரோ
அரங்கத்தம்மா பள்ளி யெழுந்தரு ளாயே.

தேவர்களுடன் முனிவர்கள் நின்னைத் தொழ நிற்கின்றனர்

923. அந்தரத் தமரர்கள் கூட்டங்க ளிவையோ
அருந்தவ முனிவரும் மருதரு மிவரோ
இந்திர னானையும் தானும்வந் திவனோ
எம்பெரு மானுன் கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்கவிச் சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்
அந்தரம் பாரிட மில்லைமற் றிதுவோ
அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே.

சூரியனும் ஒளி பரப்பித் தோன்றினன்

924. வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மாநிதி கபிலையொண் கண்ணாடி முதலா
எம்பெரு மான்படி மக்கலம் காண்டற்கு
ஏற்பன வாயின கொண்டுநன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தன ரிவரோ
தோன்றின னிரவியும் துலங்கொளி பரப்பி
அம்பர தலத்தில்நின் றகல்கின்ற திருள்போய்
அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே.

யாவருக்கும் காட்சி தரவேண்டும்! பள்ளியெழுந்தருள்

925. ஏதமில் தண்ணுமை யெக்கம்மத் தளியே
யாழ்குழல் முழவமோ டிசைதிசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கந்தரு வரவர் கங்குலு ளெல்லாம்
மாதவர் வானவர் சாரண ரியக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலி லவர்க்குநா ளோலக்க மருள
அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே.

அடியார்க்கு அடியன் ஆவேன்

926. கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ
துடியிடை யார்சுரி குழல்பிழிந் துதறித்
துகிலுடுத் தேறினர் சூழ்புன லரங்கா
தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள்தொண்ட ரடிப்பொடி யென்னும்
அடியனை அளியனென் றருளியுன் னடியார்க்
காட்படுத் தாய்பள்ளி எழுந்தரு ளாயே

அடிவரவு: கதிர் கொழு சுடர் மேட்டு புலம்பின இரவி அந்தரம் வம்பவிழ் ஏதம் கடிமலர்-அமலன்.

தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்

அமலனாதிபிரான் தனியன்கள்

பெரிய நம்பிகள் அருளியது...

ஆபாத சூடமநுபூய ஹரிம்ஸயாநம்
மத்த்யேகவேர துஹிதுர்முதிதாந்தராத்மா
அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம்
யோநிஸ்சிகாயமநவைமுநிவாஹநந்தம்

திருமலை நம்பிகள் அருளியது

அறுசீர்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

காட்டவே கண்ட பாத
கமலம்நல் லாடை யுந்தி,
தேட்டரு முதர பந்தம்
திருமார்பு கண்டம் செவ்வாய்
வாட்டமில் கண்கள் மேனி
முனியேறித் தனிபு குந்து
பாட்டினால் கண்டு வாழும்
பாணர்தாள் பரவி னோமே

திருப்பாணாழ்வார் அருளிச்செய்த அமலனாதிபிரான்

திருப்பாணாழ்வார் பண்ணிசைத்துப் பாடுவதில் வல்லவர். பாட்டும் அரங்கனைப் பற்றியதாகவே இருக்கும். இவர் அருளிய இப்பத்துப் பாடல்களும் பழமறையின் பொருள்கள். 

ஆசிரியத் துறை

அரங்கனின் கமலபாதம் வந்துவிட்டது!

927. அமல னாதிபிரா னடியார்க் கென்னை யாட்படுத்த
விமலன் விண்ணவர் கோன்விரை யார்பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதி ளரங்கத் தம்மான்திருக்
கமலபாதம்வந் தென்கண்ணி னுள்ளன வொக்கின்றதே.

அரங்கனின் சிவந்த ஆடையைச் சிந்திக்கின்றேன்

928. உவந்த வுள்ளத்தனா யுலகமளந் தண்டமுற
நிவந்த நீள்முடியன் அன்று நேர்ந்த நிசாசரரை
கவர்ந்த வெங்கணைக்காகுத்தன் கடியார்பொழில் அரங்கத்தம்மான்அரைச்
சிவந்த ஆடையின் மேல்சென்ற தாமென் சிந்தனையே,

அவனது திருவுந்தியின்மேல் என் மனம் உள்ளது

929. மந்தி பாய்வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றா னரங்கத் தரவி னணையான்
அந்தி போல்நிறத் தாடையு மதன்மேல் அயனைப் படைத்த தோரெழில்
உந்தி மேலதன் றோஅடி யேனுள்ளத் தின்னுயிரே.

அவனது திருவயிறு என் மனத்தில் உலவுகிறது

930. சதுரமா மதிள்சூழ் ழிலங்கைக் கிறைவன் தலைபத்து
உதிர வோட்டிஓர் வெங்கணை யுய்த்தவ னோத வண்ணன்
மதுரமா வண்டு பாட மாமயி லாடரங்கத் தம்மான் திருவயிற்
றுதரபந் தனமென் னுள்ளத்துள்நின் றுலாகின்றதே

அவனது திருமார்புதான் என்னை ஆட்கொண்டது

931. பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத்தன்
வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி யென்னுள் புகுந்தான்
கோர மாதவம் செய்தனன்கொ லறியே னரங்கத் தம்மான்திரு
வார மார்பதன் றோஅடி யேனை யாட்கோண்டதே.

அவனது திருக்கழுத்து என்னை உய்வித்தது

932. துண்ட வெண்பிறை யான்துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டுவாழ் பொழில்சூ ழரங்கநகர் மேயவப்பன்
அண்ட ரண்டபகி ரண்டத்தொரு மாநிலம் எழுமால்வரை முற்றும்
உண்ட கண்டங்கண் டீரடி யேனை யுய்யக்கொண்டதே!

அவன் பவளச்செவ்வாய் என்னைக் கவர்ந்தது

933. கையினார் சுரிசங்கன லாழியர் நீள்வரைபோல்
மெய்யனார் துளப விரையார் கமழ்நீள் முடியெம்
ஐயனார் அணியரங்கனா ரரவின ணைமிசை
மேயமாயனார் செய்யவா யையோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே.

அவன் கண்கள் என்னை மயக்கி விட்டன

934. பரிய னாகி வந்த அவுண னுடல்கீண்ட அமரர்க்கு
அரிய ஆதிபிரா னரங்கத் தமலன் முகத்து
கரிய வாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்டவப்
பெரிய வாய கண்க ளென்னைப் பேதைமை செய்தனவே.

அவன் நீலமேனி என் மனத்தை நிறைத்தது

935. ஆலமாமரத்தி னிலைமே லொருபாலகனாய்
ஞாலமேழு முண்டா னரங்கத் தரவி னணையான்
கோலமாமணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்ல தோரெழில்
நீலமேனி யையோ நிறை கொண்டதென் நெஞ்சினையே.

அவனைக் கண்டேன்: மற்றொன்றைக் காணேன்

936. கொண்டல் வண்ணனைக் கோவல னாய்வெண்ணெய்
உண்ட வாயன்என் னுள்ளம் கவர்ந்தானை
அண்டர் கோனணி யரங்கன்என் னமுதினைக்
கண்ட கண்கள்மற் றொன்றினைக் காணாவே.

அடிவரவு: அமலன் உவந்த மந்தி சதுரம் பாரம் துண்ட கை பரி ஆலம் கொண்டல்-கண்ணி

திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்

கண்ணி நுண்சிறுத்தாம்புத் தனியன்கள்

ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச்செய்தவை...

அவிதிதவிஷயாந்தரஸ்ஸடாரே
ருபநிஷதாமுபகாநமாத்ரபோக:
அபசகுணவஸாத் ததேகஸேஷீ
மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து.

இரு விகற்ப நேரிசை வெண்பா

வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ்செய்த, மாறன் சடகோபன் வண்குருகூர்- ஏறு, எங்கள் வாழ்வாமென் றேத்தும் மதுரகவி யார்எம்மை ஆள்வார் அவரே யரண்.

மதுரகவியாழ்வார் அருளிச்செய்த கண்ணி நுண்சிறுத்தாம்பு

மதுர கவிகள் நம்மாழ்வாரைத் தவிர வேறு எவரையும் அறியாதவர்; அவரது பேரருள் பெற்ற உண்மைச் சீடர்; உலகில் ஆசிரிய பக்தி எப்படி இருக்கவேண்டும் என்பதையும், ஆசாரியன் செய்யும் பேருபகாரத்தையும் எடுத்துக் கூறியவர். பகவானால் செய்யமுடியாததையும் ஆசாரியர் செய்து காட்டக்கூடியவர் என்பதை அறுதி இட்டவர். மதுர கவிகளின் பாடல்கள் மதுரமானவை.

நம்மாழ்வாரின் பெருமைகளை மதுரகவிகள் அருளிய கண்ணி நுண் சிறுத்தாம்பைக் கொண்டே அறியமுடியும். மதுரகவிகள் தம் பிரபந்தத்தில் நம்மாழ்வாரை ஒன்பது முறை நம்பி என்று கூறியுள்ளார். திருவாய்மொழி ஸேவிக்கும் முன்பு கண்ணி நுண் சிறுத்தாம்பு ஸேவிப்பது வழக்கம். நாதமுனிகளுக்கு நம்மாழ்வாரைப் பெற்றுக் கொடுத்ததும் கண்ணி நுண்சிறுத்தாம்பே.

கலி விருத்தம்

நம்மாழ்வார் என்றால் நா இனிக்கும்

937. கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணி யபெரு மாயன்என் னப்பனில்
நண்ணித் தென்குரு கூர்நம்பி யென்றக்கால்
அண்ணிக் கும்அமு தூறுமென் நாவுக்கே.

நம்மாழ்வாரே என் தெய்வம்

938. நாவி னால்நவிற் றின்ப மெய்தினேன்
மேவி னேனவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்றறி யேன்குரு கூர்நம்பி
பாவி னின்னிசை பாடித் திரிவனே.

குருகூர் நம்பிக்கு அடியவன் நான்

939. திரிதந் தாகிலும் தேவ பிரானுடை
கரிய கோலத் திருவுருக் காண்பன்நான்
பெரிய வண்குரு கூர்நகர் நம்பிக்காள்
உரிய னாய்அடி யேன்பெற்ற நன்மையே.

சடகோபனே என்னை ஆள்கிறான் 

940. நன்மை யால்மிக்க நான்மறை யாளர்கள்
புன்மை யாகக் கருதுவ ராதலின்
அன்னை யாயத்த னாயென்னை யாண்டிடும்
தன்மை யான்சட கோபனென் நம்பியே.

குருகூர் நம்பிக்கே நான் அன்பன்

941. நம்பி னேன்பிறர் நன்பொருள் தன்னையும்
நம்பி னேன்மட வாரையும் முன்னெல்லாம்
செம்பொன் மாடத் திருக்குரு கூர்நம்பிக்
கன்ப னாய்அடி யேஞ்சதிர்த் தேனின்றே.

குருகூர் நம்பி என்னை இகழமாட்டான்

942. இன்று தொட்டு மெழுமையு மெம்பிரான்
நின்று தன்புக ழேத்த வருளினான்
குன்ற மாடத் திருக்குரு கூர்நம்பி என்று
மென்னை யிகழ்விலன் காண்மினே.

சடகோபன் என் பழவினைகளை அகற்றினான்

943. கண்டு கொண்டென்னைக் காரிமா றப்பிரான்
பண்டை வல்வினை பாற்றி யருளினான்
எண்டி சையு மறிய இயம்புகேன்
ஒண்ட மிழ்ச்சட கோப னருளையே.

திருவாய்மொழியே உலகில் சிறந்தது

944. அருள்கொண் டாடு மடியவ ரின்புற
அருளி னானவ் வருமறை யின்பொருள்
அருள்கொண் டாயிர மின்தமிழ் பாடினான்
அருள்கண் டீரிவ் வுலகினில் மிக்கதே.

வேதப்பொருளை நெஞ்சுள் நிறுத்தினான் சடகோபன்

945. மிக்க வேதியர் வேதத்தி னுட்பொருள்
நிற்கப் பாடியென் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர்ச்சட கோபனென் நம்பிக்குஆட்
புக்க காத லடிமைப் பயனன்றே.

நம்பி! திருவடிக்கு அன்புகாட்டவே முயல்கின்றேன்

946. பயனன் றாகிலும் பாங்கல ராகிலும்
செயல்நன் றாகத் திருத்திப் பணிகொள்வான்
குயில்நின் றார்ப்பொழில் சூழ்குரு கூர்நம்பி
முயல்கின் றேனுன்றன் மொய்கழற் கன்பையே

இப்பாடல்களை நம்புவர்க்கு வைகுந்தம் உண்டு

947. அன்பன் தன்னை யடைந்தவர் கட்கெல்லாம்
அன்பன் தென்குரு கூர்நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்னசொல்
நம்புவார்ப்பதி வைகுந்தம் காண்மினே.

அடிவரவு: கண்ணி நாவினால் திரி நன்மையால் நம்பி இன்று கண்டு அருள் மிக்க பயன் அன்பன்-வாடினேன்

(குறிப்பு: ஈண்டுள்ள பாடல்கள் அந்தாதித் தொடையாக அமைந்துள்ளன. ஒரு பாடலின் ஈறு அடுத்த பாடலின் முதலாக அமையத் தொடுப்பதே அந்தாதி.)

மதுரகவியாழ்வார் திருவடிகளே சரணம்

முதலாயிரம் ஸம்பூர்ணம்.

 
மேலும் முதலாயிரம் »
temple news
பொது தனியன்கள் வடகலை ஸம்ப்ரதாயம் ஸ்ரீ வேதாந்த தேசிகன் தனியன் ராமாநுஜ தயாபாத்ரம் ஜ்ஞாநவைராக்ய ... மேலும்
 
temple news
திருப்பாவைத் தனியன்கள் பட்டர் அருளிச்செய்தது நீளாதுங்க ஸ்தநகிரி தடீஸுப்த முத்போத்ய க்ருஷ்ணம் ... மேலும்
 
temple news
பெருமாள் திருமொழித் தனியன்கள் உடையவர் அருளிச் செய்தது நேரிசை வெண்பா இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar