பதிவு செய்த நாள்
20
டிச
2017
01:12
அம்மாபேட்டை: வைகுண்ட ஏகாதசி பெருவிழா, சேலம், அம்மாபேட்டை, சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், திருநெடுந்தாண்டகத்துடன், நேற்று முன்தினம் தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான நேற்று, சவுந்தரராஜர் உறியில் தொங்கவிட்டுள்ள வெண்ணெய் தாழியை ஏணியில் ஏறி திருடும், களவாடும் கண்ணன் அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிரபந்த சேவையில் திருப்பல்லாண்டு முதல் பாடலை பாடி, பகல்பத்து உற்சவத்தை, பட்டாச்சாரியார்கள் தொடங்கினர். தொடர்ந்து ஒன்பது நாட்கள், கோவர்த்தன கோவிந்தன், கைத்தலம் பற்றிய மதுசூதனன், கிடந்தவாறு எழுந்து பேசும் கேசவன், அரங்கமா நகருளான், வதரி நாராயணன், திருநறையூர் நம்பி, உலகளக்கும் மாயன், வைகுண்டநாதன், நாச்சியார் திருக்கோலம் உள்ளிட்ட அலங்காரங்களில் காட்சியளிப்பார். சொர்க்கவாசல் திறப்பு, வரும், 29 அதிகாலை, 5:00 மணிக்கு நடக்கிறது. அன்றிரவு முதல், ராப்பத்து உற்சவம் தொடங்கி, 10 நாட்கள் நடக்கும். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், உற்சவதாரர்கள் செய்துள்ளனர். அதேபோல், சேலம், பட்டைக்கோவில் வரதராஜ பெருமாள், உத்தமசோழபுரம், ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகிரிநாத பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதசி பெருவிழா, பகல்பத்து உற்சவத்துடன் தொடங்கியது.