பதிவு செய்த நாள்
22
டிச
2017
12:12
திருப்பூர் : “சனி பிடித்தால் பயப்பட வேண்டாம்; அனுமனை வழிபட்டால், எல்லா துன்பங்களும், நீங்கி விடும்,” என, சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசினார். ஸ்ரீ வீர ஆஞ்சநேய பக்த பேரவை சார்பில், கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு, அவிநாசி ஸ்ரீ வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் நடந்து வருகிறது; இதில்,‘நள சரித்திரம்’ என்ற தலைப்பில், சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது: போதும் என்ற மனநிலை இருந்தால், மனிதர்களுக்கு துன்பம் இல்லை. நளச்சக்ரவர்த்தி ஆட்சி செய்த நாட்டில், பருந்தும், கிளியும் ஒரே கூட்டில் ஒற்றுமையாக வசிக்கும் அளவுக்கு, சுபிட்ஷம் இருந்தது. அங்கு வந்த ஒரு அன்னபட்சி, நளனுக்கும் தமயந்திக்கும் தூது சென்று, அவர்களின் காதலை வளர்த்தது. அது தான், அன்னம் விடு தூதானது.
முந்தைய ஜென்மத்தில், ஒரு வேடன், தன் மனைவியுடன் காட்டு குகையில் வசித்தான். அவ்வழியே இருட்டில் வந்த ஒரு துறவியை வரவேற்று, உணவளித்து, குகைக்குள் தங்க வைத்தான். நள்ளிரவில், குகைக்கு வெளியில் காவலிருந்த வேடனை, கொடிய மிருகம் கொன்றது. இதையறிந்து, அவன் மனைவி உயிர்விட்டாள். போன பிறவியில், வேடனாக இருந்தவன் நளனாகவும், வேடனின் மனைவி, தமயந்தியாகவும் பிறந்தனர். அன்னபட்சியாக வந்தது, குகையில் வந்து தங்கிய துறவியே. துறவியாக வந்து, தம்பதியை பிரித்தவர், அன்னபட்சியாக வந்து, நளன், தமயந்தியை ஒன்று சேர்த்தார். பிரச்னைகள் இல்லாமல், வாழ்க்கை இல்லை; அதை சமாளிக்க வேண்டும்.
‘சனி’ பிடித்துவிட்டது என, பயப்பட தேவையில்லை. இறைவழிப்பாட்டால், அதன் பாதிப்புகளை தவிர்க்கலாம். இறைவனின் நாமத்தை சொல்பவர்களை, ‘சனி’ ஒன்றும் செய்யாது. ‘சனி’ பிடித்தால், அனுமனிடம் செல்ல வேண்டும். ‘சனி’யால் பாதிக்கப்படுவோர், நள சரித்திரம் கட்டாயம் கேட்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.