பதிவு செய்த நாள்
23
டிச
2017
12:12
புதுடில்லி : சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடக்கும் ஆருத்ரா விழாவில் பங்கேற்பதற்காக, இலங்கையில் உள்ள தமிழர்கள், கடல் வழியாக பயணம் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும், மார்கழி திருவெம்பாவை விழா எனப்படும் ஆருத்ரா தரிசன விழா, டிசம்பர் மாதத்தில் நடக்கும். இந்த ஆண்டு விழா, டிச., 27 முதல், 2018 ஜன., 3 வரை நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவில் பங்கேற்பதற்காக, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து, சிவ பக்தர்கள் வருகை தருகின்றனர்.இலங்கையில் இருந்து, விமானம் மூலம் செல்வதற்கு அதிக செலவாவதால், பலர் இந்த விழாவில் பங்கேற்க முடிவதில்லை. அதனால், கடல் மார்க்கமாக பயணம் செய்ய அனுமதி தர வேண்டும் என, சிவசேனை என்ற அமைப்பை துவக்கியுள்ள மறவன்புலவு சச்சிதானந்தன், இலங்கை அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.அவருடைய கோரிக்கையை இலங்கை அரசு ஏற்றுக் கொண்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறையில் இருந்து, சென்னைக்கு கடல் மார்க்கமாக வர, மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.