பதிவு செய்த நாள்
25
டிச
2017
11:12
சிவகாசி: ”இறைவனை அடைவது தான் வாழ்க்கையின் முதல் லட்சியமாக இருக்க வேண்டும்.மக்களை இறைவனாகக் கருதி தொண்டு செய்ய வேண்டும்,” என மதுரை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் கமலாத்மானந்தர் சிவகாசியில் நடந்த ஆன்மிக வெள்ளிவிழா மாநில மாநாட்டில் பேசினார். சிவகாசி கோணம்பட்டியில் ராமகிருஷ்ணர், சாரதாதேவி, விவேகானந்தர் பக்தர்களின் 25வது வெள்ளி விழா மாநில மாநாட்டின் இரண்டாம்நாள் விழா நேற்று காலை 6:00 மணிக்கு துவங்கியது.
தர்மாத்மானந்த ஜி மங்கள ஆரத்தி செய்தார். ஆத்மனானந்தர் வழிகாட்டுதல் தியானத்தை ஒருங்கிணைந்து நடத்தினார். அகில உலக ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் பொதுதுணைத்தலைவர் கவுதமானந்தஜி மகராஜ் மற்றும் ஊட்டி ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ராகவேஷானந்தர் விழா மலரை வெளியிட்டனர். இதில் கமிட்டி நிர்வாகி தாமரைக்கண்ணன், ஐ.நா., சபை ஊழியரும் கமிட்டி உறுப்பினருமானசந்திரசேகரன் வேலுச்சாமி உட்பட பலர் கலந்துகொண்டனர். கும்பகோணம் ஜனார்த்தனனின் வயலின் கச்சேரி நடந்தது. இதையடுத்து ராமகிருஷ்ணமடத்தின் தலைவர்கள் பேசினர்.
ஆசாபாசங்கள் விலகும் : மதுரை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் கமலாத்மானந்தர் பேசியதாவது: ராமகிருஷ்ணரின் வாழ்க்கை மூன்று முக்கிய செய்திகளை உலகிற்கு தருகிறது. இறைவனை அடைவது தான் வாழ்க்கையின் முதல் லட்சியமாக இருக்க வேண்டும். மக்களை இறைவனாகக் கருதி தொண்டு செய்ய வேண்டும். எல்லா மதங்களும் இறைவன் ஒருவனே என்று தான் கூறுகின்றன. எனவே சமய சமரசம், மத நல்லிணக்கம் நமக்கு அவசியம் இருக்க வேண்டும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, பிறகு பலாப்பழத்தை அறுக்க வேண்டும். அப்போது தான் பிசின் ஒட்டாது. இதுபோல் மனதில் பக்தியை வளர்த்துக் கொண்டு, நாம் உலகில் வாழ வேண்டும். அவ்விதம் செய்தால், உலகப்பற்றில் நாம் சிக்கிக்கொள்ள மாட்டோம். நாம் கிழக்கு திசையை நோக்கி சென்றால், இயல்பாகவே மேற்கு திசையிலிருந்து விலகுகிறோம். இதுபோல் நம் மனம் இறைவனை நோக்கி சென்றால், உலகின்ஆசபாசங்களிலிருந்து விலகி விடும். மனம் ஒரு வெள்ளைத்துணிபோன்றது. எந்த சாயத்தில் தேய்த்தாலும் அந்தச் சாயத்தை வெள்ளைத்துணி பெற்று விடும். இதுபோல் நம் மனதில் இறைவனைப் பற்றிய சிந்தனை என்ற சாயத்தில் தேய்த்து எடுக்க வேண்டும். அப்போது மனம் தெய்வீகத்தன்மை என்ற சாயத்தை பெற்றுவிடும். வயிற்றுபசிக்கு உணவு தேவை. ஜபம், தியானம், பிரார்த்தனை ஆகியவை ஆன்மாவுக்கு உரிய உணவாகும். இவ்வாறு அவர் பேசினார். இன்று (டிச., 25) சாரதாதேவி தினமாகவும், நாளை விவேகானந்தர் தினமாகவும் கொண்டாடி மாநாடு நிறைவு பெறுகிறது.