பதிவு செய்த நாள்
01
ஜன
2018
02:01
திருத்தணி : திருத்தணி முருகன்கோயிலில், நேற்று நடந்த திருப்படி திருவிழாவில், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, நான்கு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர். திருத்தணி முருகன் கோயிலில், திருப்படி திருவிழா நேற்று துவங்கியது. விழாவையொட்டி, காலை 8:30 மணிக்கு சரவண பொய்கை குளம் அருகில் உள்ள மலையடிவாரத்தில், கோயில் தக்கார், ஜெய்சங்கர், இணை ஆணையர், சிவாஜி, அரக்÷õணம் எம்.பி. அரி, திருத்தணி எம்.எல்.ஏ., நரசிம்மன், ஆவின் சேர்மன், சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். பஜனை குழவினரை வரவேற்று, படித் திருவிழாவை துவக்கி வைத்தனர்.
கோயில் நிர்வாகம், சார்பில், 365 படிகளிலும், கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைக்கப்பட்டது. தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பஜனை கோஷ்டியினர், ஒவ்வொரு படியிலும், பக்தி பாடல்கள் பாடிவாறு மலைக்கோயிலுக்கு சென்று மூலவரை வழிபட்டனர். மேலும், பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை தீர்க்க, ஒவ்வொரு படிக்கும், மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, கற்பூரம் ஏற்றியவாறு மலைக்கோயிலுக்கு சென்று வழிபட்டனர். காலை, 11:00 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக, அதிகாலை, 4:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு, தங்க கீரிடம், தங்கவேல், பச்சை மாணிக்கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று நடந்த படித்திருவிழாவில், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோயிலில் குவிந்ததால், மாவட்ட எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.