பதிவு செய்த நாள்
01
ஜன
2018
03:01
மேட்டுப்பாளையம்;தாசம்பாளையத்தில் உள்ள ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவிலில், நாளை அதிகாலை, 5:30 மணிக்கு, மார்கழி மாத, 17ம் நாள் வழிபாடாக, ’அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்...’ என்று துவங்கும் பாசுரம் பக்தர்களால் பாடப்படுகிறது. மேட்டுப்பாளையம் அடுத்த தாசம்பாளையத்தில், ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு அலர்மேல் மங்கை சமேதராக ஸ்ரீனிவாசப் பெருமாள் அருள் பாலிக்கிறார். கோவில் வளாகத்தில் சக்கரத்தாழ்வார், ராமானுஜருக்கு தனி சன்னதிகளும், 12 ஆழ்வார்கள் போட்டோக்கள் வைத்தும், பக்தர்கள் வழிபடுகின்றனர். கோவிலில், மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில், திருப்பாவை பாடப்படுகிறது. தை மாதம் முதல் தேதியன்று திருப்பாவை சாற்றுமுறை ஆண்டாள் ரங்கமன்னார் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடும், பஜனையும் நடக்கிறது.
புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை கருடசேவையும், அதை தொடர்ந்து நவராத்திரி உற்சவமும், விஜயதசமி பூஜையும், சுவாமி புறப்பாடும் இங்கு நடந்து வருகிறது. இக்கோவிலில் நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, சுப்ரபாதம், திருப்பாவை பாடப்பட்டது. அதன்பின், அலங்கார பூஜை நடந்தது. நாளை காலை, 5:00 மணிக்கு, மார்கழி, 17ம் நாள் வழிபாடாக, திருப்பாவையின், ’அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும், எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்...’ என்று துவங்கும் பாடலை பக்தர்கள் பாடுகின்றனர். ’ஆடைகளையும், குளிர்ந்த நீரையும், உணவையும் பிறர் திருப்திப்படும் அளவுக்கு, தர்மம் செய்யும் எங்கள் தலைவரான நந்த கோபரே, தாங்கள் எழுந்தருள வேண்டும்; கொடி போன்ற இடைகளையுடைய பெண்களுக்கெல்லாம் தலைவியான இளகிய மனம் கொண்ட யசோதையே, மங்களகரமான தீபம் போன்ற முகத்துடன் பிரகாசிப்பவளே நீ எழ வேண்டும்; விண்ணையே கிழித்து, உன் திருவடிகளால் உலகலந்த, தேவர்களின் தலைவனான எங்கள் கண்ணனே நீர் கண் விழிக்க வேண்டும்; செம்பொன்னால், செய்த சிலம்புகளை அணிந்த, செல்வ திருமகனான பலராமனே நீயும் உன் தம்பியும், உறக்கத்தில் இருந்து எழுந்து எங்களுக்கு, தரிசனம் தரவேண்டும்’ என்பதே இப்பாடலின் பொருள்.