ஆடுகின்றானடி தில்லையிலே! அதை பாட வந்தேன் அவன் எல்லையிலே!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2018 01:01
ஆருத்ரா தரிசனமான இன்று நடராஜரை வழிபடும் விதத்தில் இந்த ஸ்தோத்திரம் தரப்பட்டுள்ளது. இதைப் படித்தால் நன்மை உண்டாகும்.
● பிரகாசம் மிக்க சபையில் நடனமாடும் ஈசனே! தில்லை நடராஜனே! தில்லை நகர், தீட்சிதர்களால் பூஜிக்கப்படுபவனே! காலனை உதைத்தவனே! பக்தர்களை காக்க, சூலம் ஏந்தியவனே! கருணை மிக்கவனே! மனக்கவலை தீர்ப்பவனே! சித்திர சபையின் நாயகனே! எங்களுக்கு ஆரோக்கிய வாழ்வை அளித்தருள வேண்டும்.
● நெற்றிக் கண் கொண்டவனே! பதஞ்சலி, வியாக்ரபாதருக்கு நடன காட்சி அளித்தவனே! கோவிந்தராஜ பெருமாளை தோழனாகப் பெற்றவனே! புலித்தோலை ஆடையாக உடுத்தியவனே! பவானி என்னும் சிவகாமி அன்னையை மணந்தவனே! ஆடலில் வல்லவனே! உன் திருவடியை சரணடைந்த எங்களுக்கு செல்வ வளம் தந்தருள வேண்டும்.
● மன்மதனை எரித்தவனே! பாம்பை அணிகலனாகச் சூடியவனே! வேதத்தின் சாரமாகத் திகழ்பவனே! ஜடாமுடி தரித்தவனே! திருவாதிரை அபிஷேகத்தில் மகிழ்பவனே! நந்திகேஸ்வரருடன் திருநடனம் புரிபவனே! உன் தாமரைப் பாதத்தில் தஞ்சம் அடைந்து விட்டோம். உன் அருளால் எங்கள் குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்திருக்க வேண்டும்.
● பாவம் போக்குபவனே! பார்வதியுடன் விளையாடி களிப்பவனே! வேத வித்தகனே! விரும்பும் வரங்களை அளிப்பவனே! திருநீறு, ருத்ராட்ச மாலை அணிந்தவர்களை காப்பவனே! மாணிக்க வாசகருக்கு அருள்புரிந்தவனே! உன் அருளால் இந்த உலகிலுள்ள உயிர்கள் எல்லாம், இன்புற்று வாழ வேண்டும்.