பதிவு செய்த நாள்
04
ஜன
2018
01:01
உடுமலை: உடுமலை, மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, மார்ச் 20ம்தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்குகிறது. உடுமலையில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா நடக்கிறது. இவ்விழாவையொட்டி, சுற்றுப்பகுதி கிராம மக்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். நடப்பாண்டில் தேர்த்திருவிழா உற்சவத்துக்கான அட்டவணையை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன் படி, மார்ச், 20ம் தேதி நோன்பு சாட்டப்படுகிறது. 27ம்தேதி மாலை, 7:00 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் கம்பம் போடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 29ம்தேதி கிராம சாந்தி மற்றும் வாஸ்து சாந்தி இரவு 12:00 மணிக்கு நடக்கிறது. மார்ச் 30ம் தேதி மதியம் 1:00 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. பூவோடு நிகழ்வு, மார்ச் 30ம்தேதி துவங்கி, ஏப்., 3ம்தேதி இரவு 10:00 மணிக்கு நிறைவு பெறுகிறது.
ஏப்., 4ம்தேதி அதிகாலை, 4:00 மணிக்கு மாவிளக்கு, மற்றும் மாலை, 3:00 மணிக்கு திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது. ஏப்., 5ம்தேதி, காலை, 6:45 மாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளி, மாலை, 4:00 மணிக்கு தேர் புறப்பாடு நிகழ்வும் இடம்பெறுகிறது. ஏப்., 6ம் தேதி, காலை, 8:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், இரவு 8:00 மணிக்கு பரிவேட்டை முடித்து, இரவு 11:00 மணிக்கு வாணவேடிக்கை நடக்கிறது. ஏப்., 7 ம்தேதி காலை, 8:15 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்வும், காலை, 11:00 மணிக்கு மகாபிேஷகமும், மதியம் 12:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் நோன்பு நிறைவுபெறுகிறது. அன்று, மாலையில், அம்மனின் பூப்பல்லக்கு பவனியும் நடக்கிறது. மேலும், மார்ச் 30ம்தேதி முதல் திருவிழா நிறைவுபெறும் வரை, நாள்தோறும், மாலை, 7:30 மணிக்கு அம்மன் புஷ்ப அலங்காரத்துடன் திருவீதி உலா நடக்கிறது. தேர்த்திருவிழாவையொட்டி, மார்ச் 30ம்தேதி முதல் கோவில் வளாகம் மற்றும் குட்டைத்திடலில் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.