பதிவு செய்த நாள்
06
ஜன
2018
12:01
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவிலில் பார் வேட்டை உற்சவம், இந்த ஆண்டு மீண்டும் நடத்துவதற்கு கிராமத்தினர் முடிவு செய்துள்ளனர்.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பார் வேட்டை உற்சவம், ஆண்டு தோறும், காணும் பொங்கல் அன்று திம்மசமுத்திரம் பகுதியில் வெகு விமரிசையாக நடைபெறும். அதற்காக அன்று காலை, அக்கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி அம்மனை கோவிலில் இருந்து அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடக்கும். இந்த பார்வேட்டை உற்சவம், கடந்த ஆண்டு நடைபெறவில்லை. புதிய உற்சவர் சுவாமி சிலைக்கு கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்த ஆண்டு, அக்கிராமத்தினர் உற்சவத்தை நடத்த திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பார் வேட்டை உற்சவத் தில், கலைக்குழுவினர் கலந்து கொள்வர். வாத்தியங்கள் மற்றும் வாண வேடிக்கைகளுடன் திம்மசமுத்திரம் கிராமத்திற்கு, சுவாமி ஊர்வலமாக செல்வார். அங்குள்ள கோவில் வளாகத்தில் ஏகாம்பரநாதர் எழுந்தருள்வார். பகல், 2:30 மணிக்கு மஹா அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து அக்கிராமத்தில் தேவார பண் இசை மற்றும் பக்தி சொற்பொழிவு நடைபெறும். இரவு வாண வேடிக்கை முடிந்ததும், ஏகாம்பரநாதர் காஞ்சிபுரம் கோவிலை சென்றடைவார்.