பதிவு செய்த நாள்
13
ஜன
2018
12:01
சென்னிமலை: சென்னிமலையில், மார்கழி மாதம் முழுவதும், பிராட்டியம்மன் கோவிலில் இருந்து, பஜனை குழுவினர் புறப்பட்டு, சென்னிமலை நான்கு ராஜா வீதிகளிலும், கிழக்கு ராஜா வீதி கைலாசநாதர் கோவிலிலும் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடி, நகர் முழுவதும் சாம்பிராணி போட்டு அதிகாலை வலம் வருவர். இந்த பஜனை பாடல் குழுவினர், கைலாசநாதர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தி, இன்று நிறைவு செய்கின்றனர்.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது: பல ஆண்டுகளுக்கு முன், பஜனை குழுவில், 50க்கும் மேற்பட்டோர் இருந்தனர். இளைஞர்கள் ஆர்வம் காட்டாததால் வெகு சிலர் மட்டும் பாரம்பரியம், பண்பாடு, ஆன்மிகம் விட்டு விடக்கூடாது என தொடர்ந்து, மார்கழி மாத பஜனை குழு நடத்துகின்றனர். சினிமா உட்பட பல பொழுது போக்கு நிகழ்ச்சிகளில், தற்போது பஜனை கோஷ்டியினரை, கேலியாக சித்தரிக்கின்றனர். இதனால் பலருக்கு ஆர்வம் குறைந்து விட்டது. பங்கேற்பதையும் குறைத்துக் கொண்டு விட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர். பணத்தைப் போல், புண்ணியத்தை சம்பாதிக்க முடியாது என்பதை உணர, இன்றைய தலைமுறையும், ஒரு காலத்தில் உணரும்.