பதிவு செய்த நாள்
15
ஜன
2018
12:01
திண்டுக்கல்;திண்டுக்கல் மாவட்டத்தில் பொங்கல் விழா கோலாகமாக நடந்தது. விவசாயிகள் குடும்பத்துடன் புத்தாடை அணிந்து வீடுகள் முன் பொங்கலிட்டு சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வழிபட்டனர். திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் கோயில், அபிராமியம்மன் கோயில், வெள்ளை விநாயகர் கோயிலில், ரயிலடி சித்தி விநாயகர் கோயில், ராம்நகர் விநாயகர் கோயில், நாகல் நகர் வரதராஜ பெருமாள் கோயில், எம்.வி.எம். நகர் பெருமாள் கோயில்,கூட்டுறவு நகர் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் உள்பட அனைத்து கோயில்களில் பக்தர்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். கிராமங்களில் உள்ள கோயில்களின் முன் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். நாளை ஜல்லிக்கட்டு நடத்த உள்ள நத்தமாடிப்பட்டி உள்பட பல ஊர்களில் பொங்கல் விழா களைகட்டியது.
* பிள்ளையார்நத்தம் டாக்டர் ஜாகீர் உசேன் நினைவு சிறுபான்மையினர் உயர்நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. தலைமையாசிரியை வர்ஷினி தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாகி அப்துல் முத்தலீப் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள், மாணவர்கள் சேர்ந்து பள்ளியில் சமத்துவ பொங்கல் வைத்தனர். பொங்கல் கலை நிகழ்ச்சி நடந்தது.
பழநி: தை மாதபிறப்பை முன்னிட்டு, பழநி முருகன் மலைக்கோயிலில் சிறப்பு யாகபூஜை வழிபாடு நடந்தது.தை மாதபிறப்பை முன்னிட்டு, பழநி மலைக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. ஆனந்தவிநாயகருக்கு கும்பகலசங்கள் வைத்து, கணபதிஹோமத்துடன், யாகபூஜை நடந்தது. விநாயகருக்கு கலசநீர் அபிஷேகம் செய்து, லட்டு படைக்கப்பட்டு, வெள்ளிக்கவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேப்போல திருஆவினன்குடி கோயில், பெரியநாயகியம்மன் கோயில், லட்சுமி நாராயணப்பெருமாள் கோயில், பெரியாவுடையார் கோயில் உள்ளிட்ட கோயில்களில், பெருமாள், அம்மன், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்தில், தீபாராதனை நடந்தது.
சின்னாளபட்டி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், விஸ்வரூப தரிசனம் நடந்தது. பால், பன்னீர், இளநீர், தயிர், தேன் உள்ளிட்ட திரவிய அபிேஷகத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. உற்சவருக்கு, சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள், வழிபாடு செய்தனர்.* அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், மூலவருக்கு கரும்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.
* தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. வாலை, சக்தி அம்மனுக்கு, திருமஞ்சன அபிேஷகம் செய்யப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மகா தீபாராதனையில், சுற்றுப்புற பகுதிகளைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்
.* கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், சித்தையன்கோட்டை காசிவிசுவநாதர் கோயில், செம்பட்டி கோதண்டராமர் கோயிலில், விசேஷ அபிேஷக, ஆராதனைகள் நடந்தது.
வடமதுரை: வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் கோயிலில் பொங்கலை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ராஜ அலங்காரத்தில் சுவாமி புறப்பட்டு கேடயத்தில் நான்கு ரத வீதிகள் வழியே நகர் வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் குடும்பத்தினரோடு கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். கோயில் முன்பாக இளைஞர் மன்றம் சார்பில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல வடமதுரை, எரியோடு சுற்றுப்பகுதி கிராமங்களில் அமைந்துள்ள குல தெய்வ கோயில்களுக்கும் அதிகளவில் மக்கள் சென்று பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
தாண்டிக்குடி: தாண்டிக்குடி மலைப்பகுதியில் முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. தாண்டிக்குடி பாலமுருகன், பண்ணைக்காடு மயான காளியம்மன், கானல்காடு பூதநாச்சியம்மன் மற்றும் கிராம வன தேவதைகள், குலதெய்வ கோயில்களில் சிறப்பு அபிேஷக, ஆராதனை மற்றும் அபிேஷகம் நடந்தது. அதிகாலையில் சூரிய பொங்கல் வைத்து கிராமத்தினர் வழிப்பட்டனர். ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த பாலமுருககனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தடியன்குடிசை நறுமண சுற்றுலா தல பகுதியில் நிலவும் இதமான சூழலில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர்.
வேடசந்துார்: வேடசந்துார் ஈஸ்ட் மேன் நுாற்பாலையில், பொங்கல் விழா நடந்தது. கூம்பூர் எஸ்.ஐ., பெரியசாமி தலைமை வகித்தார்.வேடசந்துார் ஸ்டேட் பாங்க் மேலாளர் ராஜு முன்னிலை வகித்தார். நுாற்பாலையின் மனிதவளத்துறை துணைதலைவர் செந்தில்குமார் வரவேற்றார். தொழிலாளர்கள் பங்கேற்ற நடனபோட்டி மற்றும் தேவராட்டம் உள்ளிட்டகலை நிகழ்ச்சிகள் நடந்தன. முதுநிலை துணைத்தலைவர் விஜயகுமார், ஏட்டு ராஜமாணிக்கம்,பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.