பதிவு செய்த நாள்
15
ஜன
2018
12:01
கம்பம்: ‘அகிம்சை, மாமிசம் உண்ணாமை, கொல்லாமை, தியானம், நல்லறிவு, நல் ஒழுக்கம், பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமை’ என்பன உள்ளிட்ட பல்வேறு அரிய கருத்துக்களை இந்த சமுதாயத்திற்கு சொல்லித்தந்தது சமண மதம். அதில், 24 வது தீர்த்தங்கரராக தோன்றிய மகாவீரர் தான் ஆணிவேராக இருந்துள்ளார். பீஹார் மாநிலம் குண்டாவில் கி.மு. 599ல் பிறந்தார். தனது 30 வயதில் துறவறம் பூண்ட மகாவீரர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவராவார். எளிய வாழ்க்கையும், துறவற நிலையை பின்பற்றுவதே சமணம் என்ற பொருளாகும். இத்ததைய பெருமைக்குரிய சமணர்கள் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் 9 ம் நுாற்றாண்டில் பல பகுதிகளில் தங்கி தங்களின் மதக் கொள்கைகளை பரப்பினர்.
தமிழகத்தில் 26 குகைகள், 200 கல் படுக்கைகள், 100 சமண சிற்பங்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் மிக முக்கியமானதாக உத்தமபாளையம் சமண சிற்பங்கள் உள்ளன. அவை அவர்களின் வாழ்க்கையை நமக்கு படம் பிடித்துக் காட்டும் காலக் கண்ணாடியாக திகழ்கிறது. இங்கு கருப்பணசாமி கோயில் மலையடிவாரத்தில் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ள சமணர் சிற்பங்கள் பலரையும் கவர்கிறது. இங்கு 21 சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அதற்கு அருகில் உள்ள சுனை நீர் ஒரு காலத்தில் இப்பகுதியில் குடிநீராக பயன்பட்டது. சமண மதத்தை பரப்புவதற்காக கல்வியறிவு, மருத்துவம் போன்ற சேவைகள் செய்துள்ளனர். இங்குள்ள சமணர் சிற்பங்களை தொல்லியல் துறையினர் 50 ஆண்டிற்கு முன்பே கண்டுபிடித்து அழியாமல் பாதுகாக்க கற்களால் ஆன செட் அமைத்துள்ளனர். ஆனால் காலப் போக்கில் இவை கேட்பாரற்று சிதைந்து வருகிறது. வரலாற்று பொக்கிஷமாகவும், அதை பறை சாற்றும் காலக்கண்ணாடியாகவும் திகழ்ந்துவரும் இதனை காப்பது அனைவரின் கடமை.