சிவகங்கை;தை முதல் செவ்வாய் கிழமையான நாளை சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் நகரத்தாரின் ’செவ்வாய் பொங்கல்’ நடக்கிறது. இதற்காக ஏற்கனவே இப்பகுதியைச் சேர்ந்த நகரத்தார்களில் திருமணமானோரை ஒரு புள்ளியாக கணக்கிட்டு வரி வசூலிப்பர். தொடர்ந்து அவர்களது பெயரை ’சீட்டில்’ எழுதி பானையில் குலுக்கி ஒரு குடும்பத்தினரை தேர்வு செய்வர். அந்த குடும்பத்தினர் நாளை மாலை நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோயில் முன் முதல் நபராக பெரிய மண்பானையில் பொங்கல் வைப்பார். தொடர்ந்து மற்ற நகரத்தார்கள் வெண்கலம், சில்வர் பானைகளில் பொங்கல் வைக்க துவங்குவர். அவர்களுடன் மற்ற சமூகத்தைச் சேர்ந்தவரும் பொங்கல் வைப்பர். வெண் பொங்கல் மட்டுமே வைக்கப்படும். தொடர்ந்து கண்ணுடைய நாயகி அம்மனுக்கு கிடா வெட்டி, அபிஷேகம் செய்வர். அமெரிக்கா, தாய்லாந்து, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மன் நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை சுற்றுலா, பேரூராட்சித்துறையினர் செய்து வருகின்றனர். நகரத்தார்கள் கூறுகையில், ’மற்ற நிகழ்ச்சிக்கு வர முடியாவிட்டாலும், பொங்கல் விழாவில் தவறாமல் பங்கேற்போம். இவ்விழாவை பாரம்பரியமாக நடத்தி வருகிறோம்,’என்றனர்.