பதிவு செய்த நாள்
16
ஜன
2018
02:01
நகரி;நகரி, கரிய மாணிக்க பெருமாள் கோவிலில், நேற்று, ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது. சித்துார் மாவட்டம், நகரி டவுனில், திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள இணை கோவிலான கரிய மாணிக்க பெருமாள் கோவிலில், கடந்த மாதம், 16ம் தேதி முதல், இம்மாதம், 14ம் தேதி வரை ஆண்டாள் தாயாரின் திருப்பாவை பாடப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் நிறைவு விழா மற்றும் மகர சங்கராந்தி விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, ஆண்டாள் சன்னதியில், சீனிவாச பெருமாளுக்கும், ஆண்டாள் தாயாருக்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடந்தது. அதே போல், நகரி, காமாட்சி சமேத கரகண்டீஸ்வரர் கோவிலில், அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தி பகவான் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், உற்சவரான பார்வதி சமேத பரமேஸ்வரன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவில் உட்புறத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இக்கோவில் தனி சன்னதியில் எழுந்தருளிஉள்ள அய்யயப்ப சுவாமி சன்னதியில் மகரஜோதி பூஜை சிறப்பாக நடந்தது.