பதிவு செய்த நாள்
17
ஜன
2018
01:01
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றிலும், நகராட்சி அனைத்து இந்து சமுதாய சங்க நந்தவனத்திலும், தை அமாவாசையை முன்னிட்டு முன்னோருக்கு, தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபட்டனர்.மேட்டுப்பாளையம் நெல்லித்துறை ரோடு எஸ்.எம்.நகர் அருகே, பவானி ஆற்றின் கரையோரம் நகராட்சி அனைத்து இந்து சமுதாய சங்க நந்தவனம் கடந்த, 13 ஆண்டுகளாக செயல்படுகிறது. இந்த நந்தவனத்தில் மோட்ச விநாயகர், சிவன், கன்னிமார் ஆகிய சன்னதிகள் என மூன்றும் அமையப்பெற்று, மலைமீது சிவன் கோவிலும் உள்ளதால், காசிக்கு இணையாக கருதப்படுகிறது.இங்கு, நேற்று தை அமாவாசையை முன்னிட்டு அதிகாலை, 4:30 மணி முதல் பொதுமக்கள் தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம், திதி கொடுத்தனர். 20 புரோகிதர்கள் பொதுமக்களுக்கு பிண்டம் வைத்து, கர்ம காரியங்களை செய்தனர். இதே போன்று, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே பவானி ஆற்றிலும், பொதுமக்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து, ஆற்றில் பிண்டங்களை கரைத்தனர்.