பதிவு செய்த நாள்
18
ஜன
2018
01:01
மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தை பாதுகாக்க, தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற வழக்கில், அரசுத் தரப்பில் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம் டவுன்ஹால் ரோட்டில் உள்ளது. இங்கு குப்பைகள், கழிவுநீர் தேங்குகிறது. ஆக்கிரமிப்புகள் உள்ளன. கழிவு நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கழிப்பறைகள், குப்பைத் தொட்டிகள் அமைக்க வேண்டும். தெப்பக்குளத்தை முறையாக பராமரித்து, மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கஅரசுக்கு உத்தரவிட வேண்டும் என 2011 ல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பதிவாளர் (நீதித்துறை) மனு தாக்கல் செய்தார். இதை 2011 ல் தானாக முன்வந்து பொதுநல மனுவாக விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றக் கிளை, அவ்வப்போது உத்தரவுகள்பிறப்பித்து வந்தது. இதனடிப்படையில் மதுரை மாநகராட்சி மற்றும் கோயில் நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்து வந்தன. நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ேஹமலதா அமர்வு, அறநிலையத்துறை கமிஷனர், சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை செயலாளரை, இந்நீதிமன்றம் தானாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக இணைத்துக் கொள்கிறது. அவர்கள் தற்போதைய நிலைபற்றி பிப்.,7ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டது.