பதிவு செய்த நாள்
18
ஜன
2018
01:01
சென்னை: ஹிந்து ஆன்மிக கண்காட்சி துவக்கத்தின் முன்னோட்டமாக, அண்ணா பல்கலைக் கழகத்தில், நேற்று யோகா நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று, யோகாசனங்களை செய்து காட்டினர். ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை மையம், பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளையும் இணைந்து, ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியை, வேளச்சேரி குருநானக் கல்லுாரியில், ஜன., 24 முதல், 29ம் தேதி வரை நடத்துகிறது.
இக்கண்காட்சிக்கு மக்களை ஈர்க்கும் வகையில், பல முன்னோட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. முதல் முன்னோட்ட நிகழ்ச்சியாக, விவேகானந்தர் ரத யாத்திரை பூஜை நடந்தது. இரண்டாவது முன்னோட்ட நிகழ்ச்சியாக, ஸ்ரீ கிருஷ்ணா யோகத்தான் என்ற தலைப்பில், யோகாசன நிகழ்ச்சி, கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்தது. தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக் கழகத்தின் யோகாசன துறை தலைவர், இளங்கோவன் முன்னிலையில், 40 பள்ளிகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கான மாணவர்கள், யோகாசனம் செய்தனர். வனம், வன விலங்குகளைப் பாதுகாத்தல்; ஜீவராசிகளைப் பேணுதல்; சுற்றுச்சூழலைப் பராமரித்தல்; பெற்றோர், ஆசிரியர்களை வணங்குதல்; பெண்மையைப்போற்றுதல்... நாட்டுப்பற்றை உணர்த்துதல் ஆகிய ஆறு கருத்துகளை வலியுறுத்தும் வகையில், 20க்கும் மேற்பட்ட யோகாசனங்களை மாணவர்கள் செய்து காட்டினர். சின்மயா யுவகேந்திரா அமைப்பின் அகில உலக தலைவர், சுவாமி மித்திரானந்தா தலைமை தாங்கினார். காக்னிசென்ட் நிறுவன துணை தலைவர் லட்சுமி நாராயணன், பதஞ்சலி யோகா சமிதியின் தமிழ் மாநில தலைவர், பராஸ்மல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.