கோவை : சபரிமலை யாத்திரை மேற்கொள்பவர்களுக்காக சபரிமலை தற்காலிக தபால்நிலையத்தில் முதன்முறையாக அறிமுப்படுத்தப்பட்ட, மை ஸ்டாம்ப் திட்டத்திற்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சபரிமலையில் மகரவிளக்கு சீசன் காலங்களில் ஐயப்பன் கோவிலுக்கு நாடு முழுவதுமிருந்து பக்தர்கள் வந்து செல்வர். அடர்ந்த வனங்கள் நிறைந்த மலைப்பகுதி என்பதால் சீசன் நேரத்தில் மட்டுமே இங்கு தற்காலிக தபால் நிலையம் துவங்கப்படும். வெளியூரிலிருந்து பக்தர்கள் அனுப்பி வைக்கப்படும் சுப நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்களை சன்னிதானம் முன் வைத்து வழிபாடு செய்து பிரசாதம் அனுப்பி வைப்பதே இதன் முக்கியப்பணி. தவிர, ஸ்பீடு போஸ்ட், இ-மணியாடர், பதிவு தபால் மற்றும் மொபைல் ரீச்சார்ஜ் செய்தல் உள்ளிட்ட சேவைகளும் அடங்கும்.
இவ்வாண்டு புதுமையாக முறையில் பக்தர்கள் யாத்திரை வந்ததன் நினைவாக, தங்கள் புகைப்படங்களுடன் கூடிய, மை ஸ்டாம்ப் அச்சிட்டு எடுத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு பக்தர்களிடையே வரவேற்பு கூடியுள்ளது. தபால் நிலையங்களிலே புகைப்படம் எடுத்துக்கொண்டு கையோடு ஸ்டாம்பையும் வாங்கிச்செல்கின்றனர். நாளை வரை மட்டுமே செயல்படும் இந்த தற்காலிக தபால்நிலையத்தில் இதுவரை, 251 பேர், மை ஸ்டாம்ப் திட்டத்தில் பயனடைந்துள்ளதாக, தபால்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.