பதிவு செய்த நாள்
01
பிப்
2018
03:02
ஊட்டி: ஊட்டி எல்க்ஹில் பாலமுருகன் கோவிலில், தைப்பூச விழா, விமரிசையாக நடந்தது. ஊட்டி அருகே எல்க்ஹில் மலையில் உள்ள ஜலகண்டேஸ்வர சுவாமி மற்றும் பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், தைப்பூச திருவிழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது; பின், சிறப்பு பூஜைகள் நடந்தன. அலங்கரிக்கப்பட்ட தேரில், ராஜ அலங்காரத்தில் முருகப் பெருமான், டிராக்டர் வாகனத்தில் திருவீதி உலா சென்றார்.பாம்பேகேசில், ஏ.டி.சி., மார்க்கெட் உட்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாக, முருகன், திருவீதி உலா சென்றார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று, முருகனை தரிசித்தனர். பக்தர்களுக்கு, திருமுருக கிருத்திகை சங்கத்தினர் சார்பில், அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது. பழநி பஞ்சாமிர்தமும் வழங்கப்பட்டது.
ஜெ.எஸ்.எஸ்., பார்மசி கல்லுாரி, என்.எஸ்.எஸ்., மாணவர்கள், நெரிசலை சமாளிக்க உதவினர். படுகரின மக்களின் பஜனை மற்றும் நடனம் நடந்தது. மாவட்டத்தின் பல இடங்களில் இருந்தும், மக்கள் பங்கேற்றனர். கோவிலுக்கு செல்லும் சாலை, பராமரிப்பின்றி படுமோசமாக இருந்ததால், பக்தர்கள் சென்று வர சிரமம் ஏற்பட்டது. அதே போன்று, ஊட்டி எச்.எம்.டி., முனீஸ்வரர் கோவிலில் தைப்பூச திருவிழா நடந்தது; அன்னதானம் வழங்கப்பட்டது.
* கூடலுார், குசுமகிரி குமர முருகன் கோவில் தைப்பூசதேர் திருவிழா, 29ல் துவங்கியது. அதிகாலை, 5:00 கோவில் நடை திறக்கப்பட்டது. 5:30 மணிக்கு கணபதி ஹோமம், 7:00 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார நிகழ்ச்சிகள் நடந்தன. மாலை, 5:00 மணிக்கு விளக்கு பூஜை; 7:00 மணிக்கு உடுக்கு பாட்டு நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம், இரவு, 7:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட முருகன் திருத்தேர் ஊர்வலம் துவங்கியது. நகரின் முக்கிய வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது. நேற்று, காலை, 6:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை சிறப்பு பூஜைகள் நடந்தது. 5:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை கோவில் நடை அடைக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
* கூடலுார், முதல் மைல் முருகன் கோவில், தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம், இரவு முருகன் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இதில், பக்தர்கள் வேல் பூட்டி பங்கேற்றனர். நேற்று, காலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தன.