Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! பழமை மீண்டும் மலரட்டும்:கிறிஸ்துமஸ் நன்னாள் சிந்தனை! பழமை மீண்டும் மலரட்டும்:கிறிஸ்துமஸ் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிறிஸ்துமஸ்: கிறிஸ்து பிறப்பின் சிறப்பு தெரியுமா?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 டிச
2011
02:12

இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு: இயேசுவின் பிறப்பதற்கு முன்னதாக, கி.மு.,700ல் ஏசாயா என்ற தீர்க்கதரிசி, கன்னிகை கர்ப்பதியாகி ஒரு குமாரனை பெறுவாள் என்றார். மேலும்,கடவுள் வானில் ஒரு நட்சத்திர அடையாளத்தை கொடுப்பார் என்றார். இயேசு பிறப்பதற்கு முன்னதாக, கி.மு.,500ல் மீகா என்ற தீர்க்கதரிசி யூதேயா நாட்டிலுள்ள(இஸ்ரேல்)பெத்லகேமில், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் வருகிறார் என்றார்.

இயேசு என்றால்  என்ன அர்த்தம்?

இயேசு என்பதற்கு ரட்சகர், விடுவிப்பவர், காப்பாற்றுபவர், அதிசயமானவர், ஆலோசனை கடவுள், வல்லமை தேவன், நித்திய பிதா, சமாதான பிரபு என்று பொருள். கிறிஸ்து என்றால் தீர்க்கதரிசி, வரும் காரியங்களை முன்னுரைப்பவர் என அர்த்தம்.கிறிஸ்துமஸ் காலத்தில் , வீடுகளில் குடில்கள் அமைத்து இயேசுவின் பிறப்பை சித்தரிப்பர். மாட்டுத்தொழுவங்கள்  மின்னொளியில் ஜொலிக்கும். முதன்முதலாக, இங்கிலாந்தில் தான் கி.பி.,1722ல்  புனித  பிரான்சிஸ் கிறிஸ்துமஸ் குடிலை அறிமுகப்படுத்தினார். இங்கிலாந்தை சேர்ந்த கார்ஸ்லே  என்பவர் முதல் கிறிஸ்துமஸ் வாழ்த்து  அட்டையை கி.பி.,1843ல் தன் நண்பர் ஹென்றி ஹோலோவுக்கு அனுப்பினார். பிறகு இங்கிலாந்து அரச குடும்பத்தினர்  தங்கள் குடும்பத்தை சேர்ந்த  மற்றவர்களுக்கு அனுப்ப துவங்கினர். அமெரிக்காவில் வாழ்த்து  அட்டைகளுக்காக மட்டும்  25 கோடி டாலர் வரை  செலவழிக்கின்றனர். இங்கிலாந்தை 1841ல், அல்பெர்டினாஸ் என்ற மன்னர்  ஆட்சி செய்தார். இவர் விண்ட்சர் என்ற தனது கோட்டையில் முதன்முதலாக  கிறிஸ்துமஸ் மரத்தை நட்டார். இதற்கு முன்பு ஜெர்மனி, ஆஸ்திரியா உட்பட  ஐரோப்பிய பல நாடுகளில் பிர் என்ற மரத்தை அலங்கரிக்கும் வழக்கம் இருந்தது.

இயேசு பிறந்த ஜெருசலேம்: யூதமதம், கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்களின் புனித இடமாக விளங்குவது ஜெருசலேம். மத்திய தரைக்கடலையும் சாக்கடலையும் பிரிக்கிற வளைவில் இந்நகரம் அமைந்துள்ளது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிலைபெற்றுத் திகழ்கிற புண்ணியத்தலம். அமைதி, சாந்தம், சமாதானம் என்று கடவுளை எபிரேய மக்கள் அழைத்தனர். சுமேரிய மொழியில் ஜெரு என்றால் நகரம் . சலேம் என்றால் அமைதி. அமைதியான நகரம் என்பது இதன் பொருள். இந்நகரம் கடவுளால் நிறுவப்பட்டது. ஜெருசலேம் மூன்று பகுதிகளாக உள்ளது. முதற்பகுதி கி.பி.,16ம் நூற்றாண்டில், மன்னர் சுலைமானால் கட்டப்பட்ட மதில்கள் சூழ்ந்த பழைய நகரம். இப்பகுதி பைபிளில் கூறப்பட்டுள்ள ஜெருசலேமை உள்ளடக்கியுள்ளது. இரண்டாம் பகுதி பழைய நகரின் வடக்கே ஒலிவக்குன்றின் சரிவில் அரேபியர்களின் குடியிருப்புகள் அடங்கியுள்ள இடம். இயேசுகிறிஸ்து அடிக்கடி சென்று போதித்த பெத்தானியா இப்பகுதியில் உள்ளது. மூன்றாவது, பழைய நகரின் மேற்கிலும் தெற்கிலும் ச ஐரோப்பிய அமெரிக்காக் கட்டடக்கலையின் பிரதிபலிப்பைக் கொண்ட கட்டடங்கள் உள்ள யூதர்களின் பகுதி. இங்குள்ள புனித கல்லறை ஆலயம் கிறிஸ்தவர்களின் மிக முக்கிய புண்ணிய இடமாக விளங்குகிறது. பைபிளில் கூறப்பட்டுள்ள கிறிஸ்துவின் போதனை, அவரது எழுச்சி, உயிர்த்தெழுதல், விண்ணுலகம் அடைதல் முதலிய முக்கிய நிகழ்ச்சிகள் ஜெருசலேமில் நடைபெற்றதாக கிறிஸ்தவர்கள் பைபிளின் அடிப்படையில் நம்புகின்றனர்.

ஆன்மிக நிகழ்வுகள் நடந்த அநேக இடங்கள் ஜெருசலேமில் உள்ளன. சிலோவாம், பெதத்தா குளங்கள், பைபிளில் குறிப்பிட்டுள்ளபடி இயேசுகிறிஸ்து அற்புதங்கள் செய்து காட்டிய இடங்களாகும். சீலோவாம் குளத்தில் இயேசு ஒரு குருடனுக்குப் பார்வை வரும்படி குணமாக்கினார். பைபிளில் யோவான் ஒன்பதாவது அதிகாரத்தில் இந்நிகழ்ச்சி குறிக்கப்பட்டுள்ளது. ஜெருசலேமில் உள்ள தேவாலயங்கள் இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றோடு தொடர்புடையன. ஓமரின் தேவாலயம், தாவீதின் கல்லறை ஆகியவை இங்கு உள்ளன. இந்நகரின் வடகிழக்குப் பகுதியில் கெத்சமெனே தோட்டம் உள்ளது. இங்கு காணப்படும் சில மரங்கள் இயேசுவின் காலத்திலிருந்தே இருக்கின்றன. பிலாத்துதான் இயேசுவைப் பிடித்து நியாயம் விசாரித்தவன். அவனது மண்டபம் இங்குள்ளது. இவ்வூரின் வடகிழக்கில் கல்வாரி மலை இருக்கிறது. இங்கு தான் இயேசுவை சிலுவையில் அறைந்தனர். கல்வாரி மலை அருகிலுள்ள கல்லறை தோட்டத்தில் இயேசுவை அடக்கம் பண்ணிய கல்லறை உள்ளது. இங்கு தான் இயேசு உயிர்த்தெழவும் செய்தார். இயேசு கிறிஸ்து அவருடைய சீடர்களோடு திருவிருந்தில் (ராப்போஜனம்) பங்கேற்ற இடத்தை மேல்வீட்டறை என்கின்றனர். பைபிளில் கூறப்பட்டிருக்கும் மிகப் பழமையான அநேக இடங்கள் இன்றும் ஜெருசலேமில் உள்ளன.
-எல்.பிரைட், தேவகோட்டை

பாவம் போக்க வந்த பரிகாரி: பாவம் என்னும் நோயை தீர்த்து வைக்கும் பரிகாரியாக இயேசுகிறிஸ்து இந்த பூமியில் அவதரித்தார். கிறிஸ்து என்றால் மேசியா என்றும் தீர்க்கதரிசி என்றும் அர்த்தம். உலகம் முழுவதும் கொண்டாடப்படும் சிறப்பான பண்டிகை கிறிஸ்துமஸ். கிறிஸ்ட்டஸ் மஸ்ஸே அல்லது கிறிஸ்டஸ் மாஸ் என்ற வேர்ச் சொல்லிலிருந்து இந்த வார்த்தை பிறந்தது. கி.பி.,336ல் முதன்முறையாக ரோமாபுரியில் இவ்விழா கொண்டாடப்பட்டது. அனைத்து உயிரினங்களிலும் மனுக்குலம் மட்டுமே பகுத்தறிவு உள்ள உயிரினமாக விளங்குகிறது. பாவத்தை அறிந்தும், தெரிந்தும், அதனால் ஏற்படும் தீமையை உணர்ந்தும் உலகமக்கள் பாவத்தை தொடர்ந்து செய்ன்றனர். பிறக்கும் போதே மனிதனோடு பாவம் தோன்றி விடுகிறது. அதை போக்க பலவித கர்ம, தர்ம காரியங்களை செய்கிறான். ஆனால், எவ்வித பலனும் கிடைக்காமல் மீண்டும் பாவத்திலேயே நிலைத்திருக்கிறான். இந்நிலையில் கடவுள், தான் படைத்த மனுக்குலத்தை பாவத்திலிருந்து மீட்க பூமியில் தோன்றினார்.

கிறிஸ்து பிறப்பின் சிறப்பு: கிறிஸ்துவின் பிறப்பு என்பது ஆண், பெண் திருமண உறவின் மூலம் பிறக்கும் மனிதனை போல அல்லாமல், கடவுளின் மகனாக புனிதத்தன்மை வாய்ந்ததாக அமைந்தது. இவ்வுலக மக்கள், பிறரை அழிப்பதன் மூலம் மகிழ்வதும், தாங்கள் மட்டுமே வாழ வேண்டுமென்ற எண்ணத்துடனும் உள்ளனர். ஆனால், தன்னை இழந்து பிறரை மகிழ்விக்கவே கிறிஸ்து பிறப்பு அமைந்தது. எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, மற்றவர்கள் மனம் மகிழ கடவுள் தன்னை முற்றிலும் தாழ்த்தி, குமாரனென்று பூமியில் பிறந்தார். அவரது பிறப்பு நம்மை மகிழ்விக்கவே ஆகும். துக்கம் மறைந்து மகிழ்ச்சி பிறக்கவும், அச்சம் மறைந்து அமைதி பிறக்கவும், பாவம் மறைந்து மீட்பு பிறக்கவும், நம்மோடு வாழவும் இயேசு கிறிஸ்து அவதரித்தார்.

உயிர்த்தெழுந்த தேவன்: வேதம் சொல்வதன்படி, தற்போதுள்ள உலகம், மனுக்குலத்தின் தலைமகன் ஆதாமிலிருந்து இயேசு பிறக்கும் வரை 4000 ஆண்டுகளும், இயேசு பிறப்பிலிருந்து இன்றுவரை 2000 ஆண்டுகளும் ஆக 6000 ஆண்டுகள் ஓடிக்கொண்டிருக்கிறது. கிறிஸ்துவின் பிறப்பை மையமாக வைத்துதான், உலக வரலாறு இன்றும் செல்கிறது. கிறிஸ்து முதல் ஆதாம் வரை கி.மு.,(கிறிஸ்துவுக்கு முன்)என்றும், கிறிஸ்து பிறப்புக்கு பின்(கி.பி.,) என்றும் கொள்ளப்பட்டுள்ளது. கிறிஸ்து வாழ்ந்த காலம் 34 ஆண்டுகள் மட்டும் என்றாலும், உலகத்தில் பெரும்பாலானவர்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டுள்ளனர். அவர் ஒவ்வொருவர் உள்ளத்திலும் தனி இடம் பிடித்துள்ளார். கிறிஸ்து பிறப்புக்கு 600 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் புத்தர் வாழ்ந்த அதே காலத்தில் இஸ்ரேல் நாட்டில் ஏசாயா என்னும் தீர்க்கதரிசியும் வாழ்ந்தார். அவர் கடவுளிடம் பெற்ற வார்த்தைகளை தீர்க்கதரிசனமாக எழுதி வைத்துள்ளார்.  இதோ கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள் என்றும், அவருக்கு இயேசு என்று பெயரிட வேண்டும் என்றும் கூறப்பட்டது. அதுபோல கன்னி மரியாள் வயிற்றில் இயேசு பிறந்தார். மனிதன் பிறப்பதும், வாழ்வதும், ஒரே தரம் இறப்பதுமே அவனுக்கு நியமிக்கப்பட்டுள்ளது. ஆனால் இயேசு பிறந்தும், வாழ்ந்தும், மரித்தும், உயிர்த்தும் இருக்கிறார். இது எப்படி சாத்தியம்? என்றால், ஏசாயா தீர்க்கதரிசி கூறுகையில், மரணத்தை ஜெயமாக விழுங்குவார் என்றார். தீர்க்கதரிசனப்படியே பிறந்த இயேசு தனது 34வது வயதில் இறந்தும், மூன்றாம் நாள் உயிர்த்தும் இருக்கிறார். உயிர்த்தெழுந்த பின் அவர் கூறுகையில், நான் மரித்தேன், ஆனாலும் இதோ சதாகாலங்களிலும் உயிரோடு இருக்கிறேன், என்றும், உலகத்தின் முடிவுபரியந்தமும் சதா காலங்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றும் கூறுகிறார்.

மரியாளைப் பற்றி புனிதர்கள்: மனத்திலே மரியாளை நினையுங்கள், இதயத்திலே இயேசு வளர்வார் என வழிகாட்டினார் புனிதர் ஒருவர். மரியாள் வழியாக நாம் எல்லாவற்றையும் அடைய வேண்டும் என்பது இறைவனின் திருவும் எனப்பகர்ந்தார் புனித பெர்னார்து. அவள் வழியாகவே அனைத்து அருளையும்மண்ணுலகம் அடைகிறது, என்றார் புனித அம்புரோசியார். அன்னை மேரி அருளின் வாயக்காலாக, அனைவருக்கும் அன்னையாக, துயர் துடைக்கும் ஆறுதலாக விளங்குகிறாள். மானிடர் விண்ணகம் ஏகிட இறைவன் தந்த தனிப்பெரும் ஏணியாக அமைந்துள்ளாள்.

இயேசுவைப் பெற்ற இதயதெய்வம்: கி.மு., 16ம் ஆண்டில், பாலஸ்தீன நாட்டிலுள்ள நாசரேத்தில், யோவாக்கீம், அன்னாள் ஆகியோர் வசித்தனர். இந்த புண்ணியர்க்கு பிறந்தவளே மரியாள். மரியாள் என்றால் கடலின் விண்மீன் அல்லது பயணிகளுக்கு வழிகாட்டி. ஆம்...அவள் உலகத்தை மீட்க ஒரு தெய்வக்குழந்தையைத் தந்து, பாவங்களில் இருந்து மீள வழிகாட்டியவள். அவளுக்கு 15 வயது நடக்கும் போது, தாவீது அரச குலத்தில் பிறந்த, ஏழையான சூசைக்கு மண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாள். அக்கால வழக்கப்படி ஒவ்வொரு பெண்ணும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயம். ஆனால், மரியாளோ தன்னையும், தன் கன்னிமையையும் கடவுளுக்கே காணிக்கையாக்கி இருந்தாள். ஆயினும், நாட்டுச் சட்டப்படி முறைப்படி திருமணம் செய்து கொள்ளத்தான் வேண்டியிருந்தது. அப்பொழுது ஒரு நாள் திடீரென ஒரு பேரொளி. அதன் பின்னும் காட்சி, கடவுளின் தூதர் அவளுக்குத் தோன்றி, அருள் நிறைந்தவளே வாழ்க! ஆண்டவர் உம்முடனே, என்றார். இவ்வாழ்த்தை மரியாளால் புரிந்து கொள்ள முடியவில்லை. வானதூதர் அவளைப் பார்த்து, மரியே, அஞ்சாதீர்.. இதோ உமது வயிற்றில் கருத்தரித்து ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் மேன்மை மிக்கவராயிருப்பார். உன்னதரின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தையான தாவீதின் அரியணையை கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குலத்தின் மீது என்றென்றும் அரசாள்வார். அவரது ஆட்சிக்கு முடிவே இராது என்றார். மரியாள் தூதரிடம்,  இது எப்படி சாத்தியம்? நானோ கணவனை அறியேனே என்றார். அதற்கு வானதூதர், பரிசுத்த ஆவி உம்மீது வருவார். உன்னதரின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலின் பிறக்கும் திருக்குழந்தை கடவுளுடைய மகன் எனப்படும். இதோ! உம் உறவினளான எலிசபெத்தும் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறாள். மலடி எனப்படும். அவளுக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில் கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை, என்றார். மரியாளோ, இதோ, ஆண்டவருடைய அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும், என்றாள். அத்தருணமே கடவுள் மகன் இயேசு கன்னி மரியாளின் மகனானார். (லூக், 1:26-38) மரியாள் கடவுளின் தாயானாள். மனிதராகிய நாம் அனைவரும் இயேசுவில் இறைமக்களாகும் பேறு பெற்றோம். மரியாள் நம் தாயாகும் பேறும் பெற்றோம். மரியாளுக்குப் பேறுகாலம் நெருங்கிய பொழுது அந்நாட்டு அரசன், ஒவ்வொருவரும் தங்கள் பிறந்த ஊருக்குச் சென்று குடிக்கணக்கு (மக்கள் தொகை கணக்கு) கொடுக்க வேண்டுமென்று ஆணையிட்டான். சூசை பெத்லகேமைச் சேர்ந்தவர். ஆதலால் அங்கு மரியாளுடன் சென்றாள். அங்கு வீடு கிடைக்காமல் மாடுகள் அடையும் குடிலில் அவர்கள் தங்கியிருந்தனர். அங்கே இயேசுவை மரியாள் பெற்றெடுத்தாள்.

இயேசுவின் வரலாறை எழுதியவர்கள்: இயேசுவின் வரலாற்றை நறுக்கென அவருடைய சீடர் நால்வர் எழுதியுள்ளனர். அந்நூலுக்கு நற்செய்தி என்று பெயர். மத்தேயு, மாற்கு, லூக்காசு, அருளப்பர் ஆகிய நால்வரும் நற்செய்தியைத் தனித்தனியே எழுதியுள்ளனர்.  நற்செய்தி நூல் பைபிளின் ஒரு சிறப்பான பகுதி தான். அது நம் ஒவ்வொருவருக்காகவும் எழுதப்பட்டது. இயேசு கிறிஸ்து தாம் யார் என்பதைப் படிப்படியாக, ஆணித்தரமாக எடுத்தியம்பியுள்ளார். அவர் தலைவர், ஆசிரியர், குரு, இறைவாக்கினார். இறைவனால் அனுப்பப்பட்டவர், மேசியா, இறைமகன், இறைவனே அதாவது கடவுளே அவர். நானே உலகின் ஒளி, என்னைப் பின்செல்பவன் இருளில் நடவான், உயிரின் ஒளியைக் கொண்டிருப்பான், (அரு.8:12). நானே வழியும் உண்மையும் உயிரும் என் வழியாயன்றி எவனும் தந்தையிடம் வருவதில்லை, (அரு.14:6) கடவுள் உங்கள் தந்தையாயிருப்பின் எனக்கு அன்பு செய்வீர்கள்; ஏனென்றால் நான் கடவுளிடமிருந்து புறப்பட்டு வந்துள்ளேன், (அரு 8:42) என்கிறார் இயேசு.

மண்ணில் வந்த நிலவு: கிறிஸ்துமஸ் என்ற சொல்லுக்கு கூடி மகிழ்ந்து கிறிஸ்துவை கொண்டாடுவது என பொருள். பாலகனாய் பிறந்த உலக மீட்பரை குழந்தை உருவில் கண்குளிர காண்பது தான் கிறிஸ்துமஸ், கொண்டாடுவதன் மகிமையாகும். உலக ஆரம்பத்தில் படைக்கப்பட்ட ஆதிமனிதர்களான ஆதாம், ஏவாள் கீழ்படியாமை என்னும் பாவம் செய்து இறைவனின் அன்பான அரவணைப்பையும், பாசமான பராமரிப்பையும் இழந்து மேன்மையான வாழ்வு நிலையிலிருந்து வெளியே தள்ளப்பட்டனர். பின்னர் அவர்கள் மீது கருணை கண் நோக்கிய கடவுள், அவர்கள் முதல் கொண்டு உலக மக்கள் அனைவரும் சுமந்த பாவங்களை நீக்கி மீட்பு அளிக்க தன் மகனை இவ்வுலகிற்கு அனுப்ப வாக்களித்தார். அவ்வாறு வாக்களிக்கப்பட்ட இறைமகன் இவ்வுலகில் குழந்தையாக பிறந்தார். அந்த இறைக்குழந்தையின் பிறப்பு நிகழ்ச்சி தான் கிறிஸ்துமஸ்.

இந்த விழா கொண்டாட்டத்தின் பின்னணியில் பலருக்கும், தெரியாத வியப்பான சில நிஜங்கள் இருக்கின்றன. கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படும் நாளான டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்து பிறக்கவில்லை. அவர் அந்தக்கால யூதேயா நாட்டிலுள்ள பெத்லேகம் என்ற சிறிய நகரில் பிறந்தார். ரோமானிய அறுவடை கடவுளான சேட்ரனஸ் என்பவரை மகிமைப்படுத்தும் மதசார்பற்ற பண்டைய ரோமானிய திருவிழாவுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் விழா ஆரம்ப காலங்களில் கொண்டாடப்பட்டது. கிறிஸ்து பிறப்பிற்கு பின் ஏறக்குறைய மூன்றாம் நூற்றாண்டில், காண்ஸ்டன்டைன் என்ற ரோமப் பேரரசன் ஆட்சியின் போது கிறிஸ்துமஸ் கொண்டாட் டம் உருவானது. கிறிஸ்து பிறக்க போகும் சமயத்தில் மக்கள் தொகை கணக்கு கொடுக்க, கிறிஸ்துவின் பெற்றோர் அவர்களின் முன்னோர் ஊரான பெத்லேகம் வந்தனர். அவர்கள் தங்கள் ஊருக்குள் இடம் ஏதும் கிடைக்காததால் ஊருக்கு வெளியில் மலையில், பனி இரவில் ஆடு மாடுகள் தங்கும் குகை ஒன்றில் தங்கினர். அங்கு இயேசு குழந்தையாக பிறந்தார். கடவுள் எளிய மானிட குழந்தையாக பிறந்த செய்தி முதலில் மலைப்பகுதியில் அந்த பனி இரவில் இளைப்பாறிக் கொண்டிருந்த இடையர்களுக்கு வான தூதர் மூலம் அறிவிக்கப்பட்டு அவர்கள் வந்து கண்ணார அவரைக் கண்டனர். இதை லூக் 2:1-20ல் விவிலியம் கூறுகிறது. எனவே பனிக்காலத்துடன் இணைந்த விழாவாக, டிசம்பர் மாத இறுதியில் கொண்டாடப்படுவது வழக்கமாயிற்று.

அடுத்ததாக பிறந்த இறைக்குழந்தையை தரிசிக்கும் பொருட்டு, மூன்று ஞானிகள் கீழ்திசையிலிருந்து பெத்லேகமுக்கு வருகை புரிந்தனர். அவர்கள் நீண்டகாலமாக உலக மீட்பர் பிறக்கப் போவதை அறிந்து காத்திருந்தனர். அந்த மூவரும் வெவ்வேறு இடத்திலிருந்து புறப்பட்டாலும், அவர்களுக்கு வானில் விண்மீன் வழிகாட்டிச் சென்றது. அவர்களுக்குள் அதற்கு முன்பு வரை அறிமுகம் இல்லாதிருந்தும், ஆச்சரியமாக அந்த மூவரும் ஓரிடத்தில் சந்தித்து, பின் ஒன்றாக பயணித்தனர். இறுதியில் உலக மீட்பரை குழந்தை உருவில் கண்டு, தாங்கள் கொண்டு வந்த காணிக்கைகளான பொன், தூபம், வெள்ளைப்போளம் (உயர்ந்த வாசனைத் திரவியம்) ஆகியவற்றை வழங்கி, வணங்கிச் சென்றனர். வருகைபுரிந்த ஞானிகளின் பெயர்கள் கஸ்பர், பல்தஸார், மெல்கியோர் என கிறிஸ்து பிறந்து ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கு பிறகு குறிப்பிடப்பட்டுள்ளது. முதலாவது காணிக்கையாக அளிக்கப்பட்ட பொன் ராஜரீகத்தையும், ஆளுகையையும் குறிக்கிறது. பிறந்த குழந்தை ஓர் அரசர் என்பதற்கு அடையாளமாக பொன் காணிக்கை தரப்பட்டது. இரண்டாவது காணிக்கையாக அளிக்கப்பட்ட தூபம் பிறந்த குழந்தை, இறைவன் என்பதற்கு அடையாளமாக தரப்பட்டது. தூபம் ஜெபத்தின் அடையாளம். மூன்றாவதாக அளிக்கப்பட்ட வெள்ளைப்போளம்  விண்ணுக்கு அரசனான இறைவன், மனிதர் நிலைக்கு தன்னை தாழ்த்தி மனிதனாக பிறந்ததற்கு அடையாளமாக அமைகிறது. விண்ணில் இருந்து மண்ணுக்கு வந்த நிலவை கிறிஸ்துமஸ் நன்னாளில் வணங்கி மகிழ்வோம்.

-ஆ.ஆல்பர்ட் உபகாரசாமி

அருள்பாலிக்கும் அருளானந்தர்

போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பனில் 1647, மார்ச் 1ல் பிறந்தவர் அருளானந்தர். இயற் பெயர் ஜான். 1662 டிசம்பர் 17ல், இயேசுசபை நவதுறவியர் இல்லத்தில் சேர்ந்த இவர்,1673 ல் கோவா வந்தார். பின், தமிழ்நாட்டிற்கு வந்து தமிழ் கற்ற அருளானந்தர், காவி உடையுடன் மக்களுக்கு சேவை செய்ய துவங்கினார். ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களுக்கு சென்று, ஏழை மக்களுக்கு கல்வி, மருத்துவ உதவி செய்து வந்தார். ஒருசமயம் ராமநாதபுரத்தை ஆண்ட மன்னரின் கீழ் சிற்றரசர் ஒருவர் இருந்தார். அவர் நோயால் அவதிபட்டார். அவரை அருளானந்தர் குணப்படுத்தினார். மகிழ்ச்சியடைந்த அவரும் திருமறையில் சேரவிரும்பினார். சிற்றரசருக்கோ மூன்று மனைவிகள். திருமறை சட்டப்படி ஒரு மனைவியே இருக்க வேண்டும் என்பதால், முதல் மனைவியை ஏற்றுக் கொண்டு, மற்றவர்களை பிரிந்தார். பாதிக்கப்பட்ட ஒரு மனைவி, மன்னருக்கு உறவினர் என்பதால் , அவரிடம் இதுபற்றி முறையிட்டார். ஆத்திரமடைந்த மன்னர், அருளானந்தரைக் கொல்ல உத்தரவிட்டார். அதன்படி கைது செய்யப்பட்ட அவர், திருவாடானை அருகே ஓரியூரில் 1693 பிப்ரவரி நான்காம் தேதி கொல்லப்பட்டார். அந்த இடம் (ஓரியூர் திடல்) செந்நிறமானது .

காடாக இருந்த அப்பகுதியானது இன்று அவரது பெயரில் எழில் மிகு ஆலயமாக காட்சியளிக்கிறது. அவருக்கு புனிதர் பட்டம் தரப்பட்டது. அருளானந்தர் கொல்லப்பட்டது புதன்கிழமை என்பதால், அன்றையதினம் ஏராளமானோர் ஆலயம் வந்து அந்தப் புனிதரை ஜெபித்து செல்கின்றனர். ஓரியூர் திடல் பகுதியில் ஒரு அடி ஆழத்தில் தோண்டி பார்த்தாலும் செந்நிறமாக காட்சியளிக்கும். இங்குள்ள ஆலயத்திலுள்ள ஒரு தொட்டியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அருளானந்தரை வழிபட வருவோர் ,இம் மண்ணை உடல் முழுவதும் பூசிக் கொள்கிறார்கள். இப்படி செய்தால் தீராத வியாதிகள் தீர்வதாக நம்புகின்றனர். சிவகங்கை மறைமாவட்டத்தின் பங்காக ஓரியூர் ஆலயம் விளங்குகிறது. அருளானந்தர் பெயரில் மேல்நிலைப்பள்ளி, மருத்துவமனை செயல்படுகிறது. ஆண்டுதோறும் மூன்று விழாக்கள் நடக்கிறது.அருளானந்தருக்கு பிப்., 4ம் தேதி ஒரு விழாவும், புனிதர் பட்டம் கொடுத்த ஜூன் 22ல் மற்றொரு விழாவும் , செப்டம்பர் எட்டாம் தேதி மாதா ஆலய விழாவும் நடக்கிறது. இங்கு வந்து பிள்ளை வரம் பெற்றவர் தென்னங்கன்றை காணிக்கையாக செலுத்துவர். மதுரையிலிந்து 118 கி.மீ., ராமநாதபுரத்திலிருந்து 73 கி.மீ., சிவகங்கையிலிருந்து 70 கி.மீ.,, திருவாடானையில் இருந்து 18 கி.மீ., தூரத்தில் ஓரியூர் உள்ளது. திருவாடானையிலிருந்து பஸ் உண்டு.

வழிகாட்டியான நட்சத்திரம்

கிறிஸ்துமசை ஒட்டி வீடுகளில் நட்சத்திரங்கள் தொங்கவிடுவது வழக்கம். கிறிஸ்து இயேசு பிறப்புக்கு 700 ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேல் நாட்டில் வாழ்ந்த ஏசாயா தீர்க்கதரிசி கூறுகையில், கடவுள் வானத்தில் ஒரு அடையாளத்தை கொடுப்பார். கன்னிகை கர்ப்பவதியாகி குமாரனை பெறுவாள் என்றார். அதுபோலவே, பெத்லகேமில் இயேசு பிறந்த நேரம், கிழக்கில் இதுவரை வானில் தோன்றியிராத வித்தியாசமான நட்சத்திரத்தை கண்ட, தூர தேசத்து ஞானிகள் மூவர், இயேசுவை காண வந்தனர். அந்த நட்சத்திரம் இயேசு பிறந்த இடம் வரை மூவருக்கும் வழிகாட்டியது. இதனால் இயேசு பிறப்பின் சின்னமாக நட்சத்திரத்தை வீடுகளில் தொங்க விடுகிறார்கள்.

கிறிஸ்துமஸ் விளக்கம்

ஆசியாவின் மையப்பகுதியிலுள்ள சிறிய நாடான இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில்,  பெத்லகேம் என்னுமிடத்தில் இயேசு பிறந்தார். அவர் பிறந்தது பற்றிய விபரம், கி.பி.,154ல் போப் ஜூலியசால் முதன்முதல் அறிவிக்கப்பட்டது. மாஸ் என்றால் ஆராதனை, எனவே கிறிஸ்து+மாஸ் கிறிஸ்துவின் ஆராதனையாக மாறியது. இதை எக்ஸ்மாஸ் என்றும் சொல்வர். எக்ஸ்  என்பது கிரேக்க சொல். இங்கிலாந்தில் பழங்காலத்தில் டிசம்பர் 25ம் தேதியை ஆண்டின் முதல் நாளாக கொண்டாடினர். பிரெஞ்சு மொழியில் கிறிஸ்துமஸை நோயஸ் என்கின்றனர்.பிறந்த இடத்தில் சர்ச் இயேசு கிறிஸ்து ஜெருசலேம் நகரில் பெத்லகேம் என்ற இடத்தில் மாட்டுத் தொழுவில் பிறந்தார். இந்த இடத்தில் கடந்த 1982ல் ஒரு ஆலயம் கட்டப்பட்டது. இதைசர்ச் ஆப் நேட்டிவிட்டி என அழைப்பர். இதைக்கட்ட 65 கோடி ரூபாய் செலவிட்டனர். எட்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. முழுச்செலவையும் 49 பேர் நன்கொடையாக பகிர்ந்தளித்தனர். கிறிஸ்துவின் மீது அன்பு கொண்டவர்கள் வாழ்வில் ஒரு முறையாவது ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொண்டு இந்த சர்ச்சை காண வேண்டுமென துடிக்கின்றனர்.

எக்ஸ்மாஸ் ஆனது எப்படி?

கிறிஸ்துமஸ் டிசம்பர் 25ல் நடத்தப்படும் என போப் ஜூலியஸ் அறிவித்தார். கிறிஸ்து+மாஸ் என்ற சொல்லே கிறிஸ்துமஸ் ஆனது. இதற்கு கிறிஸ்துவின் ஆராதனை எனப்பொருள். எக்ஸ்மாஸ் என்று எழுதினாலும், கிறிஸ்துமஸ் என்றே கூறவேண்டும். எக்ஸ் என்பது கிரேக்கச் சொல். பிரெஞ்சு மொழியில் கிறிஸ்துமசை நோயஸ் என்கின்றனர். இங்கிலாந்தில் பழங்காலத்தில் டிச.,25ம் தேதியை, ஆண்டின் முதல் நாளாக்கி, கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ளனர்.

முதல் கிறிஸ்துமஸ் குடில்: இயேசு கிறிஸ்து பிறந்ததை சித்தரிக்கும் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கும் பழக்கம் இங்கிலாந்தில் கி.பி.1722ல் புனித பிரான்சிஸ் அறிமுகப்படுத்தினார்.

கிறிஸ்துமஸ் தாத்தா: கிறிஸ்துமஸ் வந்தாலே சாண்டா கிளாஸ் எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தாவை மறப்பதில்லை. கி.பி.4ம் நூற்றாண்டில் பின்லாந்து நாட்டில் வசித்த பெரும்பணக்காரர் பிஷப் செயின்ட் நிக்கோலசை, சாண்டா கிளாஸ் தாத்தாவாக கருதுகின்றனர்.

முதல் வாழ்த்து அட்டை: இங்கிலாந்தில் 1843ல் கார்ஸ்லே என்பவர் முதன்முதலில் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை தயாரித்து, தன் நண்பர் ஹென்றி ஹோலோவுக்கு அனுப்பினார். தொடர்ந்து இங்கிலாந்து ராஜ குடும்பத்தினர் மற்றவர்களுக்கும் அனுப்ப துவங்கினர். அமெரிக்காவில், ஆயிரம் கோடி ரூபாய் வரை கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைக்காக செலவழிக்கின்றனர்.

முதல் கிறிஸ்துமஸ் மரம்: இங்கிலாந்தில் கி.பி.1841ல், அல்பெர்டினால் என்ற அரசர், தனது வின்ட்சர் கோட்டையில் முதன் முதலில் கிறிஸ்துமஸ் மரத்தை நட்டார். ஜெர்மனி, ஆஸ்திரியா நாடுகளில் மர இலைகள், மலர்களை வைத்து அலங்கரிக்கும் வழக்கம் இருந்தது.

பெத்லகேமை தெரிந்து கொள்வோமா!

இயேசு கிறிஸ்து பிறந்த இடம் பெத்லகேம். இது பாலஸ்தீன மேற்குக் கரை பகுதியில் உள்ளது. ஜெசலேமிலிருந்து 8 கி.மீ. தொலையில் அமைந்துள்ள இந்நகரில் 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். பெத்லகேம் என்பது எபிரேயப் பெயர். அரபியில் அதன் பொருள் புலால் வீடு. எபிரேயத்தில் அப்ப வீடு. பாலஸ்தீன மக்களின் கலாச்சார மற்றும் சுற்றுலா மையமாகவும் இந்நகர் உள்ளது. இயேசு பிறந்த இடத்தில் சர்ச் ஆப்நேட்டிவிட்டி என்ற புகழ் மிக்க தேவாலயம் உள்ளது. கிறிஸ்துமஸ் அன்று, குழந்தை இயேசுவை முன்வைத்து சிறப்பு திருப்பலி நடக்கும். உலகம் முழுவதும் இருந்து மக்கள் இதில் பங்கேற்பார்கள்.

இயேசு பற்றிய இனிய இலக்கியம்

பெத்லகேம் குறவஞ்சி: திருநெல்வேலியில் பிறந்து, தஞ்சை சரபோஜி மன்னரின் அவைப்புலவராக விளங்கிய வேதநாயகம் சாஸ்திரியார்(1774-1864) பெத்லகேம் குறவஞ்சி என்னும் சிற்றிலக்கியம் படைத்து பெத்லகேமுக்குத் தமிழிலக்கியத்தில் அழியா இடம் பெற்று தந்துள்ளார். இது நாடகப் பாங்கான கதை அமைப்புடையது. கட்டியங்காரனாக திருமுழுக்கு யோவான், இயேசு உலா வரப்போகிறார் என்னும் செய்தியை அறிவிக்கிறார். இயேசுவின் பெருமைகளை எடுத்தோதுகிறார். உலா வரும் இயேசுவை வரவேற்க ஜெருசலேம் நகரம் விழாக் கோலம் பூணுகிறது. மக்களும், வானதூதர்களும், திருச்சபை மகளிரும் திரளாகக் கூடிவருகின்றனர். இயேசு மாட்சிமையோடு உலா வருகின்றார். அவரைப் பார்க்கும் அனைவரும் வியப்பில் ஆழ்கின்றனர். இலைக் கொத்துகளை அசைத்து ஓசன்னா என்று கூறி ஆர்ப்பரிக்கின்றனர். சீயோன் மகள் என்னும் தேவ மோகினி (திருச்சபையின் உருவகம்) இயேசுவைக் கண்டதும் காதல் கொள்கிறாள். அழகும் இறைபக்தியும் கொண்ட அவள், அவரை நினைத்து ஏங்கித் தவிக்கிறாள். இவ்வேளையில் (விசுவாச) குறத்தி (சிங்கி) வருகிறாள். இடுப்பில் கூடையும் சிங்கார நடையுமாக வந்த குறத்தியை அழைத்து, தலைவி குறிசொல்லக் கேட்கின்றாள். குறத்தியும் தன் நாட்டு வளத்தையும் நகர வளத்தையும் மலை வளத்தையும் எடுத்துக் கூறும் போது விவிலியச் செய்திகளையும், இயேசுவின் பெருமையையும் அவர் புரிந்த அருஞ்செயல்களையும், கிறிஸ்தவர்களின் மேன்மையையும் இணைத்துக் கூறுகிறாள்.
இயேசுவின் வியத்தகு பெருமைகளைக் குறத்தி கூறக் கேட்ட தலைவியை நாணம் மேற்கொள்ளவே அவள் முகம் சிவந்து விழி தாழ்கிறாள். தலைவியின் கையைப் பார்த்துக் குறிசொல்லும் குறத்தி பெத்லகேம் நாதர் (பெத்தலை நாதர் = இயேசு) உன்னை மணம் கொள்ள நாளை வருவார்; சேலை வரும்; மாலை வரும்; சிலுவை முத்திரை மோதிரமும் வரும் என்று குறி கூறுகிறாள். தலைவியும் ஆனந்த வெள்ளத்தில் மூழ்குகிறாள். நன்றிநிறை உள்ளத்தோடு சிங்கிக்குப் பொன்னும் பொருளும் பரிசாக அளிக்கின்றாள். இதைத் தொடர்ந்து (ஞான) சிங்கன் பெத்லகேம் நாதராம் இயேசுவைப் பாடிக்கொண்டே வருகிறான். அந்த இயேசுவிடம் ஒரு ஞான வலை இருக்கிறது, ஆசையெனும் வலையில் சிக்கித்தவிக்கும் மனிதரை மீட்டெடுப்பது அந்த ஞான வலையே என்று பாடுகிறான். பின் அவன் சிங்கியைச் சந்திக்கிறான். இத்தனை காலமாய் என்னிடம் கேளாமல் எங்கே நீ சென்றனை சிங்கி? என்று அவன் கேட்க, சிங்கி பதிலாக, பெத்லகேம் நகர் சீயோன் குமாரிக்குப் பக்திக்குறி சொல்ல சென்றேன், என்றாள்.

கதைத் தலைவியாம் சீயோன் மகளிடமிருந்து பெற்ற அணிகளையெல்லாம் சிங்காரமாக உடலில் சாத்தியிருந்த குறத்தியிடம் சிங்கன் அவை எங்கிருந்து வந்தன என்று வினவுகிறான். அதற்குச் சிங்கியும் நயமாகப் பதிலளிக்கிறாள். பின்னர் சிங்கனும் சிங்கியும் கடவுளைப் போற்றுகின்றனர். இறுதி வாழ்த்தோடு பெத்லகேம் குறவஞ்சி நிறைவு பெறுகிறது.

இறை தூதர்கள் துதித்த திரு இருதயங்களின் ஆலயம்

சிவகங்கை மாவட்டம் சருகணியில் 260 ஆண்டுகள் பழமை வாய்ந்த, வரலாற்று சிறப்புமிக்கது, திரு இருதயங்களின் ஆலயம். ஆலய முகப்பில் இரு இருதயங்கள் பிரதானமாகவும், தேவ மாதாக்கள் ஆசீர்வதிப்பது போலவும் கலை நயத்துடன் அமைந்துள்ளது. உள்ளே மூன்றுபுறமும் நின்று வழிபடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தல வரலாறு: கடந்த 1730 ல், இத்தாலியில் இருந்து, ஊழியம் செய்வதற்காக ஜேம்ஸ் தாமஸ் டி ரோசி அடிகள் இங்கு வந்தார். ஏழுகிழமை, 52 வாரங்களுக்கு புதுமைகள் என்ற பெயரில் வழிபாட்டு முறைகளும் அடக்கம். எளிதான வழிபாட்டு முறைகளை எழுதினார். இடையர் சருகணி என்ற காட்டுப்பகுதியில் குடிசையில் தங்கி, சிறு ஆலயம் கட்டி ஊழியம் செய்தார். சில ஆண்டுகளில்  மாறணி என்ற இடத்திற்கு மாறினார். (அன்றைய அரசு ஆவணங்களில் மாறணி சருகணி என்றே உள்ளது) கடந்த 1751 ல் துவங்கிய  ஆலயப்பணி 1753 ல் முடிந்தது. இது, 18 ம் நூற்றாண்டில்  போர்த்துக்கீசிய முறைப்படி கட்டப்பட்ட ஆலயங்களில் மிகப்பெரியது.

மருதுவை காப்பாற்றியவர்: மன்னர் சசிவர்ணத்தேவர், ரோசி அடிகளுடன் நட்பாக இருந்தார். அதனால் மருது பாண்டியரும் அவருடன் நட்பு பாராட்டினர். பெரிய மருதுவை வெள்ளையர்கள் தேடியபோது, அடிகளிடம் தஞ்சம் அடைந்தார். அப்போது வெள்ளையர்கள், அடிகளின் வீட்டுக்கு வந்தனர். அடிகள் அமரும் மரப்பெட்டிக்குள் மருது ஓளிந்திருந்தார். மருதுவை பற்றி அவர்கள் விசாரிக்க, பொய் சொல்ல விரும்பாத அடிகள் எனக்கு கீழே உள்ளான் என்றார். அடிகள் கிண்டல் செய்வதாக கருதிய அவர்கள் வெளியேறி விட்டனர்.இதற்கு நன்றிக்கடனாக சர்வ காணியாக (சருகணி) அந்த பகுதியை தானம் தருவதாக மருது கூறினார். 1801 ல், மன்னர் கவுரி வல்லப பெரிய உடைய தேவர்,  நாட்டின் நான்கு எல்லை குறித்து செப்பு  பட்டயம் கொடுத்தார். இதில், ஆலயத்தின் ஆராதனைகளுக்காக நிதி ஒதுக்கியது பற்றி கூறப்பட்டுள்ளது.

சவேரியார் தீர்த்தம்: சின்ன சவேரியார் என்று ரோசி அடிகளை பாராட்டுவார்கள். அவரது உடலில் தோய்க்கப்பட்ட நீரை, சவேரியார் தீர்த்தமாக கொடுத்து வந்தனர். இன்றளவும் இது வழக்கத்தில் உள்ளது. அவருக்கு பின் வந்த புனித லெவேயின் கல்லறையில் பூஜித்தும் தீர்த்தம் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் நோய், கஷ்டங்கள் தீரும் என்பது நம்பிக்கை. இதை வயல்களில் தெளித்து, விவசாய பணிகளை துவக்குகின்றனர். சவேரியார், லெவேயை இப்பகுதியினர் இறை தூதர்களாக போற்றுகின்றனர். ஓரியூர் அருளானந்தருக்கு புனிதர் பட்டம் கிடைக்க உழைத்தவர் லெவே. இவரையும் புனிதராகவே பக்தர்கள் போற்றுகின்றனர்.

விழாக்கள்: மார்ச் 21 ல் லெவே நினைவு நாள், டிச. 3 ல் சவேரியார் திருநாள், ஏப்ரல், மேயில் புனித வெள்ளி முடிந்த மறுவாரம், பாஸ்கா

திருவிழா: ஜூனில் திரு இருதய நாள் விழா.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar