பதிவு செய்த நாள்
24
டிச
2011
03:12
ஒரே ஒரு மனிதன்(ஆதாம்), வழியாய் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது. ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனை தீர்ப்பாய் அமைந்தது. அதுபோல் ஒரே ஒருவரின்(இயேசு கிறிஸ்து) ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலை தீர்ப்பாய் அமைந்தது. ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானது போல், ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவராகினர்.கிறிஸ்தவர்கள், அர்ப்பணஉணர்வோடு தங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக நிலைநிறுத்திக்கொள்ள வேண்டுமென்பதற்காக, திருச்சபை, ஏழு திருவருட் சாதனங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளது. ஞானஸ்நானம், பாவசங்கீர்த்தனம், புதுநன்மை, உறுதிபூசுதல், திருமணம் அல்லது குருத்துவம், நோயில் பூசுதலை முழுமையாக நிறைவேற்றுபவர்களே கிறிஸ்தவர்களாக கருதப்படுவர். கூட்டுக்குடும்பமாக இருந்தபோது கடைபிடிக்கப்பட்ட நெறிமுறைகள் அனைத்தும் காற்றோடு கலந்து மறைந்து விட்டன. ஒவ்வொரு நாளும், இரவு விளக்கு ஏற்றியவுடன் அனைவரும் முழந்தாளிட்டு ஜெபம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
ஜெபித்ததும் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமும், பெற்றோர் பெரியவர்களிடமும் முழந்தாளிட்டு, நெற்றியில் சிலுவை அடையாளம் பெற்றுக்கொண்ட பின் தான், படிப்பது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபடுவர்.இதனால் குடும்பங்களில் அமைதியும், சமாதானமும், நட்புறவும் நீடித்திருந்தது. ஞானஸ்நானத்தின் போது உடனிருக்கும் ஞானப்பெற்றோருக்கு தனி மரியாதை இருந்தது. தாய், தந்தையரைவிட தங்கள் ஞானப்பெற்றோரிடம் ஆலோசனை பெறுவதில் குழந்தைகள் ஆர்வம் காட்டினர். ஆனால், இன்று எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. ஞாயிறு திருப்பலிகூட கடமைக்காக என்ற மனப்பான்மை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாறவேண்டும். பெற்றோர்கள் தங்கள் பழைய வாழ்க்கையை மீட்டெடுக்க வேண்டும். குழந்தைகளை ஆன்மிகப் பாதையில் அழைத்து செல்ல ஞானபெற்றோர் முன்வரவேண்டும். இறைவேண்டலில் நிலைத்திருப்பதுதான் கிறிஸ்தவர்களின் அடையாளம் என்பதை குழந்தைகளிடம் வலியுறுத்தவேண்டும். புனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளை குழந்தைகள் தெரிந்து கொண்டு அவர்களை தங்கள் வாழ்க்கையின் வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டு முன்னேறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். திருத்தலங்களை தரிசித்து அங்குள்ள பாதுகாவலரின் ஆசீரை நிறைவாக பெற்றுக்கொள்ள வேண்டும். அனைத்து கிறிஸ்தவர் களின் குடும்பங்களிலும் அன்பும், அமைதியும், சமாதானமும் என்றென்றும் நிலைத்திருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக.