பதிவு செய்த நாள்
26
டிச
2011
10:12
புதிய ஆண்டில் அன்புக்கு அடிமையாவோம் : "அன்பு.... ""இந்த வார்த்தையை உச்சரிக்கும் போதே இவ்வளவு மென்மையாய் இருக்கிறதென்றால்... அனுபவித்து பார்த்தால், இன்னும் சுகமாய் இருக்குமே, என்று நினைக்கிறோம். ஆனால், நடைமுறை வாழ்க்கை நிகழ்வுகள், நம்மை அன்பு வழியிலிருந்து வேறு பாதைக்கு திருப்பி விட்டு விடுகின்றன. அன்பைப் பற்றி இயேசுநாதர் சொல்லிய வசனங்களைக் கேட்ட பிறகு, இனி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த புத்தாண்டு காலத்தில் நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.
* நான் உங்களில் அன்பாயிருக்கிறது போல, நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே எனது கற்பனையாய் இருக்கிறது.
* நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருந்தால், உங்களை என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள்.
* என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன், என் பிதாவிடத்தில் அன்பாய் இருப்பான். நானும், அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளி படுத்துவேன்.
* ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தை கைக்கொள்ளுவான். அவனில் என் பிதா அன்பாயிருப்பார். நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடு வாசம் பண்ணுவோம்.
* நான் உங்களுக்கு சொல்கிறேன். உங்கள் சத்ருக்களை (எதிரிகள்) சிநேகியுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களை ஆசிர்வதியுங்கள், உங்களைப் பகைக்கின்றவர்களுக்கு நன்மை செய்யுங்கள். உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், துன்பப்படுகிறவர்களுக்காகவும் ஜெபம் செய்யுங்கள். அவர்களுக்கு கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு பலன் மிகுதியாயிருக்கும். உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாய் இருப்பீர்கள். அவர் (கடவுள்) நன்றியறியாதவர்களுக்கும், துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே! ஆண்டவரின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து, இந்த உலகம் அன்பு உலகமாக அமைய, புத்தாண்டு காலத்தில் ஜெபிப்போமே!