பதிவு செய்த நாள்
06
பிப்
2018
01:02
மதுரை மீனாட்சி கோயிலில் ஏற்கனவே மின்னல் தாக்கியதும், மழை நீர் புகுந்து சேதமடைந்ததும் நமக்கு தெரிந்த விஷயம். இந்த இரண்டு சம்பவங்களுக்கு பின்பும் கோயில் நிர்வாகம் கோயில் பாதுகாப்பு பணியில் கோட்டை விட்டதால் வீர வசந்தராயர் மண்டபம் இன்று தீக்கு இரையாகி உள்ளது. பெரிய கட்டடங்கள், கோயில்கள், புராதன இடங்களில் பேரிடர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பேரிடர் மேலாண்மையில் அசெம்பிளி பாய்ன்ட என்பது குறிப்பிட்ட அம்சம். பேரிடர் காலத்தில் அந்த கட்டட பகுதியில் உள்ள மக்கள் வந்து பாதுகாப்பாக கூடும் இடம் தான்
அசெம்பிளி பாய்ன்ட்.
மதுரை பொறியாளர் இ.ராமகிருஷ்ணன் கூறியது: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் இருக்கும் வடக்காடி, மேற்காடி வீதிகள் சந்திக்கும் இடத்தில் திருக்கல்யாண மேடை உள்ளது. இந்த இரண்டு ஆடி வீதிகள் தான் கோயிலுக்குள் இருக்கும் பெரிய திறந்த வெளி. ஆனால், உள் சன்னதியில் இருந்து வெளி வரும் வாசல்கள் எப்போதும் மூடி தான் கிடக்கிறது. எனவே, பேரிடர் காலத்தில் அசெம்பிளி பாய்ன்ட் அமைக்க வடக்காடி வீதி சரியான இடமாக இருக்கும்.திருக்கல்யாணம் உள்ளிட்ட விழாக்கள் நடக்கும் போது ஒருவேளை ஏதாவது பேரிடர் ஏற்பட்டால் கோயிலுக்குள் வெளியே சுமார் 500 - 1000 பேர் வரை நிற்பதற்கு ஒரு அசெம்பளி பாயின்ட் அவசியம். கோயிலின் ஈசான பகுதியான வைத்யநாத அய்யர் சிலை இருக்கும் மாநகராட்சி பூங்கா, அசெம்பிளி பகுதியாக இருக்கும்.மேலும், இப்பகுதியில் உள்ள கழிவறைகளை ராணி மங்கம்மாள் அரண்மனை அருகே உள்ள பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதிக்கு மாற்றலாம் (ஈசான பகுதியில் கழிவறை இருக்க கூடாது என்பது வாஸ்து). கோயிலுக்கு வெளியே தெற்கில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலக பகுதியிலும் அசெம்பிளி பாயின்ட் அமைக்கலாம். மீண்டும் இது போல கோயிலில் பேரிடர்கள் ஏற்படாமல் இருக்க, கோயில் நிர்வாகம் பேரிடர் மேலாண்மை திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும்.
எமர்ஜன்சி எக்ஸிட் மேப் : மீனாட்சி கோயிலில் பக்தர்கள் நடமாட்டம் இல்லாத இரவு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் உயிர் தேசம் தவிர்க்கப்பட்டுள்ளது. என் அருள் உங்களுக்கு என்றும் உண்டு என்பதை மீனாட்சி அன்னை காட்டி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். திடீரென பேரிடர் ஏற்பட்டால் நாங்கள் வரும் வரை கோயில் ஊழியர்களே, சமாளிக்கும் வகையில் அவர்களுக்கு பேரிடர் பயற்சி அளிக்க வேண்டும். மீனாட்சி கோயிலில் பல வழிகள் இருக்கிறது.இதில், குறிப்பிட்ட வழிகளை தேர்வு செய்து அவசர வழியாக மாற்ற வேண்டும். கோயிலில் முக்கிய இடங்களில் அவசர வழியை அடையாளம் காட்டும் எமர்ஜன்சி எக்ஸிட் மேப் ஒன்றையும் வைக்க வேண்டும். பக்தர்களை சோதனை செய்யும் போலீசார் கோயில் கடைக்காரர்களையும் கடுமையாக சோதித்து உள்ளே அனுமதிக்க வேண்டும். - ஏ.ராஜ்குமார், ஒருங்கிணைப்பாளர், ரெட் கிராஸ் பேரிடர் மீட்புக் குழு,
மதுரை.
கோயில் காக்கும் கோணங்கள் : மீனாட்சி கோயில் கடைக்காரர்கள் கோயிலில் நாங்களும் ஒரு அங்கம் என்று நினைத்து எளிதில் தீ பிடிக்கும் பொருட்கள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். தீ விபத்து மட்டுமல்ல திருக்கல்யாண பக்தர்கள் கூட்டம், சுவாமி வீதி உலா வாண வேடிக்கை, மின்சார விளக்குகள் என ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாக கவனிக்க வேண்டும். இதில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அதை உடனே சரி செய்ய தனிக் குழு அமைக்கப்பட வேண்டும். அதே போல் கோயில் காளை, யானைகள் கட்டுக்குள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். இது போல கோயிலை காக்க பல கோணங்களில் சிந்தித்து செயல்பட வேண்டும்.-ஆர்.நடராஜன், தமிழ் ஆர்வலர், மதுரை.
கோயில் கண்காணிப்பு குழு : மீனாட்சி கோயிலில் முக்கிய பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். ஐந்து பேர் கொண்ட குழுவை உருவாக்கி அவர்கள் தினமும் கோயில் அலுவலகம், பசுமடம், யானை கட்டி வைத்திருக்கும் மண்டபம் மற்றும் கோயிலின் வெளிப்புறத்தில் இருக்கும் புது மண்டபம், சித்திரை வீதி, காந்தி பூங்கா உள்ளிட்ட சில பகுதிகளையும் கண்காணிக்க வேண்டும். இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் தீ விபத்தை மட்டுமல்ல கோயிலில் ஏற்படும் சிறு பாதிப்பையும் கண்டறிந்து சரி செய்ய உதவும். - டாக்டர் என்.என்.கண்ணப்பன், மதுரை.