பதிவு செய்த நாள்
06
பிப்
2018
01:02
சென்னை: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் புதிய தக்காராக, மாலை முரசு நிர்வாக இயக்குனர், கண்ணன் ஆதித்தன் நியமிக்கப்பட்டுள்ளார். முருகனின் அறுபடை வீடுகளில், இரண்டாவது படை வீடு திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவில். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, அதிக வருமானம் வரும் கோவில்களில் இதுவும் ஒன்று. அதனால், இக்கோவிலின் தக்காரை, தமிழக அரசு தான் நியமித்து வருகிறது.ஆறு ஆண்டுகளாக, அ.தி.மு.க.,வை சேர்ந்த கோட்டை மணிகண்டன், தக்காராக பதவி வகித்தார். சமீப காலமாக, அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. கடந்த ஆண்டு இறுதியில், கோவிலின் வெளிப்பிரகாரம் இடிந்து விழுந்ததில், பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில், கோவிலுக்கு புதிய தக்கார் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அறுபடை வீடுகளில், இரண்டாவது படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலின், புதிய தக்காராக சி.பா.ஆதித்தனாரின் மூத்த மகனான ராமச்சந்திர ஆதித்தனின் மகனும், மாலை முரசு பத்திரிகையின் நிர்வாக இயக்குனருமான கண்ணன் ஆதித்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.