பதிவு செய்த நாள்
08
பிப்
2018
12:02
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கள்ளிக்குடியில் பி.பி., 16 ம் நுாற்றாண்டை சேர்ந்த பாண்டியர்கள் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் பெருமாள் கோயிலுக்கு குளம் தானம் வழங்கிய செய்தி காணப்படுகிறது. திருவாடானை அருகே கள்ளக்குடி சீனிவாச பெருமாள் கோயிலில், 16 ம் நுாற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டு பிடிக்கப்பட்டது. இக்கோயிலின் நுழைவு வாயில் சுவரில் இந்த கல்வெட்டு காணப்படுகிறது. இது குறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, ஒருங்கிணைப்பாளர் மோ. விமல்ராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.வே.ராஜகுரு தெரிவித்ததாவது:
அரும் பொற் கூற்றத்து கள்ளிக்குடியில் இருக்கும் தீக்கொல்லர் சொக்கர் ஆண்டார், என்பவர் பெருமாள் கோயில் எதிரில் உள்ள குளத்தினை தானமாக வெட்டிக் கொடுத்துள்ளார். தீக்கொல்லர் என்பது இரும்புக் கொல்லராக இருக்கலாம். திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீசீவல்லத்தேவர் எனும் பாண்டிய மன்னரின் 27 வது ஆட்சியாண்டில் சார்வரி வருடம் பங்குனி முதல் தேதியன்று தானம் வழங்கப்பட்டுள்ளது.
பசுவை கொன்ற பாவம்: இந்த தானத்திற்கு யாராவது அழிவு செய்தால், அவர்கள் கங்கை,சேதுக்கரையிலும் காராம் பசுவை கொன்ற பாவத்தினை அடைவார்கள். திருக்கோயில்களில் திருட்டுப்பாவம் அடைவார்கள், என கல்வெட்டு செய்தி சொல்கிறது.விஜய நகர, நாயக்கர் கால கல்வெட்டு அமைப்பில் உள்ளது. திருப்புல்லாணி அருகில் உள்ள சேதுக்கரைக்கு கங்கை கரைக்கு இணையாக குறிப்பிடப்பட்டுள்ளது.
திருவாடானை பாண்டியர்: மன்னரின் 27 வது ஆட்சியாண்டில் தானம் வழங்கப்பட்டுள்ளது. 27 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்துள்ளார், என அறியமுடிகிறது. தென்காசியை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த ஸ்ரீவல்லபபாண்டியன், 9 ஆண்டுகள் தான் ஆட்சி செய்துள்ளார். இந்த கல்வெட்டு அவரை பற்றி குறிப்பிடவில்லைஎன்பதை அறியலாம். சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட சில கல்வெட்டுக்களிலும் பாண்டிய மன்னர் பெயர், ஆட்சியாண்டில்குழப்பம் உள்ளது. தென்காசியைப்போல் திருவாடானை, அல்லது காளையார் கோவில் பகுதியை தலைமையிடமாக கொண்டு பாண்டியர்கள் ஆட்சி செய்திருக்கலாம், என ஊகிக்க முடிகிறது, என அவர் தெரிவித்தார்.