பதிவு செய்த நாள்
09
பிப்
2018
02:02
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை சுற்று வட்டாரத்தில், பண்டிகை சீசன் துவங்கியதால் மண் குதிரை செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது. நாமகிரிப்பேட்டை அடுத்த, ஆர்.புதுப்பட்டி துலுக்க சூடாமணியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த, 6ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, சுற்று வட்டாரத்தில் அம்மன் கோவில்களில் விழா தொடங்கிவிடும். மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில், சீராப்பள்ளி, வடுகம், மலையாம்பட்டி, காட்டூர், வெள்ளக்கல்பட்டி என, கடைசியாக நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவில் விழாவுடன் முடிவடையும். பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறினால், விழாக்களில் மண் பொம்மைகளை வாங்கி வைப்பர். குதிரை, மனிதர்கள், நாய் உள்ளிட்ட பொம்மைகளை வாங்கி, கோவிலில் வைத்து நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம். இதற்காக பானை, சட்டி செய்யும் தொழிலாளர்கள் தற்போது, குதிரை செய்யும் பணியை தொடங்கியுள்ளனர். கடந்த வாரத்தில், 100க்கும் மேற்பட்ட குதிரைகள் செய்யப்பட்டு, சேலம் மாரியம்மன் கோவில் பண்டிகைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.