பதிவு செய்த நாள்
23
பிப்
2018
12:02
ஊத்துக்கோட்டை : பூச்சிஅத்திப்பேடு கிராமத்தில் உள்ள அங்காள ஈஸ்வரி அம்மன் கோவிலில், வரும், 25ம் தேதி, தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெற உள்ளது. எல்லாபுரம் ஒன்றியம், பூச்சிஅத்திப்பேடு கிராமத்தில் உள்ளது அங்காள ஈஸ்வரி அம்மன் கோவில். பக்தர்கள் பங்களிப்புடன், கட்டப்பட்ட இக்கோவிலில், வரும், 25ம் தேதி, நான்காம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி, நேற்று மதியம், 12:00 மணிக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இன்று, காலை, 7:00 மணிக்கு, அம்மனுக்கு பாலாபிஷேகம், இரவு, 7:00 மணிக்கு காப்பு கட்டி, கொடியேற்றும் நிகழ்ச்சி, இரவு, 9:00 மணிக்கு உற்சவர் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நாளை, காலை, 9:00 மணிக்கு, சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் தீபாராதனையும், இரவு, 7:00 மணிக்கு, அம்மன் வீதியுலா நடைபெறும். விழாவின் முக்கிய நாளான வரும், 25ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு, தீமிதி திருவிழா நடைபெறும். இதில், திரளான பக்தர்கள் காப்பு கட்டி தீமிதிப்பர். வரும், 26ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, திருவிளக்கு பூஜை நடைபெறும்.