நம் பெண்கள் ஒரு கம்மல் வாங்கினால் கூட போதும்! “பார்த்தாயா இந்த டிசைன் எவ்வளவு சூப்பரா இருக்குன்னு” பக்கத்து வீட்டு பெண்ணிடம் போய் பெருமையடிப்பர். “உம்.. என் புருஷனும் இருக்கிறாரே! கையாலாகாத மனுஷன், இதற்கெல்லாம் கொடுப்பினை வேணும்,” என்று சலித்துக் கொள்வார் பக்கத்து வீட்டுப் பெண். வேலையில் இருந்து களைப்போடு வீட்டுக்கு வரும் கணவரிடம், இதை மனதில் வைத்துக் கொண்டு சண்டை போடுவார். நபிகள் நாயகம் பெண்கள் அதிக ஆசைப்படுவதை ஆதரிக்கவில்லை.
இதை தன் மகளிடமே அவர் சொல்லியிருக்கிறார். ஒருமுறை நாயகத்தின் மகள் பாத்திமா, தன் கழுத்தில் கிடந்த நகையை கழற்றி, இதை என் கணவர் வாங்கித் தந்தார் என இன்னொரு பெண்ணிடம் சொல்லி கொண்டிருந்தார். அந்நேரத்தில் நாயகம் அங்கு வரவே, “பாத்திமா! முகம்மதுவுடைய மகளின் கையில் நெருப்புச் சங்கிலி இருக்கிறது,” என சொல்லி விட்டு, தான் வந்த விஷயம் என்ன என்பதைச் சொல்லாமலே சென்று விட்டார். உடனே பாத்திமா, கடைக்குப் போய் நகையை விற்றார். அதில் கிடைத்த பணத்தில் ஒரு அடிமையை வாங்கி, அவரை விடுதலை செய்து விட்டார். இதை கேள்விப்பட்ட நாயகம், “பாத்திமாவை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்,” என்றார். ஆம்.. ஆசை பெண்களை நரகத்தில் தள்ளிவிடும்.