பதிவு செய்த நாள்
09
மார்
2018
11:03
சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில், மாசித்திருவிழா கோலாகலமாக நடந்தது. சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி, மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவை முன்னிட்டு, நேற்று, தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள், வடம் பிடித்து, தேரை இழுத்துச்சென்றனர். சிறப்பு அலங்காரத்தில், மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஈச்சமரம் பிள்ளையார் கோவில், பழனி ஆண்டவர் கோவில், ரெட்டியார் தெரு, திருவள்ளுவர் சாலை வழியாக, தேர், கோவிலை வந்தடைந்தது. தேருக்கு முன், காட்டேரி வேடமணிந்த ஒருவர், ஆவேசமாக ஆடி வந்தார். அவர், கையில் வைத்திருந்த முறத்தால், ஆண், பெண், குழந்தைகள் ஆகியோரின் தலையில் அடித்து, ஆசி வழங்கினார். காட்டேரியிடம் அடி வாங்கினால், பில்லி சூனியம், கெட்ட காற்று, கருப்பு, பேய், பிசாசு விலகி, திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளதால், வழிநெடுகிலும் ஏராளமானோர் காத்திருந்து, காட்டேரியிடம் அடி வாங்கினர்.
* இடைப்பாடி, கவுண்டம்பட்டி சின்னமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, சரபங்கா ஆற்றில் அலகு குத்திக்கொண்டு, கவுண்டம்பட்டி முழுவதும், சுவாமி ஊர்வலம் நடந்தது. ஏராளமான பெண்கள், மாவிளக்கு தட்டுடன் ஊர்வலம் வந்தனர். அப்போது, தட்டில் உள்ள தேங்காய்களை எடுத்து, பக்தர்களின் தலையில், பூசாரி உடைத்தார். தாவாந்தெரு, காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, தீ மிதி விழா நடந்தது. ஆகாய விமான அலகு, நூலில் எலுமிச்சை அலகு குத்தி வந்தும், பெண்கள், தங்கள் குழந்தைகளுடனும் தீ மிதித்தனர். வெள்ளாண்டிவலசில் நடந்த காளியம்மன் கோவில் திருவிழாவில், ஏராளமானோர் தீ மிதித்தனர்.
* சங்ககிரி, தேவூர் அருகே, கொங்கனூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, கல்வடங்கம் காவிரி ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள், அம்மனுக்கு அலங்காரம் செய்து, வீதி உலா சென்றனர். தொடர்ந்து, அலகு குத்தி, அக்னி சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், பொங்கல் வைத்து, கிடாவெட்டி, சுவாமியை வழிபட்டனர்.