பதிவு செய்த நாள்
09
மார்
2018
11:03
திருவள்ளூர் : திருவள்ளூர், பெருமாள் செட்டி தெருவில் உள்ள ஓம் ஆனந்த சாய்ராம் தியானக்கூடத்தில், சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை, மதியம் நடந்தது. மாலையில், ஆனந்த சாய்ராம் பல்லக்கில் பவனி வந்தார். ஒண்டிக்குப்பம், சாய்பாபா கோவிலில், காலை, மதியம், மாலை மற்றும் இரவு, என, நான்கு நேரங்களில், ஆரத்தி நடந்தது.இதே போல், தேவி மீனாட்சி நகரில் உள்ள சாய்பாபா கோவிலில், சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடந்தது. நெய்வேலி கிராமத்தில் உள்ள ராகவேந்திரருக்கு, பஞ்சாமிர்த அபிஷேகமும், மதியம் மகா மங்கள ஆரத்தியும், இரவு ஸ்வஸ்தி பூஜையும் நடந்தது.
திருத்தணி: திருத்தணி ஒன்றியம், கே.ஜி. கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில், நேற்று, மூலவருக்கு பாலாபிஷேக உற்சவ விழா நடந்தது. விழாவையொட்டி, அதிகாலை, 5:00 மணிக்கு, சுப்ரபாதம், காலை, 5:30 மணிக்கு, காகட ஆரத்தி நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு பாலாபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் சாய்பாபாவிற்கு பாலாபிஷேகம் செய்தனர். பகல், 12:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலையில் சந்திய ஆரத்தி மற்றும் சேஜ் ஆரத்தி நடந்தது. இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள, பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் வழிபட்டனர். அதே போல், நகரி பகுதியில் அமைந்துள்ள சாய் பாபா கோவிலிலும், சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன.