பதிவு செய்த நாள்
21
மார்
2018
01:03
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், கோவில் நிலங்கள் குறித்து, அசையா சொத்துக்கள் கண்டறிதல் குழு ஆய்வில், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட்டுள்ளன; இப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட வாய்ப்புள்ளது. கோவில் நிலங்கள், கட்டடங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, கோவில் செயல் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஓய்வு பெற்ற வருவாய்த்துறை, சர்வே துறை அதிகாரிகளை கொண்ட அசையா சொத்துக்கள் கண்டறிதல் குழு, அமைக்க அறநிலையத்துறை உத்தரவிட்டது.
கிராம ஆவணங்கள், கோவில் ஆவணங்கள், நேரடி கள ஆய்வு அடிப்படையில், ஒவ்வொரு கோவிலின் நிலத்தை கண்டறிந்து, உதவி ஆணையர், இணை ஆணையர் மற்றும் கமிஷனருக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.. திருப்பூர் மாவட்டத்தில், 148 பட்டியல் இன கோவில்களும், 1,141 கோவில்களும் உள்ளன. இவற்றுக்கு சொந்தமாக, பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டும், பெயர் மாற்றம் செய்யப்பட்டும், அடையாளம் காணப்படாமலும் உள்ளன. கோர்ட் உத்தரவு காரணமாக, தற்போது கோவில் நிலங்களின் உண்மை நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கிராமத்தையும் சிறப்பு குழுவினர் ஆய்வு செய்து, பரப்பளவு, நிலத்தின் வகை, பயன்பாடு, தற்போதைய நிலை குறித்து பட்டியல் தயாரித்து வருகின்றனர்.திருப்பூரில், விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவப் பெருமாள் கோவில், நல்லுார் விஸ்வேஸ்வரசுவாமி கோவில், சிவன்மலை சுப்ரமணிய சுவாமி உள்ளிட்ட உப கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், அல்லாளபுரம், பல்லடம், தாராபுரம், காங்கயம், வெள்ளக்கோவில், உடுமலை பகுதியில் உள்ள, பட்டியல் இன கோவில் நிலங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், இதுவரை, 7 ஆயிரம் ஏக்கருக்கு மேல், கோவில்களுக்கு சொந்தமான நிலம் கண்டறியப்பட்டுள்ளது. சிறப்பு குழுவினர் தொடர்ந்து நிலங்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதால், மேலும், பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கண்டறியப்படும் வாய்ப்பு உள்ளது.
அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள கோவில்களுக்கு, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. ஆய்வு செய்யும் போது, மேலும் ஏராளமான நிலங்கள் உள்ளது தெரிய வந்துள்ளது. எனவே, இதற்கான காலக்கெடுவை நீடித்து, தொடர்ந்து ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறோம். பட்டியல் இன கோவில்களின் நிலங்கள் கண்டறியும் பணி ஓரளவு நிறைவு பெற்றுள்ளது. பட்டியல் இனத்தில் சேராத, 1,141 கோவில்களுக்கும், அதிகளவு நிலம் உள்ளதால், அப்பணிகளும் நடந்து வருகிறது. வருவாய்த்துறை அலுவலர்களை கொண்ட குழு, பழைய ஆவணங்கள், கிராம ஆவணங்கள் அடிப்படையில், கிராமம், சர்வே எண் அடிப்படையில் கோவில் நிலங்கள் பட்டியல் தொடர்ந்து சேகரித்து வருகின்றனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.