பதிவு செய்த நாள்
21
மார்
2018
01:03
ஈரோடு: பெரிய மாரியம்மன் வகையறா கோவில்கள், குண்டம் திருவிழா, பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்கள், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் தீ மிதித்தல், சின்ன மாரியம்மன் கோவில் தேரோட்டம், பெரிய மாரியம்மன் கோவிலில் கம்பம் நீர் ஊற்றுதல் என, ஒவ்வொரு கோவில்களுக்கும், தனித்தனியான சிறப்பு உள்ளது. ஆனால், மூன்று கோவில்களின் விழா ஒரே நாளில் தொடங்கி, ஒரே நாளில் நிறைவு பெறுவது, தொன்று தொட்டு நடப்பது அதிலும் சிறப்பு. நேற்றிரவு பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. இதையொட்டி காலையில் மூலவர் பெரியமாரியம்மனுக்கு, பால், இளநீர், தேன், மஞ்சள், பன்னீர், சந்தனம் என, 16 வகையான திரவிய அபிஷேகம் நடந்தது. இரவு, 9:00 மணிக்கு, பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்த பல்வேறு மலர்களை, கோவில் பூசாரிகள் மூலவருக்கு சாற்றினர். அதை தொடர்ந்து சின்ன மாரியம்மன் கோவிலிலும், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலிலும், பூச்சொறிதல் நடந்தது. இதில் அதிகாரிகள், கோவில் ஊழியர்கள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.